இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் இன்று துவங்குகிறது. இதற்காக இந்திய அணியினர் நேற்று முன்தினம் காலை மும்பையில் இருந்து புறப்பட்டு டாகா சென்றனர். இன்று நடக்கும் முதல் போட்டியில் பங்களாதேஷ், இலங்கை மோதுகின்றன. 5 ஆம் திகதி நடக்கும் போட்டியில் இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது. இறுதிப் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி நடக்கிறது. இத்தொடர் முடிந்த பின் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் சிட்டகாங் (ஜன. 17, 21) டாகாவில் ஜன. 24 – 28) நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.
கடந்த ஆண்டு அபாரமாக ஆடிய இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் “நம்பர் – 1” ஒரு நாள் அரங்கில். “நம்பர் – 2” இந்த ஆண்டு பங்களாதேஷில் நடக்கும் முத்தரப்பு தொடரையும் வெற்றிகரமாக துவக்க காத்திருக்கிறது. இம்முறை சச்சின் இல்லாதது பின்னடைவாக அமையலாம். ஆனாலும் ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, விராத் கோஹ்லி போன்ற இளம் வீரர்கள் கைகொடுக்கலாம். சேவாக், காம்பீர், தோனி, யுவராஜ் ஆகிய அனுபவ வீரர்களும் இருப்பதால் துடுப்பாட்டத்தில் கவலையில்லை. இஷாந்த் சர்மா நீக்கப்பட்ட நிலையில், ஸ்ரீசாந்த் சாதிக்க வேண்டும். களத் தடுப்பில் முன்னேற்றம் கண்டால், இந்திய அணி எளிதாக கோப்பை கைப்பற்றலாம்.
இலங்கை அணியை பொறுத்த வரை ஜயசூரிய, முரளிதரன், ஜயவர்தன, மலிங்க, பெர்னாண்டோ, மெண்டிஸ் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இல்லாமல் களமிறங்குகிறது. இதனால் சங்கக்கார, தில்ஷன் மீதான சுமை அதிகரித்துள்ளது. பங்களாதேஷ் சமீப காலமாக ஒரு நாள் போட்டிகளில் எழுச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு 73 சதவீத வெற்றி பெற்று அசத்தியுள்ளது. எனவே, சொந்த மண்ணில் சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மொர்டாசா இல்லாத நிலையில் கப்டன் பொறுப்பில் ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில் சாகிப் அல் ஹசன் உள்ளார்.
நேற்று முன்தினம் பங்களாதேஷ் தலைநகர் டாகா வந்த செவாக், இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி; கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். இது இந்த ஆண்டும் தொடரும் என நம்புகிறேன்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே மிகவும் முக்கியம். அப்போது தான் ரேங்கிங் பட்டியலில் “நம்பர் – 1” அல்லது “நம்பர் – 2” இடத்தை தக்க வைக்க முடியும். முன்னணி வீரர்கள் இல்லாததால் இலங்கை அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இம்முறை புதிதாக களமிறங்க உள்ள வீரர்களின் பலம் பற்றி தெரியாது. அவர்களுக்கு எதிராக பந்து வீசுவது அல்லது துடுப்பெடுத்தாடுவது கடினம். எனவே, தற்போதும் இலங்கை அணி சிறந்தது தான்.
இவர்களை சமாளிப்பது இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கும். இந்திய துணை கண்டத்து ஆடுகளங்கள் எல்லாம் பெரும்பாலும் ஒரே மாதிரியாக காணப்படும். இதன்படி பங்களாதேஷில் உள்ள ஆடுகளங்களும் துடுப்பாட்டத்துக்கு ஏற்றதாக இருக்கும். பனிப்பொழிவு பாதிப்பை ஏற்படுத்தலாம். இவ்வாறு செவாக் கூறினார்.