இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இதுவரையில் இடம்பெறாதளவு வன்முறைகள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறப் போவதாக எச்சரித்துள்ள ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, வடக்கில் சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் இதுவரையில் அரசினால் ஏற்படுத்தப்படவில்லையெனவும் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். கரு ஜயசூரிய மேலும் கூறியதாவதுதேர்தல் பிரசாரங்களை நீதியாகவும் நேர்மையாகவும் முன்னெடுத்துச் செல்ல ஊடகங்களின் பங்களிப்பு அவசியமானது. நாம் ஊடகங்களை மதித்தே செயற்படுகின்றோம். எம்மீது அரசு சேறு பூசும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது. இதற்காக அரச ஊடகங்களை பாவித்து மக்களை ஏமாற்றி வருகின்றது.
வியாழக்கிழமை தேர்தல் பிரசாரம் தொடர்பில் 20/20 போட்டி தொடர்கின்றது. இந்நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறிய செயற்பாடுகள் இடம்பெறலாம். ஜே.வி.பி. உறுப்பினர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வரும் நிலையில் எம் மீதும் ஆரம்பித்துள்ளது. கிழக்கிலுள்ள எமது கட்சி உறுப்பினரான சசிதரன் வீட்டின் மீது குண்டு வீசப்பட்டுள்ளதுடன் கம்புறுப்பிட்டியிலுள்ள எமது அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. அரசு அரசியலமைப்பை மீறி செயற்படுவதனாலேயே இவ்வாறான தேர்தல் சட்டவிதிகளை மீறும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. 17 ஆவது அரசியல் திருத்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் சுயாதீன தேர்தல், பொலிஸ் உட்பட ஏனைய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் தேர்தல் சுயாதீனமாக இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் தேர்தல் வன்முறைகள் மற்றும் சட்டவிதிகளை மீறும் வகையிலான செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம்.
இன்று அலரி மாளிகை அன்னதான மடமாக மாறியுள்ளது. இது தேர்தல் சட்டவிதிகளை மீறிய செயற்பாடாகும். அவர்கள் சொந்த பணத்தைக் கொண்டு இதனை செய்தால் பிரச்சினையில்லை. அரச இடம் மற்றும் நிதியைக் கொண்டு மேற்கொள்வதால் எதிர்க்கின்றோம். பொலிஸ் அதிகாரிகள் நீதியாகவும் நேர்மையாகவும் செயற்படுகின்றனர். எனினும் அதிலுள்ள சிலர் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர். எனவே சகல தரப்பினரும் நடுநிலையுடன் செயற்படவேண்டுமெனக் கோருகின்றோம்.
தேர்தல் வரலாற்றில் இத்தேர்தலிலேயே அதிகளவு வன்முறைகள் இடம்பெறப் போகின்றன. இதனை அரசே தற்போது ஆரம்பித்துள்ளது. அரச செலவுடனேயே பதாகைகள் அமைக்கப்படுவதுடன் நியமனங்களும் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் தேர்தல் காலப்பகுதியில் இடமாற்றம் மேற்கொள்ள வேண்டாமெனக் கோரிய நிலையில் வடமத்திய மாகாணத்தில் 205 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது.
அரச ஊடகங்களில் இரண்டில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களுக்கு அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊடகங்கள் எவ்வாறு நேர்மையாக செயற்படும்.தேர்தல் வடக்கில் சுயாதீனமாக இடம்பெற அதற்கான சூழல் ஏற்படுத்தப்படவில்லை. நாம் வடக்கில் பிரசாரம் முன்னெடுக்க அனுமதி பெற்றே செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக முகாம்களிலுள்ள மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க அவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு கோருகின்றோம்.
தற்போது முகாம்களில் எஞ்சியுள்ளவர்களில் 75 வீதமானவர்களுக்கு வீடுகள் உள்ளன. எனவே இவர்களை அடைத்து வைக்க வேண்டாமெனக் கோருகின்றேன். மக்கள் தமது விருப்புக்கேற்ப எந்த அழுத்தமுமின்றி சுயாதீனமாக வாக்களிக்கவும் எதிர்க்கட்சிகள் பிரச்சினையின்றி சுதந்திரமாக பிரசாரத்தை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் அரசுக்கு முக்கிய பங்குண்டு.