‘பொன்சேகாவின் பொறுப்பற்ற கூற்றுக்கு அரசே பதிலளிக்கும் நிலை’ – யாப்பா

anura-priya.jpgசரத் பொன்சேகா படை வீரர்கள் தொடர்பாக பொறுப்பற்ற கூற்றை கூறினாலும் அதற்கு பதில் கொடுக்க வேண்டிய நிலை அரசுக்கே ஏற்பட்டுள்ளது. எனவே, பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் உரிய பதில் கொடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அது தவறாக கூறப்பட்டவை என்று பொன்சேகா கூறினாலும் ஐ. நா. சபை இது தொடர்பில் அரசிடமே விளக்கம் கோரியுள்ளது. எனவே, தகுந்த ஆதாரங்களுடன் உரிய பதில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. அமைச்சர் யாப்பா இங்கு கருத்துத் தெரிவிக்கையில்;

ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் கூற்றில் நம்பகத்தன்மை இல்லை. ஏனெனில், ஒரே கூற்று தொடர்பாக மூன்று சந்தர்ப்பங்களில் முன்னுக்குப் பின் முரணான வெவ்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். நாட்டை காட்டிக்கொடுக்கும் வகையில் ஒன்றுக்கு ஒன்று முரணான சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு அரசாங்கம் பாராளுமன்ற அமர்வில் விளக்கம் கோரவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குச் சென்ற சமயம் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இதன் மூலம், இதன் பின்னணி என்னவென்பது தெளிவாக தெரிகின்றது.

குறுகிய அரசியல் இலாபத்துக்காக இதுபோன்ற கீழ் தரமான செயற்பாடுகளை செய்யவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை. அவ்வாறான செயலை அரசாங்கம் ஒருபோதும் செய்யப்போவ தில்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

பொன்சேகா சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியை சி. என். என். பி.பி.சி, தமிழ் நெட், இன்டசிட்டி எக்ஸ்பிரஸ் போன்ற சர்வதேச ஊடகங்கள் முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளன. இதனால், சர்வதேச நாடுகளில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பொன்சேகாவே பதில் கூறவேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தான் அவ்வாறு கூறவில்லை என்று பொன்சேகா இதுவரைக் கூறவில்லை. தான் கூறிய கருத்துக்கள் தவறாக கூறப்பட்டுள்ளது என்றே கூறியுள்ளார்.

அதே சமயம், இராணுவத் தளபதி பதவியிலிருந்து தான் விலகியமைக்கான காரணத்தை அவர் மூன்று ஊடகங் களில் ஒன்றுக் கொன்று முரணான விதங்களிலேயே கூறியுள்ளார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சரத் பொன்சேகாவின் ஒழுக்கம் தொடர்பாக அமைச்சர் இந்த மாநாட்டின்போது கேள்வி எழுப்பினார்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இருந்த பொன்சேகாவை அமெரிக்கா அழைத்தபோது இப்பொழுது நான் என்ன செய்வது என்று ஜே. வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் பொன்சேகா கேட்டார் என்று ரின்வின் கூட்டம் ஒன்றில் கூறியதை பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. ரில்வியின் அந்த கூற்றுக்கு பொன்சேகா எந்தவித மறுப்பையும் விடுக்கவில்லை. பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி என்ற பதவிலிருக்கும் ஒருவர் மூன்றாம் நபரிடம் இது தொடர்பில் கேட்க முடியும் என்றும். இதுவா பொன்சேகாவின் ஒழுக்கம் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *