அவசர அலுவல்களின் நிமித்தம் கொழும்புக்கு வருபவர்கள் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்துகொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் மீண்டும் அறிவுறுத்தல்களை அனுப்புவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிமல் மெதிவக தெரிவித்தார்.
பதிவுநீக்கம் தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதிப் பொலிஸ் மா அதிபர், ஒரு மாதம் வரையிலான குறுகிய காலம் கொழும்பில் தங்கியிருப்பதற்குப் பொலிஸில் பதிய வேண்டுமென்ற நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாகத் திட்டவட்டமாகக் கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கு அமைய அவரின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
முன்பு, மலையக இளைஞர், யுவதிகள் கொழும்புக்கு வருவதற்குப் பொலிஸ் பதிவு நீக்கப்பட வேண்டுமென மலையகக் கட்சிகள் பசில் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. அதன் பின்னர், அவசர அலுவல்கள் காரணமாகவோ, உறவினர், நண்பர்களைப் பார்ப்பதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கொழும்பில் வந்து தங்குபவர்கள் பொலிஸில் பதிய வேண்டிய அவசியம் இல்லையென அரசாங்கம் அறிவித்தது.
ஆனால் சில பொலிஸ் நிலையங்களில் முறையான அறிவித்தல்கள் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறி பொலிஸ் பதிவு கோரப்பட்டதாகத் தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின. எனினும், இவை உண்மைக்குப் புறம்பான தகவல்கள் எனப் பொலிஸ் மா அதிபர் மெதிவக தெரிவித்தார்.