உலகில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட் டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதென வளை குடா நாடுகளின் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை க்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புடன் செயற்படுவதெனவும் குவைத்தில் நடைபெற்ற 30 ஆவது உச்சி மாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
குவைத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நிறைவின் பின்னர் நடந்த செய்தியாளர் மாநாட்டில் குவைத் பிரதி பிரதமரும் வெளிநாட்டு அமைச்சருமான ஷேக் கலாநிதி மொகமட் சபா அல்-சலீம் அல்-சபா தெரிவித்தார்.
வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் அப்துல் ரஹ்மான் அல்-அட்டியாவும் கலந்துகொண்டு கூட்டாக நடத்திய இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அவர்கள் மேலும் தகவல் தருகையில் :-
உச்சி மாநாட்டின் பெறுபேறுகள் அனைத்து எதிர்பார்ப்புகளையும் விஞ்சி நிறைவேறியிருப்பதாகத் தெரிவித்தனர். குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கிடையில் கூட்டு மின்சார இணைப்பை ஆரம்பிக்க முடிந்தமை பாரிய வெற்றியாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் இந்த நாடுகளுக்கிடையில் ரயில்வே போக்குவரத்தை ஆரம்பிக்கவும், பொதுவான நாணயமொன்றை உருவாக்குவதற்கான பொறிமுறையைத் தயாரிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
குவைத், சவூதி அரேபியா, கட்டார், பஹ்ரெய்ன், துபாய், ஓமான் ஆகிய ஆறு நாடுகளின் கூட்டமைப்பான ஜீசிசி உச்சி மாநாடு குவைத் மன்னர் சபா அல்-அஹ்மட் அல்-சபீர் அல்-சபாவின் தலைமையில் பயான் மாளிகையில் நடைபெற்றது.