குறுகிய அரசியல் இலாபத்துக்காக அரசாங்கம் ஒரு போதும் அவசர கால சட்டத்தை நீடிக்கமாட்டாது. அவ்வாறான தேவைகள் அரசுக்கு இல்லை என்று பிரதமரும், பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான ரத்னசிறி விக்ரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பயங்கரவாதம் வலுப்பெற வேண்டுமென விரும்புகின்றவர்கள் மட்டுமே அவசர கால சட்டத்தை எதிர்ப்பார்கள். உள்நாட்டு வெளிநாட்டு சதிகளின் சதிவேலைக்கு பதிலளிக்க அவசர கால சட்டம் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளதென அவர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்றுக் காலை கூடியபோது, அவசரகால சட்ட நீடிப்புக்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் தனது உரையில் மேலும் கூறியதாவது:-2005 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதிலும் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இறுதி அமர்வின் போதும் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஒருவர் பயணம் ஒன்றை ஆரம்பிப்பதை விட அதனை முடிப்பது தான் மிக முக்கியமானது. முடிவில் தான் பெறுபேறு தங்கியுள்ளது. எமது அரசாங்கம் அன்று அடிப்படை நோக்கம் ஒன்றை வைத்துத் தான் எமது பணிகளை ஆரம்பித்தது. அது தான் பயங்கரவாதத்திற்கு முற்றிப்புள்ளி வைத்து மக்களுக்கு மீண்டும் சமாதானத்தை பெற்றுக் கொடுப்பதாகும். இன்று அது நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டு மக்கள் தற்பொழுது நிம் மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்கின்றனர்.
வடக்கு, கிழக்கில் மாத்திரம் அல்ல தென்பகுதி மக்களும் சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர். ஏ-9 வீதி ஊடாக தடைகள் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் இந்த வீதி ஊடாக தற்பொழுது சென்று வருகின்றனர். மீனவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளன. தற்பொழுது அந்த மக்களின் வாழ்வாதாரம் சிறந்த முறையில் காணப்படுகின்றது.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தற்பொழுது மீளக் குடியமர்த்தப் பட்டுள்ளனர். புனர்வாழ்வும் புத்துணர்ச்சியும் நிறைந்த வருடமாக இந்த வருடம் உருவாகியுள்ளது. எமது நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தை நாம் இன்னும் முழுமையாக அடையவில்லை.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு அழுத்தங்கள் காணப்படுகின்றது. அவசர கால சட்டம் நீடிப்பானது நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற வெற்றிக்கு காரணமாகவும் அமைந்திருந்தது. குறுகிய அரசியல் இலாபத்துக்காக அரசாங்கம் ஒரு போதும் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தப்போவதுமில்லை. அதற்காக நீடிக்கவும் மாட்டோம். அவ்வாறான தேவைகள் எமக்கு இல்லை.
பாதுகாப்புப் படையினர் மீட்டெடுக்க ப்பட்ட பிரதேசங்களில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் மீட்டெடுத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆயுதம் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசங்களில் படையினர் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். 3 சதாப்தங்களுக்கு பின்னர் மக்களுக்கு விடிவு கிடைத்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
அவசரகாலச் சட்டம் 79 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து 18 வாக்குகள் அளிக்கப்பட்டன.
ஆளும்கட்சிக்கு ஆதரவாக 97 வாக்குகள் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் எதிர்த்து வாக்களித்தது. ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து 79 மேலதிக வாக்குகளால் மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.