அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் திடீர் மறைவையடுத்து அவருக்குப் பதிலாக பாராளுமன்றத்தில் யார் தெரிவு செய்யப்படவுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பெ. சந்திரசேகரன் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டார்.
அவருக்கு அடுத்ததாக அப்போது ம.ம.மு. உறுப்பினராக இருந்த முன்னாள் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் அருள்சாமி அதிக விருப்பு வாக்குகள் பெற்றிருந்ததால் இலங்கைத் தேர்தல் சட்டத்தின் கீழ் காலியாகியுள்ள பாராளுமன்ற ஆசனத்துக்கு நியமிக்கப்படக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளார். இது தொடர்பாக அருள்சாமியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, பட்டியலில் தனது பெயரே முதலாவதாக உள்ளதாகவும் எனவே தேர்தல் ஆணையாளர் முறைப்படி வர்த்தமானி அறிவித்தல் விடுத்து தன்னை அழைப்பார் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இதேசமயம் ம.ம.மு. பொதுச் செயலாளர் விஜயகுமார் இது தொடர்பாக அவசரப்படத் தேவையில்லை என்றும் கட்சியின் செயற்குழு கூடி இது தொடர்பாக முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார். அருள்சாமி தற்போது ஜனாதிபதியின் இணைப்பாளராக கடமை யாற்றுவது குறிப்பிடத்தக்கது. மலையக மக்கள் முன்னணி வட்டாரங்களில் அடுத்த சில மாதங்களில் பாராளுமன்றம் தன் ஆயுள் காலத்தை இழக்கவிருப்பதால், அதுவரை அந்த ஆசனத்தை மறைந்த தலைவரை கெளரவிக்கும் வகையில் காலியாகவே விட்டுவிட வேண்டும் என்ற ஒரு அபிப்பிராயம் நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.