யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஏப்ரல் முதல் ஓமந்தை வரை நீடிக்கப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் பி.பி. விஜேசேகர தெரிவித்தார்.தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான 10 கிலோ மீட்டர் நீளமான ரயில் பாதைகள் மீளமைக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதோடு ஓமந்தை ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 2 தசாப்தங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் ஓமந்தை வரை பயணிக்க உள்ளதாக பொது முகாமையாளர் பி.பி. விஜேசேகர கூறினார்.
400 மில்லியன் ரூபா செலவில் ரயில் பாதை புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ஓமந்தை ரயில் நிலையத்தை மீளமைக்கும் பணிகளை பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி பொறுப்பேற்று முன்னெடுத்து வருகிறார். மோதல் காரணமாக கொழும்பில் இருந்து வவுனியா வரையே ரயில் சேவைகள் இடம்பெற்றன. புலிகளின் பிடியில் இருந்து வட பகுதி முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரை சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.
30 வருடகாலம் நீடித்த மோதல்களின்போது வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள் என்பன புலிகளினால் நாசமாக்கப்பட்டதாகவும் ரயில் தண்டவாளங்கள் பங்கர் அமைப்பதற்காக புலிகளினால் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்தார். யாழ்தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரை ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதையடுத்து இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே திணைக்களம் துரிதமாக முன்னெடுத்து வருகிறது.