கொழும் பிலிருந்து யாழ். நகருக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கும் ஏ-9 பாதையூடாக பயணம் மேற்கொள்ளும் பொது மக்களின் வாகனங்கள் இன்று திங்கட்கிழமை முதல் எந்தவித பாதுகாப்பு அனுமதியும் பெறத்தேவை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் இருந்து கொழும்பு வரும் வாகனங்கள் எந்தவித பதிவுகளையோ அல்லது அது தொடர்பான நடைமுறைகளையோ மேற்கொள்ளாமல் பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் பஸில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அனுமதி (கிளியரன்ஸ்) பெறும் நடைமுறை கடந்த மாதம் முழுமையாக நீக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் ஏ 9 பாதையூடாக சுதந்திரமாகப் பயணம் மேற்கொண்டு வந்தனர். பொதுமக்கள் அரச போக்குவரத்து சேவையினூடாக இதுவரை காலம் சென்று வந்தனர். ஏ-9 பாதை ஊடாக சொகுசு போக்குவரத்து சேவையும் நடத்தப்பட்டு வந்தது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஏ-9 பாதையூடாக செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டு இருந்தது மதவாச்சி சோதனைச் சாவடியூடாக தனியார் வாகனங்களும் வவுனியா வரை செல்லலாம் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது ஏ9 பாதையூடாக தனியார் வாகனங்களிலேயே பொதுமக்கள் சென்று வரலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏ-9 பாதையூடாக இராணுவத்தினரின் தொடர் அணியுடனேயே இந்த பொதுமக்களின் வாகனங்களும் அழைத்துச் செல்லப்படவுள்ளன.