ஜிஹாத், அல்பத்தாஹ், புலிகள், சங்கிலியன் படை. : யஹியா வாஸித்

Mosque_Bomb_Blast_Mar_2009புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் மட்டுமல்ல, புலிகள் சார்பான புத்தி ஜீவிகள் கூட இன்னும், இன்றும் முஸ்லீம்களை இரண்டாம் கண்கொண்டே பார்க்கின்றனர். அதிலும் கிழக்கில் முஸ்லீம்களையும், தமிழர்களையும் எவ்வாறு மோதவிடலாம் என்பதில் கண்ணும் கருத்துமாகவே உள்ளனர். அண்மையில் சகோதரர் பக்ஷீர் எழுதிய ஒரு கட்டுரையில் புலிகள் இறந்த பாறூக்குக்கு எவ்வாறு பட்டுக்குஞ்சம் கட்டி, பட்டுத்தாம்பரம் விரித்தனர் என எழுதியிருந்தார். யார் இந்த பாறூக், யார் அந்த மொகமட் ஹாசீம் மொகமட் றாபி என்பதை பார்க்க முதல், 1983 க்கு முந்தைய கிழக்கு மாகாணம் எப்படி இருந்தது என்பதை சற்று பார்ப்போம்.

1960,1970,1980 காலகட்டங்களில் கிட்டத்தட்ட மொத்த கிழக்கு மாகாணத்தவனும் படிக்காத முட்டாளாகவே இருந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள், ஆங்காங்கே மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, வயல்வெளிகளுக்குள் குட்டிக்குட்டி தேனீர்கடைகள், நீண்ட நெடிய ஆறுகள், இடுப்பளவு தண்ணீருடன் குளங்கள், நாள்சந்தைகள், வாரச்சந்தைகள், துடிக்கத் துடிக்க கடல் மீன்களை கூறு போட்டு விற்கும் மீன் சந்தைகள், வீடுகள், பாடசாலைகள், கோயில்கள், தீர்த்தோற்சவங்கள், தீமிதிப்புகள், பெருநாட்கள், விளையாட்டுப் போட்டிகள்.

நாங்கள் வயலுக்கு பைசிக்கிளில் அதிகாலை போய்கொண்டிருப்போம். வழியில் தமிழ் சகோதரர் ஒருவர் மீன் வண்டியுடன் வந்து கொண்டிருப்பார். எங்களை கண்டதும் காக்கா நல்ல விரால் மீன் இருக்கு காக்கா வாங்கலையா என்பார். நான் வயலுக்கு போறன். வீட்ட பொண்டாட்டி இருப்பா நல்ல விரால் மீனாகப் பார்த்து ஒரு நாலு விரால் கொடு. நாளை பணம் தருகின்றேன் என சொல்லி விட்டு நாங்கள் வயலுக்கு செல்வோம். எஸ் வீ ஓல்ஆர் பிறதர்ஸ்.

புட் போல் மெச். ஒன்று யங்ஸ்டார். சித்திரவேல், நடராஜா, சின்னவன், போளையன், சங்கர், மூர்த்தி, தவராஜா என தமிழ் சகோதரர்களின் ரீம். ஆதம்பாவா, சீனிக்காக்கா, பாறூக், அஸீஸ், ஜமால், வட்டானை என முஸ்லீம் சகோதரர்களை கொண்ட ரீம். இரண்டு ரீம்காறர்களும் வெலிங்டன் தியேட்டர் அருகில் சந்தித்து அடுத்த வாரம் மோதுவதாக முடிவெடுப்பார்கள். செய்தி காட்டுத் தீயாக ஊர் முழுக்க றெக்கை கட்டிப் பறக்கும். தமிழ் பகுதிகளில் அடுத்தவாரம், காக்காமாருக்கு இருக்குது அடி எனவும், முஸ்லீம் பகுதிகளில் வாற வெள்ளிக் கிழமை தமிழனுக்கு இருக்குது குறுமா எனவும் இளைஞர்கள் பேசிக் கொள்வார்கள். மரவெட்டான் குளம் ( எழுதுமட்டுவான் மைதானம் ) வெள்ளிக் கிழமை தமிழ் முஸ்லீம் இளைஞர்களால் நிரம்பி வழியும். மச்சான் நடராஜா, பின்னால சீனிக்காக்கா வாறான் கவனம் மச்சான் என தமிழ் இளைஞர்களும், சீனிக்காக்கோவ் கோணர் கிக் ஒண்டு கொடுங்கோ சீனிக்காக்கா என முஸ்லீம் இளைஞர்களும் குரல் கொடுப்பார்கள். ஆம் யுத்தம், தர்ம யுத்தம் நடக்கும். இறுதியில் தமிழ் இளைஞர்கள் வென்று விடுவார்கள். முஸ்லீம் இளைஞர்கள் வெடி கொழுத்துவார்கள். பக்கத்தில் உள்ள யாசீன் காக்காட சினிமா தியேட்டரில் அனைவரும் ஒன்றாக 6.30 படம் பார்த்து, அடுத்தவாரம் தர்மசங்கரி மைதானத்தில மோதுவோம் மச்சான் என புறப்படுவார்கள். எஸ் வீ ஓல்ஆர் கசின்.

வீடு கட்ட வேண்டும். புது வீடுகட்ட நிலம் பார்க்க, நிலக்கால் நாட்ட தமிழ் சாத்திரிமாருக்கிட்டத்தான் அத்தனை காக்காமாரும் போவார்கள். கிழக்குமாணத்தில் உள்ள 90 வீதமான முஸ்லீம்களின் வீடுகள் 1983க்கு முதல் தமிழ் சகோதரர்களால்தான் கட்டப்பட்டது. அவ்வளவு நேர்த்தி, அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் இருந்து தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உதவுவது போல் செய்வார்கள். எஸ் வீ ஓல் ஆர் சேம் பிளட்.

ஆம் தமிழ் முஸ்லீம் இனக்கலவரங்கள் வரும். கல்முனை காக்காமாருக்கும், நற்பிட்டிமுனை தமிழ் சகோதரர்களுக்கும், அக்கரைப்பற்று காக்காமாருக்கும், பனங்காடு, கோளாவில் தமிழ் சகோதரர்களுக்கும், காத்தான்குடி காக்காமாருக்கும், ஆரப்பத்தை தமிழ் சகோதரர்களுக்குமிடையில் இரண்டு வருடத்துக்கொரு முறை இனக்கலவரம் வரும். இது திட்டமிட்ட புத்திஜீவிகளால் உருவாக்கப்படும் இனக்கலவரம் அல்ல. நேற்று இரவு தென்னங்கள்ளையோ அல்லது வடிசாராயத்தையோ அருந்தியவர்களால் உருவான இனக்கலவரம். முதல்நாள் இரண்டு பகுதியிலும் இரண்டு பேரின் செவியை (காது) அறுப்பார்கள்.. அடுத்தநாள் இரண்டு பகுதியிலும் கொஞ்சம் சோடா போத்தல் பறக்கும். மூன்றாம் நாள் அப்பகுதி பொலீஸ் அதிகாரி இருபகுதியிலும் கோயில் தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்களை அழைத்து. ஓகே. இன்றிலிருந்து சமாதானம் சரியா என்பார். இருதரப்பாரும் தலையாட்டுவர். பகல் ஒரு மணிபோல் போலீஸ் வண்டியில் ஸ்பீக்கர் கட்டி. சரி இருதரப்பும் சமாதானம் ஆகிவிட்டது. நாளை கடை திறக்கலாம், பாடசாலைக்குப் போகலாம், எல்லாம் வழமை போல் இயங்கும் என்பார்கள். டண். இரண்டு பகுதியிலும் போத்தல் எறிந்த குறுப்புகள் அன்று பின்னேரமே சாறாட ( சிங்கள சகோதரர் ) கொட்டிலில் சோமபானம் அருந்திக் கொண்டிருப்பர். எஸ் வீ ஓல் ஆர் சக்களத்திகள்.

இந்த சக்களத்தி சண்டைகளையும், நண்பர்கள் சண்டையையும். மச்சான் மச்சினன் சண்டையையும் ஊதிப்பெருப்பித்த புண்ணியம் கிழக்கு மாகாணத்தில் 1979ல் வீசிய புயல், வெள்ளத்தையே சாரும். அன்று கிழக்கில் மருதமுனை, நீலாவணை, சின்னக்கல்லாறு, பெரிய கல்லாறு, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, பெரிய போரதீவு, கோயில் போரதீவு போன்ற இடங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டது. இப்பகுதி முழுக்க முழுக்க தமிழ் சகோதர, சகோதரிகள் வாழும் பகுதிகள். உடனடியாக அன்று பிற்பகலே பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையுள்ள முஸ்லீம் இளைஞர்கள் புஸ்பைக்கிலிலும், கால்நடையாகவும் சென்று அவர்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்தார்கள்.. செய்தோம். ( இப்போதும் வன்னி புனிதர்களுக்கு, சட்டி பானையுடன் ஓடிப்போய் முதல் சோறு போட்டவனும் இந்த காத்தான்குடி சோனிகள்தான். திஸ் இஸ் இஸ்லாம். வட் ஹெப்பன் ரு வணங்கா மண். தற் இஸ் பக்கா கெப்பிற்றலிஷம். தற்ஸ் வை ரூ லேட் போர் எவ்ரிதிங் ) அப்போது, ஒருவாரத்தின் பின் யாழ்ப்பாணத்திலிருந்து பல இளைஞர்கள் இவர்களுக்கு உதவி செய்கின்றொம் பேர்வழி எனக்கூறிக் கொண்டு வந்து, உதவியுடன் உபத்திரவத்துக்கும் பிள்ளையார் சுழிபோட்டார்கள்.

அடியாத மாடு படியாது, அடி உதவுகின்றாப் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான், யாமிருக்கப் பயமேன் என ஆரம்பித்து, எங்களை, ஒன்றாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த எங்களை, கொத்தி கூறு போட்டு, கொத்து பராட்டா போட்டு, கொக்கரித்து, கொந்தளிக்க வைத்து, டேய் காக்கா வாறான், காக்கா வாறான் கதையை நிற்பாட்டு, ஏதோ றெக்கி எடுக்கத்தான் வாறான் என்ற அளவுக்கு எங்கள் நண்பர்களை, எங்களுடன் வாழ்ந்தவர்களை, எங்களுடன் ஒன்றாக உறங்கியவர்களை கிள்ளி தொட்டிலையும் ஆட்டி, திரும்பவும் ஆட்ட நினைக்கின்றீர்களே, இது தகுமா, இது தருமமா. கோவலனை கண்ணகி மாதவி விடயத்தில் மன்னிக்கவில்லையா, நடுக்காட்டில் தன்னை விட்டு விட்டு ஓடிய நளனை தமயந்தி மன்னிக்கவில்லையா, தன்னை வைத்து சூதாடிய அயோக்கியன் தருமனை பாஞ்ஞாலி என்ற பதிவிரதை மன்னிக்கவில்லையா. பிளீஸ் எங்களை கொஞ்சம் பழையபடி சேர்ந்து வாழத்தான் விடுங்களேன். வீ ஆர் ஸ்ரில் திங்கிங் எபவுட் அவர் ஓல்ட் கல்ச்சர்.

1981இல் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாறூக். வீட்டில் தனது குடும்பத்தாருடன் ஏற்பட்ட சிறு பிரச்சனையில் மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் அலைந்து திரிந்தார். அச்சமயங்களில் இவர் யாழ்பாணத்திலுள்ள டவுண் பள்ளி வாசலில்தான் ( இப்போதைய ஈபிஆர்எல்எப் ஒபீஸ் அருகில் உள்ள பள்ளி வாசல் ) தங்கினார். ஒரு சில நாட்கள் சுபாஸ்கபேயில் வேலையும் செய்தார். பின்னர் யாழ் பஸ் நிலையத்தில் ஒரு கூவி விற்கும் வியாபாரியுடன் சேர்ந்து சிறு சிறு வியாபாரம் செய்தார். 1982 கடைசியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில ஈபிஆர்எல்எப் முஸ்லீம் இளைஞர்களின் துணையுடன் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பள்ளியில் தங்கியிருந்தார். அப்போது இவர் ஈபிஆர்எல்எப் இல் இணைய முயற்சி செய்தார். இவரது நடவடிக்கைகள் சிறப்பாக இல்லாததால் அவரை இணைத்துக் கொள்ளவில்லை. பின்னர் அவர் ஐந்து சந்தியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்தார்.

அதன் பின் இவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும், புலிகள் இயக்கத்தவருமான கெப்டன் நரேஷ் ( இவர் இப்போது இங்கிலாந்தில் இருக்கின்றார் ) அவர்களூடாக 1984 முற்பகுதியில் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார் அல்லது இணைக்கப்பட்டார். இவரது வேகமான வளர்ச்சி, இறைச்சிக்கடை அனுபவம் புலிகளை மலைக்க வைத்தது. இவரது வெட்டுக்குத்துகளைப் பார்த்த கிட்டண்ணா இவரை தனது மெய்பாதுகாவலராக இணைத்துக் கொண்டார். ஒருசில நேரங்களில் இவரது வளர்ச்சியில் லெப்.கேணல்.ராதாவுக்கு, வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிடுமோ என்ற ஒரு மன உளர்ச்சி, தளர்ச்சி இருந்தது. ஆம் அது 07-01-1987ல் சிங்கள கூலிப்படை கொன்றது என்ற பெயரில் பிற்பகல் 5.55க்கு கே.கே.எஸ்.வீதியில் ராதா தலைமையில் அரங்கேறியது. அக்கரைப்பற்று ( அக்கு, ஆர், அரை, பற்று )பெற்றெடுத்த ஒரு மறவன் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தானடா, கர்ணா எய்தவன் கர்ணனடா, கர்ணா எய்தவன் ராதாவடா. இது பாறூக்கின் சரித்திரத்தில் ஒரு துளி.

முகமட் ஹாசீம் முகமட் ராபி, இவர் அட்வகேட் ஹாசீம் பி.எஸ்சி (இந்தியா) அவர்களின் இரண்டாவது மகன். கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் ( அமைச்சர், எம்பி )பேரன். இவர் அக்ரைப்பற்று சென்றல் கொலேஜ்ஜில் ஓஎல் வரை படித்து, ஏஎல் யாழ். மகஜனாவில் படித்தவர். 1983 ஆரம்பத்தில் பரீட்சை முடிவை எதிர்பார்த்து அக்கரைப்பற்றில் இருந்தார். அப்போது 1983 ஜூலை கலவரம் வெடித்து, குட்டிமணி, தங்கத்துரை எல்லாம் பனாகொடையில் கொல்லப்பட, தமிழ் சிறைக்கைதிகளை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். மட்டக்களப்பு சிறையுடைப்புக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட, அக்கரைப்பற்றில் உள்ள முஸ்லீம் இளைஞர்களும், தமிழ் இளைஞர்களும் சேர்ந்து 1983 செப்டம்பரில் திருக்கோவில், தம்பிலுவில் கிராமங்களில் பொதுமக்களின் ஆயுதங்களை கொள்ளையிட்டார்கள். சிலதை உரிமையாளர்களின் ஒப்புதலுடன் பெற்றார்கள்.

அப்போது, முஸ்லீம் இளைஞர்கள் இந்த மொகமட் ராபியையும் அந்நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தார்கள். முகமட் ராபி பங்கு பற்றிய முதல் நிகழ்வு இது. அதன் பின் இவர் பல முறை ஈபிஆர்எலஎப் இல் இணைய முயற்சித்தார். அப்போது இந்திய அரசும், இந்திய ரோவும் இணைந்து தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சி வழங்க முன் வந்திருந்தது. இச்செய்தி பத்மநாபா ஊடாக முதல் முதலில் கிழக்கு மாகாணத்துக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக அடுத்த வாரமே கிழக்கு மாகாணத்தில் இருந்து 67 இளைஞர்கள் அனுப்பப்பட்டார்கள். இதில் இந்த முகமட் ராபியும் ஒருவர். இவர் ஒருவர்தான் முஸ்லீம் இளைஞர். யாழ்ப்பாணத்தில் ஈபிஆர்எல்எப்புக்கு அப்போது பொறுப்பாக இருந்த தோழர்கள் அவரை மட்டும் திருப்பி அனுப்பிவிட்டு, மற்றவர்களை மயிலிட்டி ஊடாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆம் தடங்கல் அப்போதே ஆரம்பித்து விட்டது. என்றாலும் அப்போது ஈபிஆர்எல்எப்பில் கிழக்கு மாகாணத்தில் எடுபிடியாக இருந்த ஒருவரின் ( எல்லா இயக்கங்களுமே முஸ்லீம்களை எடுபிடியாகத்தான் பாவித்தார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம் ) நச்சரிப்பில், அவரே நேரடியாக யாழ். வந்து தோழர்களை உண்டு இல்லை என பண்ணி, முகமட் ராபியை மயிலிட்டியில் படகில் ஏற்றிக்கொண்டு வேதாராண்யம் ஊடாக மெட்ராஸ் சூழைமேடுவரை வந்து ராபியை, நாபாவின் ஆசீர்வாதத்துடன் உத்தரப்பிரதேசம் அனுப்பி வைத்தார்.

1984 பெப்ரவரிக்குப் பின் கிழக்கு கிழக்காக இல்லை. தடி எடுத்தவன், தண்ணி அடித்தவன், மச்சான் போட்டு பேசியவன், படலைக்குள் புகுந்து மையிறு புடுங்கியவர்கள் எல்லோரும் தடியுடன் இருந்தார்கள். இது கொஞ்சம் வித்தியாசமான தடி. இவனை பார்த்தால் கோழிக் கள்ளன் போல் இருக்கின்றான் மச்சான். போடு, போடு போட்டுத்தள்ளு என போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள், சகோதரர்கள், ஒன்றாக எங்களை செக்கண் சோவுக்கு அழைத்துச் சென்றவர்கள், வா மச்சான், வாடா காக்கா என அன்பாக அழைத்த நண்பர்கள். வாடா காக்கா என, அடிநாக்கு நாசியையும், தொண்டையையும் ஒட்டுற மாதிரி அழைத்தார்கள். அதில் அன்பில்லை. ஆக்ரோஷம் இருந்தது. பள்ளி வாசல்கள், கடைத்தொகுதிகள், வயல்வெளிகள் எல்லாமே அழிந்து போயின. ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல் இருந்த நாங்கள், ஒருவரை ஒருவர் பார்க்க வெட்கப்பட்டோம். வேதனைப்பட்டோம். கையில் தடி வைத்திருந்தவர்கள் தவிர, மற்ற அனைத்து சோனிகளும், தமிழனும் வாழ்வாதாரத்துக்கு கஸ்டப்பட்டார்கள். கஸ்டப்பட்டோம். கூலித்தொழிலாழிகள் ஒரு வேளை உணவுக்கு அல்லாடினர்.

இதில் இரு பகுதியினரையும் குறை சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இருந்து திட்டமிட்டு செய்தார்கள். மூஸ்லீம் இளைஞர்கள் எவ்வித ஆயுதமயப்படுத்தலுமின்றி கூட்டம், கூட்டமாக சென்று சில அநாகரிக செயல்களை அரங்கேற்றினர். இதற்கு அரசும் பின்னால் நின்று நெய்யூற்றியது. இவற்றின் உச்சக்கட்டம்தான் சிறிலங்காவில் ஜிஹாத் அமைப்பு தோன்ற வழி வகுத்தது. ஆம் 1984 ஜூன் 17ல் ஜிஹாத் உருவானது. முழு சிறிலங்காவிலுமிருந்து 40 நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடன் அது தொடங்கியது. காலி கோட்டை, வேருவளை தொடங்கி யாழ். நயினாதீவு வரையுள்ள மனிதாபிமானிகளின் உளப்பூர்வமான செயல்பாட்டுடன் அது தொடங்கியது.

அது அக்கரைப்பற்றில்தான் உருவானது. உருவாகி அடுத்த தினமே நாடுமுழுக்க துண்டுப்பிரசுரங்களும், கையேடுகளும் வினியோகித்தது. நாங்கள் ஆள வந்தவர்களல்ல. வாழவந்தவர்கள். பிளீஸ் எங்களை விட்டுடுங்கோ என கரம் கூப்பி சகோதர இனங்களை மன்றாடியது. அதன் பின், இனி எம் பகுதியில் நடக்கும் அத்து மீறல்களை நாங்கள் தட்டி கேட்போம் என சிறிலங்கா முழுக்க பறை சாற்றியது. அதன் பின் நடந்த, ஆள் கடத்தல், வரி, கப்பம், கொலைகளுக்கெல்லாம் ஜிஹாத் உரிமையுடன் நடவடிக்கை எடுத்தது. 1985 இல் பயிற்சி முடித்துக் கொண்டு முகமட் ராபி சிறிலங்கா வந்து திருக்கோயில் பகுதியில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தங்கியிருந்தார். இவரும் ஜிஹாத்துடன் இணைந்து விடுவாரோ என்ற பயத்தில் இவரை திருக்கோவிலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்த ஒரு தமிழ் அமைப்பு முடிவெடுத்து, இவரை சங்கிலியால் கட்டி 1985 ஜனவரியில் ஒரு கொரளா காரில் கடத்திச் சென்றார்கள். ஆம் ஜிஹாத் அமைப்பின் ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலம், எவ்வித சிராய்ப்புமின்றி முகமட் ராபி நிந்தவூர் பிரதான வீதியில் ஒரு அதிகாலைப் பொழுது மீட்கப்பட்டார். திஸ் ஒப்பரேஷன் புறம் சிறிலங்கன் ஜிஹாத்.

அன்று முதல் அவர் ஜிஹாத் அமைப்பின் இராணுவ தளபதியாக செயல்பட்டார் ( இவர் எக்காலத்திலும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை ). ஜிஹாத் அமைப்பின் வளர்ச்சி கண்ட அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி நேரடியாக இவர்களை அழைத்து, இரண்டு மூன்று பேச்சு வார்த்தைகள் நடாத்தி, ஆயுத உதவி செய்வதாக உறுதியளித்தார். ஆம் பயிற்சியும் வளங்கப்பட்டது. ஜிஹாத் பல முறை புலிகளுடன் அக்கரைப்பற்றிலும், காரைதீவிலும், மூதூரிலும் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளது. ஜிஹாத் அமைப்பின் மிக, மிக பொறுப்பானவர்கள் எவ்வித உயிரச்சமுமின்றி புலிகள் சொன்ன இடங்களுக்கு சென்று பேச்சு வார்த்தைகள் நடாத்தியுள்ளனர். பேச்சு வார்த்தைகளுக்கு சென்றவர்களை கடத்த முயன்னற போதும், வார்த்தை ஜாலங்களால் தப்பி வந்ததுமுண்டு.

ஆம் 1985 மே 21ம் திகதி இரவு 7.15க்கு ராபி கிழக்கு மாகாண ஈரோஸ் அமைப்பினரால் நெஞ்சில் 27 துப்பாக்கி சன்னங்கள் விளாச சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொன்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த அவ்விளைஞர் கடந்த 12 வருடங்களாக பிரான்சில் இருந்து, போன வருடம் இங்கிலாந்துக்கு மலையேறியுள்ளார் என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ளலாம். அக்கொலைக்கு கட்டளை இட்டவர் இப்போது முஸ்லீம் சகோதரர்களுடன் வியாபாரங்கள் செய்கின்றார். ஆம் மன்னிப்பை விட உயர்ந்த பண்பு இந்த உலகத்தில் வேறு என்ன மண்ணாங்கட்டி இருக்கின்றது.

இந்த ஜிஹாத் அமைப்பு அரசு செய்த சில கூலிக்கு மாரடிக்கும் வேலைகளை செய்ய மறுத்தது. ஆம் சகோதர இனத்தை இரத்த வெறி கொண்டு தாக்குவதை ஜிஹாத் குழுவினர் அங்கீகரிக்க மறுத்ததின் பயனாய், அரசு கட்டாக்காலிகளை அழைத்து துப்பாக்கிளை கொடுத்து என்னென்னவோ செய்ய தூண்டியது. கூலிக்கு மாரடிக்கும் அக்குழு நிறைய செய்தது. அவை அனைத்தும் ஜிஹாத் அமைப்பின் தலையில் கட்டப்பட்டது. ஆம் இவ்வாறு ஒன்று நடந்தால் எப்படி சமாளிப்பது என ஜிஹாத் அமைப்பினர் ஆரம்பத்திலேயே திட்டமிட்டனர். ஆம். ஜிஹாத் அமைப்பிலிருந்து பலர் மறைமுகமாக தெரிவு செய்யப்பட்டு, அல்பத்தாஹ் என்ற அமைப்பு கட்டப்பட்டது. இதுவும் 1984 ஒக்டோபரில் உதயமானது. அல்பத்தாஹ். நிறைய மார்க்க , சன்மார்க்க பணிகள் மற்றும் விதவைகளுக்கு உதவுதல், நோயாளிகளுக்கு, பாடசாலைக்கு செல்ல வழியில்லாதவர்களுக்கு உதவுதல் எனவும் செயல்பட்டதுடன், சில நாகரிக நடவடிக்கைகளிலும் இறங்கியது.. ஆம் 1985 மே 21ல் சுட்டுக் கொல்லப்பட்ட ராபியின் ஞாபகார்த்தமாக, அக்கொலைக்கு துணைபோன சகலரையும் 1985 ஜூன் 21 இரவு 7.15 க்கும், 1986 மே 21 இரவு 7.15 க்கும் கழுவிலேற்றியது. இறுமாப்புடன் உரிமையும் கோரியது.

ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்கா முழுக்க ஒண்ணரை லட்சம் துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியது. அல்பத்தாஹ் என்ற தலைப்பில், அல்லாஹ் அக்பர், அல்பத்தாஹ் அமைப்பின் இராணவத் தளபதியும், முகமட் ஹாசீம் அவர்களின் மகனுமான முகமட் ராபி, 1985-05-21 இரவு 7..15 க்கு தமிழ் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரம் ராபிக்கள் உருவாக வழி வகுத்துள்ளனர் என்பதை, மிக, மிக பெருமையுடன் அறியத்தருகின்றோம். அல்பத்தாஹ், மத்திய செயற்குழு என நாலுக்கு நாலங்குலத்தில் அது வெளியாகி அரபு நாட்டு எம்பஸிகளின் கதவுகளையும் தட்டியது.

1985 மே 21 ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்காவின் முழு பாதுகாப்பு தலைமைகளும் அக்கரைப்பற்றில் நின்றன. அம்பாரையில் இருந்தும், கொண்டைகட்டுவான் இராணுவ முகாமில் இருந்தும் ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தயாராகுங்கள். அழியுங்கள் தமிழர்களின் குடியிருப்புக்களையும், வரலாறுகளையும் என்றார்கள். ஆம் உடனடியாக ஜிஹாத், அல்பத்தாஹ் பொறுப்பாளர்கள் கூடி இது தருணமல்ல, இது பொருத்தமுமல்ல, இது நாகரிகமும் அல்ல என முடிவெடுத்தார்கள். அரசுடன் ஒத்துழைப்பதில்லை என ஒரு சேர அத்தனை மத்திய குழு உறுப்பினர்களும் முடிவெடுத்தார்கள் ( சம்மாந்துறையைச் சேர்ந்த, மறைந்த அன்வர் இஸ்மாயீல் எம்பி அவர்கள் அல்பத்தாஹ் அமைப்பில் மத்திய செயற் குழு உறுப்பினராக இருந்தவர்களில் ஒருவர் என்பதை இங்கு பெருமையுடன் சொல்லலாம். ) பாதுகாப்பு பிரிவும், கொஞ்சம் ரத்தம் துடிப்பவர்களும் எவ்வளவோ தலையணை மந்திரங்கள் ஓதினார்கள். ஆனால் அன்பு, மனிதாபிமானம், பொறுப்புணர்ச்சி, எதிர்காலம் என்பதில் முழு நம்பிக்கை கொண்ட சிறிலங்கா ஜிஹாத் அமைப்பு, எய்தவனிருக்க அம்பை நோக வைக்க விரும்பவில்லை. ஆனால்,

ஆயுதம் தருகின்றோம், கொழுத்து முஸ்லீம்களின் பள்ளிவாசல்களை என்றதும் கொழுத்தியவர்களும், ஆயுத கப்பலே அனுப்புகின்றோம் விரட்டு சோனிகளை என்று இஸ்ரேல் சொன்னதும் ஒரு மாவட்ட முஸ்லீம்களின் வரலாறையே அழிக்க முற்பட்டவர்கள்தான் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள் என்றால் அது மிகையாகாது. ஆனால் அமைப்பு ரீதியாக செயல்பட்ட எந்த முஸ்லீம்களும் எக்காலத்திலும் கூலிக்கு மாரடிக்கவில்லை. மாரடிக்கவும் மாட்டான். தற் இஸ் இஸ்லாம்.

இந்த அல்பத்தாஹ் அமைப்பின் செயல்பாடுகளில்தான் அனைவரும் அக்காலங்களில் கவனம் செலுத்தினர். யார் இவர்கள். எங்கிருந்து தொழில்படுகின்றார்கள் என கண்ணுக்குள் விளக்கெண்ணை போட்டு தேடினார்கள். அதன் ஒரு வெளிப்பாடுதான் பிற்காலங்களில். ஓ இப்படியும் ஒரு ஆள்மாறட்டம் செய்யலாமோ என தோன்றிய சங்கிலியன் படை. ஆம் 1991 முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியதும், முஸ்லீம்களின் வீட்டுத் தொகுதியொன்றை விடுதலைப்புலிகள் தமது அச்சகமாக பாவித்தார்கள். அந்த அச்சகத்துக்கு வே.பிரபாகரன் அவர்கள் வந்து போவது வழமை. ஆனால் ஒரு நாள் தலைவர் வந்து ஒரு முக்கால் மணி நேரத்தின் பின் வெளியேறி இரண்டு நிமிடத்தில் அவ் அச்சகம் வெடித்துச் சிதறியது. அதற்கும் இந்த அல்பத்தாஹ்வுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற போர்வையில், யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே அக்காலங்களில், தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்த முஸ்லீம் சகோதரர்களை இந்த சங்கிலியன் படை வறுத்தெடுத்ததாகவும் அப்போது பட்சிகள் பேசிக்கொண்டன.

இப்போது சிறிலங்காவில் ஜிஹாத் இருக்கிறதா, இயங்குகின்றதா என்பதுதான் அனைவரின் கேள்வியும். ஜிஹாத் என்பது வாழ்க்கையுடன், வாழ்க்கைக்காக போராடுவது. அடுத்தவனைப் போய் வம்புக்கிழுப்பதல்ல. வம்புக்கிழுக்க இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை. அப்போதைய ஜிஹாத்தை சிலர் வம்புக்கிழுத்து, வம்பில் மாட்டிவிட நினைத்தனர். அதனால் நடப்பது தர்மயுத்தம், தமிழ் பேசும் தமிழ் மக்களுக்கும், சிங்கள அரசுக்கும் இடையில் ஒரு தர்மயுத்தம், அது தன் வழியில் நடக்கட்டும், நாம் முதலில் எம்மை புடம் போட்டுக் கொள்வோம். இக்கால கட்டங்களில் எம்மிடமும் ஆயுதம் இருந்தால் அது வேறு, வேறு பின் விழைவுகளை ஏற்படுத்தும் என்பதை பல மார்க்க அறிஞர்களும், புத்தி ஜீவிகளும் எடுத்துரைக்க, ஜிஹாத், அல்பத்தாஹ் அமைப்புக்களின் பைல்கள் மூடப்பட்டு அனைவரும் 1987 டிசம்பரில் நாடு கடந்தனர். கடந்து, முஸ்லீம்களின் கல்வி, வியாபார விடயங்களில் 100 வீத கவனம் செலுத்தினர். செலுத்திக் கொண்டுமிருக்கின்றனர். அதன் பயன்தான் இன்றைய முஸ்லீம்களின் கல்வி, வியாபார எழுச்சிகளெல்லாம். இல்லாவிட்டால், இன்றைய எமது முஸ்லீம் இளைஞர்கள் எங்கேயோ அகதி அந்தஸ்துக்கு விண்ப்பித்துக் கொண்டிருப்பர்.

இனி ஒரு ஜிஹாத்தோ, ஒரு அல்பத்தாஹ்வோ சிறிலங்காவில் தோன்றவும் கூடாது, தோன்றவும் மாட்டாது. இப்போது அனைவருக்கும் தேவை ஒரு பொருளாதாரப் புரட்சி. அந்தப் புரட்சி வெடிக்க நிச்சயம் சிறிலங்கா ஜிஹாத் கொடிபிடிக்கும். அப்புறம் மகிந்தவின் காதையோ, ரணிலின் காதையோ, சரத்பொன்சேகாவின் காதையோ கடித்து, மானில சுயாட்சியாவது எங்களுக்கு தாங்கோ மக்காள் என கேட்போம். ஒன்று பட்டால்தால் உண்டு வாழ்வு.

இதில் உள்ள தகவல்கள் எமது உள்ளக் கிடக்கைகளின் ஒரு பனித்துளி அன்பின் பக்ஷீர் காக்கா. இவ்வாறு ஆயிரம் கோடி பனித்துளிகள் வன்னியில் உறங்கிக் கிடக்கின்றன சகோதரர்களே. இனி இவைகளை மறந்துவிட்டு நல்லதோர் உலகம் செய்வோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • kalai
    kalai

    ஐயோ! ஐயோ!! இந்தச் “சட்டி பானைச் சண்டைக்குள்” நான் வரவில்லை. ஆளை விடுங்கள். பட்டதெல்லாம் போதும்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    அன்பரே!, நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்கள்!. எனக்கு இலங்கையைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று சரியாகச் சொல்லலாம். என் அரம்ப பள்ளி நாட்கள் கழிந்தது கல்கத்தாவில். நான் ஒரு “காலனித்துவ எதிர்ப்பு இந்துத்துவ கருத்தியல்” கொண்டவன். 1993 ல்,பிறகு இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை உச்சத்தில் வைத்து கொண்டாடிய சில கருத்தியல்கள், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப் பட்டதை, “தீர்க தரிசனத்துடன், வன்மையாகவே கண்டித்திருந்தார்கள்”. பிரபாகரனை இந்த செயலுக்கு “உசுப்பு ஏத்தியவர்களுடந்தான்” தற்போது நீங்கள் வியாபார, மற்றும் பொருளாதார காரணங்களுக்காக கூடிக் குலாவுகிறீர்கள்!.

    இலங்கையர் பிரச்சனை எங்களுக்கு சம்பந்தமில்லாதது, அதுவும் இலங்கை முஸ்லீம்கள் பிரச்சனை, “நோ டச்”. நான் எதற்கு எழுதுகிறேன் என்றால், நான் உண்டு, உறங்கி, புரண்டு எழுந்த சூழலில் இருந்து எழுந்த சில தலைவர்கள் நான் உண்ர்ந்த சில விஷயங்களை உண்ராமல், இலங்கைப் பிரச்சனையின் சில “வம்புகளை” வரவேற்று உபசரிக்கிறர்கள். அது இன்னொரு “பெரிய முள்ளியவாய்க்காலை நோக்கி செல்லுகிறது”. இலங்கை முஸ்லீம்களை “தொப்பிப் பிரட்டிகள்” என்று வன்சொல் கூறுவார்கள், இலங்கைப் பிரச்சனையை காரணம் காட்டி, அரேபிய அடிப்படைவாத உதவிகளைப் பெற்று, இப்பகுதியில் வியாப்பிக்க நினைக்கும் சில பிரத்தியேக ஆபத்துகளுக்கு பொருந்துவது போல் உள்ளது. மட்டகளப்பு “தமிழ் முஸ்லீம்களின் வரலாறு தமிழைப் போலவே தொன்மையானது”. கூட்டிக் கழித்து அவர்களுக்கு எதிராகத்தான் பிரபாகரன் உசுப்பு ஏத்திவிடப்பட்டு, பல தவறான காரியங்களை செய்திருக்கிறார் என்பது துன்பியல் சம்பவமல்ல, ஆறாத வடு. இப்பிரச்சனையில் பொருளாதர முன்னேற்றம் பாதிக்கப்பட்டு எழும்பமுடியாமல் இருப்பவர் அவர்களே (தமிழ்ச் சமுதாயம் போல்).

    உங்கள் கட்டுரையின் முதல் பகுதி சரி!. நீங்கள் கேட்கும் மாநில சுயாட்சியுடன் தெற்காசியப் பகுதியில் வாழ்ந்துவிட முடியாது!. ஆனால்,உங்கள் கட்டுரையில் கிழக்கு மாகாணபகுதியில் சிங்களவருக்கு எதிரான (தமிழருக்கு ஆதரவான?)உங்கள் நிலையை நான் நம்பமாட்டேன்!. உங்கல் சகோதரத்துவம் உண்மையாக இருந்தால், இனிய பாரதி, மகிந்தா போன்றோர்களுடன் ஒத்துப் போய் (அப்துல் காலம்)நல்லாசியுடன் வாழமுடியும்!.

    Reply
  • Danu
    Danu

    //இந்த தமிழீழ விடுதலைப் புலிகள் என்றால் அது மிகையாகாது. ஆனால் அமைப்பு ரீதியாக செயல்பட்ட எந்த முஸ்லீம்களும் எக்காலத்திலும் கூலிக்கு மாரடிக்கவில்லை. மாரடிக்கவும் மாட்டான். தற் இஸ் இஸ்லாம்//

    புலிகள் மட்டுமல்ல இந்த நீங்கள் கூறியவர்கள் இவர்கள் எல்லோருமே பயங்கரவாதிகள் ஏன் நீங்கள் இந்தமுஸ்லீம் பயங்கரவாதிகள் செய்த கொலைகளை பட்டியல்போடவில்லை உதாரணமாக வருத்தம் என்று அம்புலன்ஸ்ல் ஏற்றிக்கொண்டு போன நோயாளியை வழிமறித்து இறக்கி கொன்றது இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்த அம்புலன்ஸ் ஓட்டுனர் இன்றும் கொழும்பில் உள்ளார்.

    //தற் இஸ் இஸ்லாம்// உலகில் எத்தனையோ காலமாக இஸ்லாமிய நாடாக இருந்த நாடுகளில் இருந்து எல்லாம் ஏன் அகதிகள் விண்ணப்பங்கள் ஜரோப்பிய நாடகளுக்கு வந்ததாம் எங்கே இந்த இஸ்லாம் அவர்களுக்கு அந்த நாடுகளில் ஏன் தமுன்னேற்றம் காணத்தவறி விட்டது. தயவு செய்து சொல்லாதேங்கோ இது முதலாளித்துவசாதிகளின் சதி என்று. நிற்ப்பாட்டுங்கோ சியா சுன்ணி சண்டையை.

    நிற்பாட்டுங்கோ பாக்கிஸ்தானில் சவக்காலைகளில் நடக்கும் சண்டைகளை. சொல்லாதேங்கோ இது பாக்கிஸ்தானில் இந்தியா உளவு விவகாரம் என்று. எங்கே இஸ்லாம் எப்படி எத்தனை வரடங்களாக இவற்றை எல்லாம் கையாண்டது ஏன் பாக்கிஸ்தானில் கத்தோலிக்கர்கள் தற்கொலை பண்ணினார்கள் உயர் நீதி மன்றத்தில்? காரணம் அவர்கள் இஸ்லாமியர் இல்லை என்பதால் மலேசியா கின்ராப் இந்துக்கள் ஏன் இஸ்லாமிய சட்டத்தில் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்?
    பங்களாதேஸ்ல் ஏன் அப்பாவி ஏழை இந்துப்பெண்ணின் தகப்பன் பள்ளிவாசலில் வைத்து அடிக்கப்படடபோது ஏன் கடவுள் ஓடி வரவில்லை முஸ்லீம்களக்கு அறிவுறுத்தல்கள் சொல்வில்லை?

    நண்பரே இஸ்லாத்தில் அல்லது வேறு எந்த மதத்திலோ ஒன்றுமில்லை எல்லாம் பொருளாதாரம் மக்களின் ஜீவாதாரம் சமூகம் நீங்கள் சொல்லும் இந்திய – இலங்கை- பங்களாதேஸ் பாக்கிஸ்தான்- அப்கானிஸ்தான் முஸ்லீம்கள் யார் எப்படி முஸ்லீம்களானார்கள் புத்தகங்கள் வாசிப்பதில்லையா ?
    அப்கானிஸ்தான் இன்றய முஸ்லீம்கள் அன்று முஸ்லீம் பரப்பும்போது பெளத்தர்கள் பெளத்தத்திற்கு முன்பு இந்துக்கள் இவர்கள் ஒவ்வொரு ஆட்சியாளர்கள் வரம்போதும் எதிர்தவர்கள் இது அவர்களது இரத்தில் உள்ளது இது இஸ்லாத்தால் வரவில்லை.

    இஸ்லாம் அப்கானிஸ்தானுக்கு வரம்போது எதிர்த்தவர்கள் எப்படி இஸ்லாமியர்கள் ஆனார்கள் சேர்ச் இற் கூகிள்/
    என்று இந்த மதவாதிகளின்ட தொல்லைகளை தாங்கமுடியாமல் இந்த முதலாளித்துவம் தானாகவே கடவுள் தத்தவம் அதிலுள்ள பொய்களையும் முதலாளித்துவ ஊடகங்கள் பிரச்சாரம் செய்யும்போது (இன்று அவர்கள் கடவுளை வணங்கி அமைதியா இரு என்கிறார்கள் தமது பாதுகாப்பிற்க்கு) கடவுள் சமயம் எல்லாம் தூசாகும் அதுவரையில் உங்கள் காட்டில் மழையாகவே இருக்கும் இது இந்து கிறீஸ்த்தவ- கத்தோலிக்க -பெளத்த எல்லோருக்கும் பொருந்தும்.

    Reply
  • BC
    BC

    Danuவின் கருத்துக்கள் நல்ல உண்மையை கூறும் கருத்துக்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    எல்லா மதத்திலும் உயிர் கொல்லிகள் இருக்கதான் செய்கிறார்கள், இதில் என்மதமா உன்மதமா என எண்ணை ஊத்துவது புரிந்துணர்வு அற்ற செயல்; அல்லாவுக்கும் ஜேசுவுக்கும் சிவனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, அவர்களுக்கு காலத்துக்கு காலம் நடக்க வேண்டியவை நடந்த வண்ணமே உள்ளது; ஆனால் அவர்கள் பிள்ளைகளாகிய நாம் தான் தடம்புரண்டு நமது வாழ்வையும் கெடுத்து சமூக வாழ்வையும் கெடுக்கிறோம்;

    Reply
  • kalai
    kalai

    இன்றைய செய்தி;எகிப்தின் தெற்குப்பகுதியில் இருக்கும் ஒரு கிறித்தவ தேவாலயத்திலிருந்து பிரார்த்தனை முடித்து விட்டுத் திரும்பிய கிறித்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர் நடத்திய ஆறுபேர் கொல்லப்பட்டனர்

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    Danu,
    முஸ்லிம் ‘ஒற்றுமை’ வெளிநாடு வந்தபின்னர் தான் நன்றாகத் தெரிய வந்தது. நீங்கள் பாலஸ்தீன சிக்கலில் ஆளை ஆள் சுடுபடும் கோஷ்டியையும் ‘கூலிக்கு மாரடிகாத’ ஆனால் இஸ்ரேலிய மொசாட்டுக்கு பாலஸ்தீன போராளிகளைப் போட்டுக்கொடுக்கும் ‘தற் இஸ் இஸ்லாம்’ கோஷ்டியையும் விட்டுவிட்டீர்கள்!
    அத்துடன் ஆப்கானிஸ்தானில் ரஷ்யா (அன்றைய) எடுத்த பெண்கள் கல்வி, சுகாதாரம், நிலச்சீர்திருத்தம் போன்ற நல்ல முயற்சிகளை ‘மார்க்கத்துக்கு எதிரான’ விளக்கம் கொடுத்து அமெரிக்காவின் கால்களை கட்டிப்பிடித்து ‘கூலிக்கு மாரடிக்காத’ அதே தற் இஸ் இஸ்லாம் கோஷ்டி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பமியான் புத்தர் சிலையை குண்டு வைத்து தகர்த்ததும் சொலாமல் மறந்து விட்டீர்கள்! அறிந்தவைகளை எழுத வெளிக்கிட்டால் காலமும் இடமும் போதாமல் வரும்….

    Reply
  • மேளம்
    மேளம்

    ஐயோ! ஐயோ!! அரைச்ச மாவையே திருப்பி அரைக்கவேண்டிய தேவை தேசம் நெற்றுக்கு ஏன் வந்தது. இந்தக் கட்டுரை போன வருசம்தானே மேளம் வாசித்தது. அப்படி என்ன புதுசா அந்த நாநா இந்தக் கட்டுரையில சொல்லிப்புட்டாரு. இதுல ஆருக்கு ஞாபக மறதி….. மேளத்துக்கு….. அப்பிடி ஒண்ணும் வயதாகல்லயே…. தேசம்நெற் நிருவாகத்தாரப்பத்தி மேளத்துக்கு பெரிசா தெரியாது. நம்ம பின்னூட்டக்கார்கள் படு கில்லாடிகள்.

    Reply
  • Ahmad Nadvi
    Ahmad Nadvi

    Oh Yahya! What a man you are?
    Without fully undestand the religion Islam first you cannot argue effectively.

    Your problms is that you could not distinguish so called Muslims and the principles of Islam in the first place.

    Your are confused and you confused the others. Becuse of that confussion the persons, who made comments on your article failed to see the difference between Islam and the wrong acts of so called Muslims.

    Most worst part of it was that the feedbackers didn’t undestand the Suni, Shia division is not Islamic one. Becuse you Yahya was not able to state the fudamental difference between Islamic teachings or philosophy and the babaric and unislamic acts of some so called Muslims.

    The feedbackers think that terrorism is part of Islam. See how pathetically you put everyone in difficult position.

    So, Yahya my simple advice to you is stop this. The Thesamnet is not a forum for religious matters. If it gives an opportunity then there are able fellows who can put their case across about Islam and Muslims very effectively.

    You know Yahya, half knowledge is always dangerous. Learn from your mistake, because we all are in learning process until we die.

    Reply
  • kalai
    kalai

    //So, Yahya my simple advice to you is stop this. The Thesamnet is not a forum for religious matters.// Ahamed Ndvi

    THAT IS iSLAM?????

    Reply
  • த ஜெயபாலன்.
    த ஜெயபாலன்.

    மேலுள்ள கட்டுரை 2009 நவம்பர் 5ல் முதல்மனிதன் புளொக் ஸ்பொட்டில் வெளியாகி இருந்தது. அதனாலேயே மறுபிரசுரங்கள் என்ற வகைப்படுத்தலின் கீழ் இக்கட்டுரை இணைக்கப்பட்டு உள்ளது.

    சாந்தன் கலை (எகிப்திய சம்பவம்) ஆகியவர்களின் குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ள முடியாதது. தலிபான்கள் புத்தர் சிலையை உடைத்ததை முஸ்லிம்கள் உடைத்தாகக் கொள்ள முடியாது. சந்நதி முருகள் ஆலயத் தேரை என நினைக்கிறேன் இலங்கை இராணுவம் எரித்ததை பெளத்தர்கள் என்று கொள்ள முடியாது சிவசேனை பாபர் மசூதியை உடைத்ததை இந்துக்கள் என்று சொல்ல முடியாது.

    ஒட்டுமொத்தத்தில் தனு பல்லி பிசி குறிப்பிட்டது போல மதங்கள் அனைத்தும் ஒரே வகையினதே. எனக்கு மத நம்பிக்கையில்லை. ஆனால் ஒவ்வொருவரும் தான் நம்பிய மதத்தை பின்பற்றுவது அவரது உரிமை. அன்பே மதம் என்பர் ஆனால் அதன் பெயரில் செய்யப்படும் அழிவுகள் கொடுமையானது.

    மதத்திற்கு முன்னர் மனிதத்தை நேசிப்போம்.

    Reply
  • யஹியா வாஸித்
    யஹியா வாஸித்

    இன்னும் நாம் அடுத்தவனை காரணம்காட்டி பிழைப்பு நடாத்த முயற்சிக்கின்றோமே தவிர, நம்ம வீட்டில் அடுப்பெரிகிறதா, ஏன் எரியவில்லை, ஏன் நாம் உலை வைக்க முடியவில்லை, நம்மிடம் விறகில்லையா, தீ இல்லையா, அரிசில்லையா ? நீர் இல்லையா எல்லாம் இருக்கின்றது. ஆனால் நமது மெத்த படித்ததனம் ஒன்றுக்கும் நம்மால் முடியவில்லை.

    டெமாக்கரசி ஐயா சொல்வது போல் முஸ்லீம் இனைஞர்கள் உணர்ச்சி வசப்பட்டிருந்தால் போராட்டம் நிச்சயம் திசை மாறித்தான் போயிருக்கும். முஸ்லீம் சமூகமும் நாதியற்றுத்தான் போயிருக்கும். உணர்ச்சியை அடக்கி, உண்மைகளை அறியத்தொடங்கியதால்தான், இருந்த இத்தனூண்டு புத்தியையும், அன்று தீட்டி, நாட்டை விட்டு வெளியேறினாரகள். உதாரணத்துக்கு பாகிஸ்தானையும், பலஸ்தீனத்தையும், ஆப்கானிஸ்தானையும் வம்புக்கிழுத்து, உள்வீட்டுப் பிரச்சனைக்கு உபன்யாசம் செய்யத்தொடங்கி விடுகின்றோம். நான் உட்பட. நான் நினைக்கின்றேன் முஸ்லீம் சமூகம் சிறிலங்காவை பொறுத்தவரை உணர்ச்சி வசப்படக் கூடாது. அது, ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும், பாடுற மாட்டை பாடிக்கறக்கணும் என்ற நியதியை பலோபண்ணுவதுதான் அழகு. பொருத்தமும் கூட. ஆம் அவர்கள் ஆழவந்தவர்களில்லையே. வாழ வந்தவர்கள்.

    தனு அண்ணாவுக்கு, அண்ணா, 1983 ஜூலை கலவரம், மொனறாகலையில் பாதிக்கப்பட்ட
    தமிழ் குடும்பங்கள் கிட்டத்தட்ட 43. திருக்கோயில் ( அம்பாரை மாவட்டம் ) தாண்டியடி என்ற கிராமத்துக்கு வருகின்றது. உதவுவார் இல்லை. ஆனால் சில இளைஞர்கள் ( தமிழ், முஸ்லீம்) ஒன்று சேர்ந்து ஒரு தமிழ் கிராமத்தில், உடுதுணி, உணவு அவர்களுக்காக சேகரிக்கின்றார்கள். ஒரு தமிழ் ஆசிரியரின் வீட்டில் போய் உதவி கேட்கின்றார்கள். அவர் நிறைய உதவி செய்கின்றார். இது ஆயுதங்கள் இல்லாத காலம்.

    பின்னர் 1987 இல். அதே இளைஞர்கள் ( முஸ்லீம் இளைஞர்கள் தவிர ) ஆயுதங்களுடன் சென்று, அடாவடியாக அவரிடம் பணம் கேட்கின்றனர். அந்த பச்சை தமிழன் தர முடியாது என்கின்றார். ஆம். அடுத்த வாரம் அவர் கண்டதுண்டமாக வெட்டப்பட்டு, ஒரு சாக்கில் கட்டப்பட்டு வீதியில் கிடத்தப்படுகின்றார். இது இப்படியானால்.

    படித்து, சோசலிஷம், தார்மீகம், ஜனநாயகம் பேசிய நாமே இப்படி இருக்கும் போது, பாமர சோனி என்ன செய்வான். ஏதாவது ஒரு இயக்க உறுப்பினரால் பாதிக்கப்பட்டிருப்பான். ஆனால் அந்த வெறியை தீர்க்க வீதியில் அப்பாவியாக சென்று கொண்டிருக்கும் நாலு தமிழ் சகோதரர்களை இவன் தாக்குவான். தாக்கினார்கள். இதற்குப் போய் யார் தண்டனை வழங்குவது. தண்டனை வழங்குகின்றோம் பார் எனக் கூறிக்கொண்டு, முள்ளிவாய்க்கால் சகோதரர்கள், மின்கம்பத் தண்டனைகளையும், பகிரங்க மரணதண்டனைகளையும் வழங்கியதால்தானே இவ்வளவு வேதனையும், சோதனையும்.

    யார் யாருக்கு தண்டனை வழங்குவது. சகோதரர்களே. எங்கழுக்கு ஆப்கானிஸ்தானில் சிலை உடைத்தவனையும் தெரியாது, அமெரிக்க டுவின் டவருக்கு கிஸ் கொடுத்தவனையும் தெரியாது. அந்தளவுக்கெல்லாம் விரிந்து பரந்து நாங்க படிக்கல. எங்களுக்கு எங்க கிளாஸ்மேட் ராசலிங்கம், பேரின்பம், எங்களுடன் செக்கன் சோ படம் பார்க்கும் தவராசா, சாந்தன், ரவி, எங்கள் கணக்கு வாத்தியார் சோதிலிங்கம், மரவேலை வாத்தியார் தேவச்சந்திரன், எங்கள் கெமஸ்ட்ரி வாத்தியார் நேசராசா இவர்கள் வேண்டும் என்றுதான் சொல்கின்றோம். சொல்ல வந்தேன்.

    எவ்வளவு பாரிய இடைவெளியை உருவாக்கிவிட்டோம். இதை எந்த அப்பன் வந்து செய்வது. இவைகளை நினைத்தால் மண்டை கனத்து, உடம்பெல்லாம் வலுவிழந்து, நாவெல்லாம் வறண்டு விடுகிறதே. வேண்டாம். நாங்கள் சமாதானத்தை, பொருளாதாரத்தை முன்னேற்றிக் கொண்டு தொடரலாம் என நினைக்கின்றோம். இது எங்கள் வழி.

    புதிய இஸ்லாத்தைப்பற்றியும், இந்த சீயா, சுன்னி, கத்தரிக்கா, வெண்டைக்காய் பற்றி எல்லாம் எங்களுக்கு தெரியாது. எங்கழுக்கு தெரிந்த இஸ்லாம் ஒன் கோட், ஒன் கிப்லா, ஒன் குர்ஆன், ஒன் பிளக். இந்த வட்டத்துக்குள் ஒரு குட்டி வாழ்க்கை. தட்ஸ்ஆல்.

    ஆம் யாழ்ப்பாணத்தில் எங்கடவன் வியாபாரத்தை ( 2008 டிசம்பர் 10 ) தொடங்கி விட்டான். கே.கே.எஸ்.ஹாபரில் கடல் நீருக்குள் மூழ்கி இருந்த 5000 மெற்றிக் டொன் எடையுள்ள கப்பலை ( இரும்பு ) கிலோ 6ரூபா 50 சதத்துக்கு வாங்கி, கொழும்பில் கிலோ 43 ரூபாவுக்கு விற்கத் தொடங்கிவிட்டான். 20 சுழியோடிகள், 200கேஸ் சிலின்டர், 24 லொறிகள், லொறிக்கூலி ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபா. அனைத்தும் கொழும்பில் இருந்தே அனுப்பப்பட்டது. ஏன் யாழ்.இல் சுழியோடிகள் இல்லையா ? கேஸ் சிலின்டர் இல்லையா, லொறி இல்லையா. ஏன் இதற்கு முதலிட புத்திசாலிகள்தான் இல்லையா ? ஏன் இதைபற்றி நாம் சிந்திக்கவில்லை. செலவுகள் போக மொத்த இலாபம் 2கோடி ரூபா. இது ஜஸ்ட் மூன்று மாத இலாபம். ஆம் வன்னிப்புனிதர்களுக்கு முதல் முதலில் உணவு வழங்கியது போல், போன மாதம் முதல் முதலில் இரும்பு ஏற்றி வந்ததும் நம்ம லொறிதான்.

    ஜனவரி 4 இல் வல்வெட்டித்துறை ஹாபரில் உள்ள கப்பலையும் ( 12000 மெற்றிக் டொன் ) விலை பேசி, ஒப்பந்தம் கைச்சாத்தாகி விட்டது. அடுத்தவாரம் நிறைச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள ஒண்ணரை மைல் நீளமான ( கடலுக்குள் அமைந்துள்ள ) இரும்பு பாலம், விற்பனையாக இருக்கின்றது. எங்கே நமது புத்திசாலிகளும், உலகப்பொருளாதாரத்தை விரல் நுனியில் வைத்துக்கொண்டு வியாக்கியானம் பேசுபவர்களும்.
    முதலில் போய் இவைகளில் முதலிட்டு, அங்குள்ள பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பளித்து, அந்த கந்தக பூமியை, சொர்க்க பூமியாக்க யாரும் நினைக்கவில்லையே. திரும்பத் திரும்ப கங்கை கொண்டோம், கடாரம் வென்றோ்ம், பாபிலோனியர்களுக்கு 8ம் நூற்றாண்டில் உணவு அனுப்பினோம், கிளியோபாட்ராவின் உடலை சுற்றியிருந்த துணி எங்களவர்களால் அன்று அனுப்பப்பட்டது என்பதற்கு ஆதாரம் உண்டு எனவே…………..இதை எல்லாம் யார் கேட்டார்கள். வீ டோன்ட் கெயார் எபவுட் தியறி. வீ ஆர் திங்கிங் எபவுட் பிறக்றிகல்.

    குறிப்பு : நண்பர் ஜெயபாலனுக்கு குறும்பு அதிகம். அவலை நினைத்துக்கொண்டுதான் என் கட்டுரையை பிரசுரித்திருப்பார் என நினைக்கின்றேன். என்ன செய்வது இப்போது எந்த தமிழ் பேசுபவனிடமும் உலக்கையும் இல்லை. உரலும் இல்லை.

    Reply
  • த ஜெயபாலன்.
    த ஜெயபாலன்.

    நண்பர் யஹியா வாஸித்க்கு
    வாசகர்களுடைய கருத்துக்களுடன் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    சிலேடையாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள் //நண்பர் ஜெயபாலனுக்கு குறும்பு அதிகம். அவலை நினைத்துக்கொண்டுதான் என் கட்டுரையை பிரசுரித்திருப்பார் என நினைக்கின்றேன். என்ன செய்வது இப்போது எந்த தமிழ் பேசுபவனிடமும் உலக்கையும் இல்லை. உரலும் இல்லை.// அர்த்தம் புரியவில்லை.

    எனக்கு உங்கள் கட்டுரையை அண்மையில் நண்பரொருவர் அனுப்பி வைத்திருந்தார். பல்வேறு பக்கங்களில் இருந்து வரும் மின் அஞ்சல்களையும் வாசித்துவிட்டு அழிப்பது வழக்கம். இதனையும் வாசித்துவிட்டு அழிப்பொம் என நினைக்கையில் கட்டுரையின் உள்ளடக்கும் என்னை வாசிக்கத் தூண்டியது. அது ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டு சிலரால் வாசிக்கப்பட்டு இருக்கலாம் என்றாலும் அதனை தேசம்நெற் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

    தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையே இவ்வாறான கருத்துப்பரிமாறல்கள் ஆரோக்கியமான சமூக உறவை ஏற்படுத்தும் என்பது எனது நம்பிக்கை. நீங்களும் உடன்படுவீர்கள் என்று நம்புகிறேன். முடிந்தால் தொடர்ந்தும் எழுதுங்கள்.

    த ஜெயபாலன்.

    Reply