சரத் பொன்சேகாவின் குடும்ப ஆயுதக் கம்பனியின் ஊழல், மோசடிகள் – 48 மணி நேரத்தினுள் விவாதம் நடத்த தயார் : விமல் வீரவன்ச

vote.jpgசரத் பொன்சேகாவின் குடும்ப ஆயுதக் கம்பனியினால் புரியப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பாக எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தனியார் தொலைக்காட்சியொன்றில் விவாதம் நடத்த அரச தரப்பு தயாரெனவும்,  எதிர்க்கட்சி அதற்கு இணங்காவிடின் குறித்த ஆயுதக் கொள்வனவின்போது இடம்பெற்ற ஊழல் தொடர்பான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்படுமென்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்பி.யுமான விமல் வீரவன்ச நேற்று மீண்டும் சவால் விடுத்தார்.

மணமகனும் மணமகளும் சந்தித்துப் பேச்சு நடத்த இதுவொன்றும் மணமேடையல்ல.  விவாத மேடை.  இங்கு அரச தரப்பில் ஜனாதிபதி தான் விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை. அதற்கு நாம் யாரையும் நியமிப்போம். அதேபோல் எதிர்க்கட்சி சார்பாக பொன்சேகா தான் விவாதத்தில் பங்குபற்ற வேண்டுமென நாம் கோரவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதியாக இருந்தவேளை அவரது மருமகனின் பெயரில் ஆயுதக் கம்பனியொன்றை நடத்தி வந்தமை தொடர்பாக நாம் அறிந்திருந்தோம்.

இருப்பினும் தற்போது சரத் பொன்சேகாவின் ‘கிரீன் கார்ட்’ டிலுள்ள விலாசமும் அமெரிக்காவில் அவரது மருமகனின் பெயரில் இயங்கி வரும் ‘ஹைகோப்’ எனும் ஆயுத கம்பனியின் விலாசமும் ஒன்றாக இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கிரீன் கார்டில் உள்ளது போன்ற, கார்த்திஹேவா சரத் சந்திரலால் பொன்சேக்கா, 17545 கோல்ட் ட்ரைவ், ஹெட்மண்ட், ஓ.கே, 73012 என்ற விலாசத்திலும் ‘ஏ-055-090192’ என்ற க்ரீன் கார்ட் இலக்கத்திலுமே குறித்த ஆயுதக் கம்பனியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியென்றால் இதனை அவரது குடும்ப கம்பனியென்றுதானே கூறவேண்டுமென்றும் விமல் வீரவன்ச எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலகட்டத்தில் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு உட்பட்ட பெறுமதிமிக்க ஆயுதங்களை கொள்வனவு செய்தல் மற்றும் கேள்விப் பத்திரங்களை கோரும் அதிகாரம் ஆகியன பொன்சேகாவிடம் இருந்தன.  அதனை உபயோகித்தே அவர் ஊழல் மோசடிகளை கையாண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக் காலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விமல் வீரவன்ச எம்.பி, சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் ஆயுதக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாத மொன்றை நடத்த வேண்டுமென சவால் விடுத்திருந்தார்.

அதற்கு, அந்த விவாதத்தில் அரச தரப்பில் ஜனாதிபதி கலந்துகொள்ள வேண்டுமெனக் கோரி பொன்சேகாவின் ஊடகப் பேச்சாளர்களான அனுர குமார திஸாநாயக்கவும் மங்கள சமரவீரவும் கூட்டாக இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே விமல் வீரவன்ச எம்.பி. நேற்று மீண்டும் இந்த சவாலை விடுத்தார்.

’பொன்சேக்கா ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி. நீங்கள் இப்போது பெரிய பிள்ளை. (லொக்கு லமயெக்) இராணுவத்தில் தளபதியாகவிருந்த காலத்தில் செய்த சிறு பிள்ளைத் தனமான காரியங்களை கைவிட்டுவிட்டு இப்போது பொறுப்பாக நடத்துகொள்ளுங்கள்’ என்றும் வீரவன்ச எம்.பி. கூறினார்.

“நீங்கள் சுத்தமானவராக இருந்தால், பிழையற்றவர் என்றால், மதிப்புக் கொடுப்பவராகவிருந்தால் நீங்களே இந்த விவாதத்தில் நேரடியாகப் பங்குபற்றலாம். ஏனெனில் இது உங்கள் குடும்ப கம்பனி, ஊழல் குற்றங்கள் தொடர்பான சிறந்த அனுபவம் உங்களுக்கேயிருக்கிறது.

இருப்பினும் நீங்கள் விரும்பினால் உங்களுக்குப் பதிலாக வேறு யாரையும் விவாதத்தில் பங்குபற்ற வைக்கலாம். அதில் எமக்கு எந்த ஆட்சேபனையுமில்லை” எனவும் பொன்சேகாவுக்கு விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், மங்கள சமரவீர, சோமவன்ச அமரசிங்க ஆகியோர் வெள்ளையா கறுப்பாவென மக்களுக்கு நன்கு தெரியும்.  ஆனால் பொன்சேகா கறுப்பா வெள்ளையாவென்பது மக்களுக்கு இன்னும் தெரியாது. அவர் அரசியலுக்குள் வந்து 40 நாட்களே ஆகின்றன. இவர் 40 வருட அரசியல் அனுபவம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஊழல் மோசடிகளை சுமத்த முற்படுகிறார். பிறர் மீது ஊழல் மோசடிகளை சுமத்த எத்தனிப்பவர் முதலில் தான் சுத்தமாக இருக்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

தனது குடும்ப கம்பனியூடாக அவரால் முன்னெடுக்கப்பட்ட ஊழல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது எமது கடமை. உண்மையில் பொன்சேகா இலங்கையை மாத்திரமன்றி அமெரிக்காவையும் ஏமாற்றியிருக்கிறாரெனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்தன, ஜி. எல். பீரிஸ், ராஜித்த சேனாரத்ன, டளஸ் அழகப் பெரும, சுசில் பிரேம ஜயந்த் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *