”சரத் பொன்சேகா தமிழ் மக்களின் பிரச்சினையை நன்கு உணர்ந்து உள்ளார்.” – ரிஎன்ஏ பொன்சேகாவிற்கு ஆதரவு – இரா சம்பந்தன்

Sambanthan_Rஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று நண்பகல் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதற்கான அறிவிப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது நான்கு ஆண்டு ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் விடயத்தில், உரிய முனைப்புகளை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படையில் அவரை ஆதரிக்கவில்லை எனக்குறிப்பிட்ட அவர், தேர்தலை பகிஷ்கரித்தால், அதன் மூலம் மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.  எனவே அவர் மீண்டும் பதவிக்கு வருவதை தடுக்கக்கூடியவர் சரத் பொன்சேகா என்ற அடிப்படையிலேயே அவருக்கு ஆதரவளிக்க முன்வந்ததாக சம்பந்தன் தெரிவித்தார்.

இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவை விட பொன்சேகா தமிழர்களின் பிரச்சினையை நன்கு உணர்ந்திருப்பதாக சம்பந்தன் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக அக்கறையுடன் பரிசீலித்துள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு பல தடவைகள் சந்தித்து பரிசீலித்தது.

தமிழ்ப் பேசும் மக்களின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் புத்திஜீவிகள், சிரேஷ்ட பிரஜைகள், இளைஞர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் கருத்துக்களை அறிவது குறித்து அவர்களுடன் தீவிர கலந்துரையாடல்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்தியுள்ளது.

புராதன வேட்பாளர்களான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நாம் கலந்துரையாடல்களை நடத்தி, தமிழ்ப் பேசும் மக்களின் உடனடித் தேவைகள் குறித்தும் தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுவது குறித்தும் அவர்களின் அபிப்பிராயங்களைத் தெரிந்து கொண்டோம்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையை இத்தேர்தல் மூலம் கோரி, நாட்டு மக்களிடம் விண்ணப்பித்திருப்பதற்கு ஆதரவளிக்க முடியாது. ஆதரவளிக்க கூடாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த அபிப்பிராயமாகும்.

இம்முடிவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது நான்கு ஆண்டு கால பதவிக்காலத்தின் செயற்பாடுகளை வைத்தும் அவருடன் நாம் நடத்திய பல கலந்துரையாடல்களின் பெறுபேறுகளை வைத்தும் எடுக்கப்பட்டதாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பது நாட்டுமக்களின் சிறந்த நலன்களை பேணுவதற்கும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பதற்கும் உதவாது என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகும்.

தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றைக் காண்பது குறித்து ஒரு முன்னேற்றமும் காணப்படாத அதே வேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தீர்மானங்களும் செயற்பாடுகளும் பின்னோக்கியதாகவே காணப்படுகின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில், அம்மக்களின் கலாசார மற்றும் மொழி அடையாளத்தைப் பாதுகாப்பதற்குத் தீங்கு விளைவிப்பதாகவே அமைகின்றன.

இரகசியமாகவும் வெளிப்படைத் தன்மையற்றவிதமாகவும் அமையும் இந்த நடவடிக்கைகள் தமிழ்ப் பேசும் மக்களுக்குச் சமத்துவத்தையும் நீதியையும் மறுக்கும் செயலாகவே உள்ளது. அத்துடன் தமிழ்ப் பேசும் மக்களின் இன, மத, விகிதாசார நலன்களைப் பாதிக்கும் வகையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், தேசிய பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பதற்குக் குந்தகத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் நாட்டில் வாழ்கின்ற மக்களிடையே இன ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கும் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையாது.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை தேசிய பிரச்சினைக்குக் காண்பதில் ஏற்படும் தாமதம், தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றுப் பாரம்பரிய வாழ்விடம் தொடர்பான மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலை நடைமுறைபடுத்துவதாகும்.

தமது தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை முற்றாகப் புறக்கணித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை முற்றாக ஓரங்கட்டி, தன்னிடம் அடிபணிந்து போகத் தயாராக இருக்கும் நண்பர்களைத் தமிழ் மக்களின் தலைவர்களாக வெளிகாட்டும் நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார்.

அவ்வாறான நபர்களுடன் மாத்திரமே வேலை செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளை மாத்திரமல்ல, தமிழ் மக்களையும் அவர் புண்படுத்தியுள்ளார். இவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத இந்நிலவரம் தொடரவே உதவும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், கே.சிவனேசன் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரின் அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாதபடி அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் இரு தடைவைகள் தடுக்கப்பட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக மற்றும் செயற்திறனை உள்ளடக்கிய செயற்பாடுகள் மீதான பாரதூரமான தாக்குதல்கள் குறித்து அரசாங்கத்தின் அணுகுமுறை உணர்ச்சியற்றதும் அக்கறையற்றதுமாக அமைந்திருந்தது.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விடயங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு கவலை தருவதாக உள்ளது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகள் மற்றும் கட்டாயப்படுத்தி காணாமற் போகச் செய்தல் ஆகியன சர்வ சாதாரணமாக இடம் பெற்றிருக்கின்றன. இவற்றால் மோசமாகத் தமிழ் மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சி அதிகார அமைப்புக்கள் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சட்டம், ஒழுங்கு நடைமுறைப்படுத்தல் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளன. ஊழல் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. சட்டம் – ஒழுங்கு மற்றும் நல்லாட்சி ஆகியன கீழ் மட்டத்திற்குச் சென்று விட்டன.

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இத்துக்ககரமான நிலவரத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் பேசும் மக்கள் தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காரணங்களுக்காகத் தான் மேலும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையைத் தருமாறு ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கையை மறுப்பது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகோபித்த முடிவாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு அரசியல் அமைப்புக்களைக் கொண்ட ஓர் அணியாகும். தமிழ்ப் பேசும் மக்களின் கூடிய நலன் கருதி செயற்படுவது அதிமுக்கியமானது எனக் கருதப்படுகிறது.

ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்ப்பதனால் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 Comments

  • meerabharathy
    meerabharathy

    த.தே.கூ இன் முடிவு அரசியல் அடிப்படையில் மிகவும் முட்டாள்தனமான முடிவு….
    காலம் காலமாக வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தும் இன்னும் பாடம் கற்காமல் இருப்பது மிகவும் கவலைக்கிடமானது…
    இந்த “மா” மனிதர்களுக்கு “மாமனிதர்” பட்டம் கொடுக்கு அவர்களுடைய முன்னால் தேசிய தலைவர் இல்லாதாலையே இவ்வாறான ஒரு முடிவுக்குச் சென்றுள்ளனர்…
    சிறிலங்காவின் இரண்டும் தேசிய கட்சிகளும் இனவாத கட்சிகளே…
    இவர்களை ஆதரிப்பதால் எப்பொழுதும் ஒரு நன்மையும் யாருக்கும் கிடைக்கப் போவதில்லை…
    ஒரு மாற்றத்திற்காக கூட புதிதாக சிந்திக்க மறுக்கின்றனர் இந்த பழைமைவாதிகள்….
    தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் உரிமைகள் தொடர்ந்தும் உரமாக ஓலிக்கவேண்டுமாயின்…
    தமிழ் பேசும் மனிதர்கள் தமது முதல் வாக்கை சிவாஜிலிங்கத்திற்கும்
    இரண்டாவது விருப்பு வாக்கை விக்கிரமபாகுவிக்கும் அளிப்பதே ….
    ஒரு மாற்றம்விருப்புவோரின் தெரிவாக இருக்கும்…
    இதேபோல் சிங்களம் பேசும் மனிதர்கள்….
    ஒரு மாற்றத்தை விரும்புவர்களாயின்….
    தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் உரிமைகளை மதிப்பார்களாயின் ….
    தமது முதல் வாக்கை விக்கரமபாகுவிற்கும்….
    இரண்டாவது விருப்பு வாக்கை சிவாஜிலிங்கத்திற்கும் அளிக்கவேண்டும்….
    இந்த வாக்குகள்…இரண்டு இனவாத தேசிய கட்சிகளை நிராகரிக்ககும் வாக்குகளாகவே கருதப்படும்…
    வெல்லப்போவது மகிந்தவே என்பது உறுதியானது…
    இதில் தமிழ் பேசும் மனிதர்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக தொடர்ந்தும் உறுதியுடன் நிற்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதே இந்த தேர்தல் மூலம் நிலைநிறுத்தப்படவேண்டும்….
    இல்லையேல்…
    தமிழ் பேசும் மனிதர்கள் மீண்டும் அரசியல் அடிப்படையில் மண்கவ்வுவதை யாராலும தடுக்கமுடியாது….
    நன்றி
    மீராபாரதி

    Reply
  • எதிர்வு
    எதிர்வு

    உங்களுக்கு பிடிக்காத முடிவு முட்டாள்தனமானதாகப்படும் என்பது பேரறிவே. உலகமே கை விட்ட நிலையில், இன்று தமிழ் மக்கள் தெரிய வேண்டியது இரு எதிரிகளில் ஒருவரை. களத்தில் நின்றபடி, ஒரு காத்திரமான, நடைமுறைக்கு உகந்த முடிவை எடுக்க வேண்டியது தலைவனுக்கு உரிய கடமை. அந்த மக்கள் இனி யாருக்கும் புதிதாக புரிய வைக்க வேண்டியதில்லை.

    Reply
  • raalahaami
    raalahaami

    இது கூத்தமைப்பின் இறுதி அறிக்கை. இவர்களின் பதவிகள் இத்துடன் அஸ்தமனமாகின்றபடியால் இவர்களின் எந்தவித முடிவும் தமிழ் மக்களுக்கு நன்மை தரப்போவதில்லை. சரத் பொன்சேகா ஆட்சிக்கு வருவார் தாங்கள் மீண்டும் பதவிக்கு வரலாம் என இவர்கள் பகற்கனவு காண்கின்றார்கள். மக்கள் மடையர்களல்ல, நல்ல பாடம் புகட்டுவார்கள்.

    Reply
  • thurai
    thurai

    இவர்களின் இந்த முடிவு, புலிகள் இயக்கம் பயங்கரவாதமானதென உலகிற்கு அடித்துச் சொல்கின்றது. இதுவரை பயந்து வாழ்ந்த அரசியல் வாழ்வை பயமின்றி வாழவைக்கும், புலிகளை அழித்த சரத் பொன்சேகாவிற்கு நன்றிக்கடன் செலுத்தும் சம்பந்தர்.

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    உலக்கை தேய்ந்து உளிப்படியான கதையே. தமிழ்மக்களுக்கு தவறான பாதைக்காட்டி சிங்களமக்களுடன் வெறியுணர்வை ஏற்படுத்தி இரு இனத்திற்கும் நீண்ட பகையுணர்வை ஏற்படுத்தி விட்டவர்கள் புலிகளுக்கு முந்திய தமிழ்தலைவர்கள். அதைவிட ஒரு படிமுன்னேறி கூடிவாழ்ந்த தமிழ்முஸ்லீம் சமூகத்தையும் தமது பாரம்பரிய வாழ்விடங்களில்லிருந்தும் துரத்தியடித்தவர்கள் புலிகள்.
    இந்தப்புலிகளுக்கு சாமரைவீசி வரவேற்றும் இறுதிப்பயணத்திற்கும் நிலப்பாவாடை விரித்து சங்குஊதி வழியனுப்பி விட்டவர்கள் இந்த சம்பந்தன் தலைமையில்லான கூட்டமைப்பினர். இவர்களின் கடந்தகால அரசியலில் எந்த வியூகத்தையும் யாரும் காணமுடியாது. அப்படி ஏதாவது தெரிந்தால் யாராவது புலப்படுத்துங்கள் நாம் அறிந்து கொள்வதற்கு.

    கடந்த அழிவுகளில்லிருந்து நாம்படித்த பாடம் ஐக்கிய இலங்கையை உருவாக்குவதை விட வேறு வழியில்லை. இதுவே கண்ணுக்கு முன்னால் தெரியும் ஒரே பாதை.சம்பந்தன் கோஷ்றி கவலைப்படுவது தமிழ்மக்களின் வாழ்வையோ பெற்றுக்கொள்ளப் படபோகிற உரிமைகளையோ அல்ல. தமது மலட்டுஅரசியல் தமிழ்மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போவதையே. இதற்கு இடையூறாக இருப்பவர்கள் பிள்ளையான் முரளீதரன் சிறீதரன் சித்தாத்தன் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களே. இவர்கள் பலம்பெறும் போது இந்த கூத்தமைப்பு தமிழ்மக்களின் நினைவுகளில் இருந்தஇடம் இல்லாதுசுழல் காற்றுக்கு அகப்பட்ட சருகுபோல இல்லாதொழிந்து போய்விடுவர். இந்த பீதியே இவர்களை சரத்திற்குபின்னால் பதுங்கும்படி நிறுத்தியிருக்கிறது.

    இதோ! தேசம்நெற் வாசகர்களுக்கு ஒரு தீர்கதரிசனம். புலிகள் ஏழுமாதத்திற்கு முன்பாக அழித்தொழிகப்பட்டார்கள் என்றால் கூத்தமைப்பு எட்டு மாதத்திற்கு பின்பாக அழித்தொழிக்கப் படப்போகிறது. இனிவருங்காலங்களில் தமிழ்மக்கள் முற்றுமுழுக்க புதியதொருபாதை நோக்கி நடைபோடுவர். அதில் அரசியல்மரணங்கள் இருக்கப்போவதில்லை.

    Reply
  • rohan
    rohan

    ”இவர்களின் எந்தவித முடிவும் தமிழ் மக்களுக்கு நன்மை தரப்போவதில்லை. சரத் பொன்சேகா ஆட்சிக்கு வருவார் தாங்கள் மீண்டும் பதவிக்கு வரலாம் என இவர்கள் பகற்கனவு காண்கின்றார்கள். மக்கள் மடையர்களல்ல, நல்ல பாடம் புகட்டுவார்கள்.”

    சரி – ஆனால், ஊரில் உள்ளவர்களுடன் பேசியிருக்கிறீர்களா? அங்கு எவருமே மகிந்தவுக்கு வாக்களிக்கும் நோக்கில் இல்லை. மக்கள் நோக்கு தெரிந்தே கூட்டமைப்பு முடிவு எடுத்திருக்கிறது. சுதந்திர வாக்களிப்பு நடந்தால் தமிழ் பிரதேசத்தில் – குறிப்பாக வடக்கில் – மகிந்த மானம் கெட்டுத் தோற்பார். தமது சீர் கெட்ட வாழ்வுக்கு மகிந்ததான் காரணம் என்பதில் தமிழர் தெளிவாக இருக்கிறார்கள் என்பது நான் அறிந்த ஊர்ச் செய்தி!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ரோகண் அறிந்த ஊர்ச்செய்தி அப்படி!. தமிழ்மக்கள் அறிந்த வரலாற்று தெளிவு இப்படி!.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கூத்தமைப்பு சம்மந்தர் இதனைத் தான் அறிவிப்பாரென்று, தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே தெரிந்து விட்டது. அந்த முடிவை உடனடியாகச் சொல்ல முடியாமல் மனச்சாட்சி உறுத்தியதாலோ என்னவோ, இழு இழு என்று இழுத்து இப்போ ஒருவாறு சொல்லி விட்டார். ஆனால் தாம் அந்த முடிவெடுத்ததற்கு அவர் கூறும் காரணங்கள் தான் நகைப்பிற்கு இடமானவை. 4 வருட ஆட்சியில் மகிந்த தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லையாம். இந்தக் குறுகிய காலத்தில் புலிகளின் பயங்கரவாதத்தை எவருமே எதிர்பார்க்காதவாறு முடிவிற்கு கொண்டு வந்து, நாட்டில் தமிழர்களின் மீது தொடர்ந்து வந்த விமானத் தாக்குதல்களையும், செல்லடிகளையும் முடிவிற்குக் கொண்டு வந்து அந்த மக்களின் பதட்டத்தைக் குறைத்ததே ஒரு சாதனை தான். பொதுவாகவே கூத்தமைப்பினருக்கும் அரசியல் செய்ய நாட்டில் ஒரு குளப்ப நிலை, புலிகளைப் போல வேண்டுமென்று நினைப்பவர்கள். அதற்கு சரத் வந்தால்த் தான் முடியுமென்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்தக் கனவில்த் தான் இப்போ சரத்திற்கான ஆதரவை தெரிவிக்கின்றனர். இன்று சரத் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலோ அல்லது அதற்கு முதலிலேயோ கூட சரத்தால், தமிழர்கள் சார்பாக எந்தவிதமான தீர்வை எட்ட விரும்புகின்றாரென்பதோ அல்லது அது பற்றிய ஆராய்வோ சொல்லப்பட்டதே இல்லை. அதனால் கூத்தமைப்பினர் சரத்தை ஆதரிக்க எடுத்த முடிவு, மக்களின் விடிவிற்காகவோ அல்லது ஒரு தீர்வை நோக்கிய ஆதரவாகவோ இல்லையென்பதும், முழுக்க முழுக்க தமது இருப்பிற்காக எடுக்கப்பட்ட முடிவென்பதும் நன்றாகவே தெரிகின்றது.

    சென்ற முறை கூட மகிந்த தமிழர்களின் பெருண்பான்மை வாக்கைப் பெறாமல்த் தான் அரசமைக்க முடிந்தது. அதே நிலைமை தற்போது வந்தாலும் இறுதியில் வெற்றி பெறப்போவது மகிந்த என்பது உறுதியாகவே அறிய முடிகின்றது. நாளை மகிந்த வென்று வரும்போது அவருடன் எந்த முகத்துடன் கூத்தமைப்பினர் பேச்சுவார்த்தை நடாத்தப் போவார்கள்??

    Reply
  • பல்லி
    பல்லி

    ஜயா யார் யாரோ எல்லாம் தமிழ் மக்களின் பிரச்சனைகளையும் உணர்வுகளையும் புரிந்து வத்திருப்பதை எண்ணிபார்க்கும் நீங்களும் உங்களுடன் கூடிய 21பேரும் தமிழர் நிலையை எண்ணியோ அல்லது நிலைகண்டோ செயல்பட மாட்டோம் என அடம் பிடிப்பது எந்த விதத்தில் நியாயம்; யாழ்பாணத்தில் மகாநாடு எல்லாம் நடத்தி அமர்களப்படுத்துவதாக சொல்லுகிறார்கள்; ஏதோ ஒரு மார்க்கமாய்தான் இருக்கு நடக்கட்டும் நடக்கட்டும்;

    Reply
  • பல்லி
    பல்லி

    :://தமது முதல் வாக்கை விக்கரமபாகுவிற்கும்….
    இரண்டாவது விருப்பு வாக்கை சிவாஜிலிங்கத்திற்கும் அளிக்கவேண்டும்//
    இது நீங்கள் தமிழருக்கு இடும் கட்டளையா?? அல்லது யோசனையா?? கேள்விகளுக்கும் பதில் தந்து பளகுங்கள்;

    Reply
  • john
    john

    /தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் உரிமைகள் தொடர்ந்தும் உரமாக ஓலிக்கவேண்டுமாயின்…
    தமிழ் பேசும் மனிதர்கள் தமது முதல் வாக்கை சிவாஜிலிங்கத்திற்கும்
    இரண்டாவது விருப்பு வாக்கை விக்கிரமபாகுவிக்கும் அளிப்பதே ….
    ஒரு மாற்றம்விருப்புவோரின் தெரிவாக இருக்கும்…
    இதேபோல் சிங்களம் பேசும் மனிதர்கள்….
    ஒரு மாற்றத்தை விரும்புவர்களாயின்….
    தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் உரிமைகளை மதிப்பார்களாயின் ….
    தமது முதல் வாக்கை விக்கரமபாகுவிற்கும்….
    இரண்டாவது விருப்பு வாக்கை சிவாஜிலிங்கத்திற்கும் அளிக்கவேண்டும்….
    இந்த வாக்குகள்…இரண்டு இனவாத தேசிய கட்சிகளை நிராகரிக்கும் வாக்குகளாகவே கருதப்படும்…//

    இது மீராபாரதியின் கருத்து. இதில் இடையால் ஒரு துண்டை வெட்டி:://தமது முதல் வாக்கை விக்கரமபாகுவிற்கும்….இரண்டாவது விருப்பு வாக்கை சிவாஜிலிங்கத்திற்கும் அளிக்கவேண்டும்// என்று மீராபாரதி ஓடர் போட்ட மாதிரி பல்லி எழுதுவதன் தேவை என்னவோ??

    அவர் கட்டளை இடவில்லை தனது யோசனையைத்தான் சொல்லியிருக்கிறார்h என்பது தெளிவாகத் தெரிகிறதே.

    Reply
  • kaduppu
    kaduppu

    பல்லியின் மொழியில் தினாவெட்டாப் பதிலளிப்பதாயிருந்தால் தமிழருக்கு இடும் கட்டளைதான் இது!

    Reply
  • பல்லி
    பல்லி

    // என்று மீராபாரதி ஓடர் போட்ட மாதிரி பல்லி எழுதுவதன் தேவை என்னவோ??//
    அப்படி ஒன்றும் இல்லை; இருந்தால் உங்களுக்கு கடிதம் போடுகிறேன்; ஏன் இதை கேள்விக்குரியவர் கேக்க மாட்டாரோ;
    //அவர் கட்டளை இடவில்லை தனது யோசனையைத்தான் சொல்லியிருக்கிறார்க் என்பது தெளிவாகத் தெரிகிறதே.//
    பல்லி கேள்வி கேட்டால் john பதில் போகிறது என்ன விளையாட்டு இது ஒரு கோமாளிக்கு வாக்கு போட சொல்லுவது தமிழருக்கு கொடுக்கும் யோசனையோ? நாம் யாருக்கு வேண்டுமானாலும் குத்தலாம்(வோட்டைதான்) ஆனால் மற்றவர்களை அதுவும் அங்கு வாழும் மக்களை இவருக்கு குத்துங்க (இதுவும் வோட்டைதான்) என சொல்வது சரியானதா? ஏன் அந்த மக்கள் சிந்திக்கவே மாட்டார்களா??

    Reply
  • satan
    satan

    சம்பந்தர் சறத்திற்கு வக்காளத்து வாங்குவதான முடிவு தமிழ்மக்களின் நன்மைகளுக்காக அல்ல.இது சுயநலம்.கருணாவும்,டக்ளசும் கூட இருக்கும் வரை மகிந்தாவை சம்பந்தரால் ஏமாற்ற முடியாது.மக்களையும் ஏமாற்ற முடியாது.சிலர் கூறுவதுபோல் மக்களுக்கு மகிந்தாவில் ஏன் வெறுப்பு வரவேண்டும்.30 வருடகால சர்வாதிக ஆட்சியிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுத்து நிம்மதியாக வாழ வழி செய்ததில் என்ன தவறு இருக்கின்றது? தேர்தலில் மகிந்த வென்றால் சம்பந்தர் சாதாரண மனிதராகிவிடுவார்.பதவியும் பகட்டான வாழ்வும் பறந்து போய் விடும்.அதன் பின்பு இவர்களால் என்னதான் செய்யமுடியும். இவரால் இவருடைய சொந்த ஊருக்குத்தான் போகமுடியுமா? சம்ப்ந்தர் ஒன்றும் முட்டாளல்ல.பிரபாகரனுக்கே விலாங்கு விளையாடியவர்.அதனால்தான் இன்றும் அவர் அவராகவிருக்கிறார். ஆனால் கருணாவை ஏமாற்ற இவரால் முடியவில்லை.அதனால்தான் இவர் சரத் பொன்சேகாவுக்கு யாள்றா போடுகின்றார்.மாற்றம் தேவையாம். யாருக்கு.தனக்கா?

    Reply
  • john
    john

    கேள்விக்குரியவரும் கட்டுரைக்குரியவரும்தான் பதில் அளிக்க வேண்டும் என்ற நடைமுறையே தேசத்தில் பின்பற்றப் படுவதாக எனது பார்வையில் தெரியவில்லை. கட்டாயமும் இல்லை. நான் கண்டுகொண்ட பார்வையை நான் பதியலாம். அதுக்காக அவர்தான் இவரோ என்ற சந்தேகம் வேண்டாம் பல்லி. மீராபாரதியின் கருத்து நீங்கள் எழுதியதுபோல ஒரு கட்டளையாக எனக்கத் தெரியவில்லை என்றேன்.

    ஒவ்வொருவரும் தம்தம் கருத்தை தாம் யாருக்கு வாக்களிப்பது நன்று என்ற தமது அபிப்பிராயத்தை சொல்வதற்கு இடமளிக்க வேண்டும்.

    போட்டியிடும் அரசியல்வாதிகள் தாம் எதற்காகப் போட்டியிடுகிறோம் என்றதை மக்களுக்குச் சொல்வார்கள். அதேபோல் பொது மக்களம் தம்தம் கருத்தை முன்வைப்பார்கள். யாருக்கு வாக்களிப்பது என்பது வாக்களிக்கச் செல்பவரே தீர்மானிக்கப் போகிறார்கள்.

    உங்கள் தெரிவும் இன்னொருவர் தெரிவும் முரண்படுவதால் கருத்தாளரையோ கட்டுரையாளரையோ போட்டியிடும் நபரையோ தரக்குறைவாக எவரும் விமர்சிக்காதீர்கள். இதில் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள். அரசியல்க் கருத்தை முரனைக் கதையுங்கள். அதில் தப்பில்லை.

    Reply
  • பல்லி
    பல்லி

    ஜோன் உங்கள் பதில்களுக்கு நன்றி;இருப்பினும்!!!
    //கேள்விக்குரியவரும் கட்டுரைக்குரியவரும்தான் பதில் அளிக்க வேண்டும் என்ற நடைமுறையே தேசத்தில் பின்பற்றப் படுவதாக எனது பார்வையில் தெரியவில்லை//
    அப்படி பல்லி சொன்னேனா???
    :://. நான் கண்டுகொண்ட பார்வையை நான் பதியலாம்//
    அதுதானே பின்னோட்டம்;அதில் என்ன தப்பு;
    //அவர்தான் இவரோ என்ற சந்தேகம் வேண்டாம் பல்லி.//
    மீரா ஒரு எழுத்தாளர் என்பதால் அவரது எழுத்துக்கள் பல்லி அறிவேன் ஆகவே அதிலும் எனக்கு சந்தேகம் இல்லை;
    // மீராபாரதியின் கருத்து நீங்கள் எழுதியதுபோல ஒரு கட்டளையாக எனக்கத் தெரியவில்லை என்றேன்//
    இந்த இடத்தில்தான் எனது கருத்து தொடங்குகிறது; அதனாலேயே அதுக்கான பதிலை மீராவிடம் இருந்து எதிர் பார்த்தேன்; மீராவின் பார்வை உங்களுடனோ அல்லது என்னுடனோ ஒத்து போகவேண்டுமா? இல்லையே ஆகையால்தான் மீராவை பதில் தரும்படி கேட்டேன்;
    //யாருக்கு வாக்களிப்பது என்பது வாக்களிக்கச் செல்பவரே தீர்மானிக்கப் போகிறார்கள்//
    பல்லியை பொறுத்த மட்டில் தீர்மானிக்க வேண்டும் என்பதே;
    //ஒவ்வொருவரும் தம்தம் கருத்தை தாம் யாருக்கு வாக்களிப்பது நன்று என்ற தமது அபிப்பிராயத்தை சொல்வதற்கு இடமளிக்க வேண்டும்.//
    இது தனிமனித சுகந்திரம்தான் தப்பில்லை; ஆனால் இன்னாருக்குதான் குத்துங்கள் என்பது தேவையா என்பதே பல்லியின் கேள்வி?
    :://உங்கள் தெரிவும் இன்னொருவர் தெரிவும் முரண்படுவதால் கருத்தாளரையோ கட்டுரையாளரையோ போட்டியிடும் நபரையோ தரக்குறைவாக எவரும் விமர்சிக்காதீர்கள். //
    உன்மைதான் கட்டுரையாளர்களும் தாம் எழுதிவிட்டோம் படியுங்கள் என்பது போல் இல்லாமல் குலன் ஜெயபாலன் சோதி போல் பல்லிபோல் விளக்கம் குறைந்த பின்னோட்டகாரர்க்கு விளக்கம் தரலாமல்லவா? அங்கே விமர்சனம் விவாதமாக மாறி சரியான நிலைபாட்டை அடைய வாய்ப்புகள் உள்ளனவே;
    //இதில் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள்.//
    இதைதானே 30வருடம் செய்தோம் அதில் இருந்து விடைபெறத்தான் முயல்கிறோம்; அதையே தொடர்வோம்;
    //அரசியல்க் கருத்தை முரனைக் கதையுங்கள். அதில் தப்பில்லை.//
    அதைமட்டுமே எழுதுகிறோம்; அதில் சில தனிமனிதர் சிக்குவதால் அது அரசியல் அல்ல என ஆகிவிடுமா..
    தொடரும்பல்லி;;;;;;

    Reply
  • meerabharahty
    meerabharahty

    நட்புடன் நண்பர்களுக்கு.
    நமது அவசரம் (மன) அழுத்தம் ஆத்திரம்…அனைத்தும்…
    நமது எழுத்துக்களில் பிரதிபலிப்பது தவிர்க்க முடியாது…
    இவ்வாறான ஒரு நிலையில் ஒருவர் எழுதும் பொழுது…
    குறிப்பாக பிரக்ஞையற்றம் எழுதும் பொழுது…
    பயன்படுத்தும் சொற்கள் வன்முறைகொண்டதாக எழுத்தாக அமைந்துவிடுகின்றது…
    இவ்வாறான ஒரு நிலையில் ஒருவரது கையில் ஆயுதம் இருந்தால் அவரது செயற்பாடு வன்முறை கொண்ட செயற்பாடாக மாறிவிடுகின்றது…
    இதனால்தான் சமூகமாற்றத்திற்காக போராடும் ஒவ்வொருவரும்…
    அதற்காக செயற்படும் அதேவேளை சுயமாற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் செயற்படவேண்டிய அவசியம் உள்ளது…
    இந்தடிப்படையில் எனது எழுத்து ஒருபுறம் எனது கருத்தாக இருந்தாலும் வன்முறை கொண்டதாக அமைந்துவிட்டது உண்மையானதே…
    இன்னும் கவனம் எடுத்து பிரக்ஞையாக எழுதியிருக்கலாம்…
    ஆனால் அவ்வாறு செயற்படாமல் விட்டதற்கு மேற்கூறியவையும் சில காரணங்களாகும்…
    நியாயப்படுத்தவில்லை…தவறு தவறுதான்…

    மேலும் இத் தேர்த்ல் தொடர்பாக நடைபெறும் விவாதம்…தனிப்பட்ட முறையில் எனக்கு மனஊளைச்சலையும் ஆத்திரத்தையுமே அதிகம் தருகின்றது….
    தமிழ் பேசும் மனிதர்களின் விடுதலைப்போராட்டம் தோற்றதற்கு முக்கிய காரணம்…
    ஒரு உறுதியாக அரசியல் அத்திவாரம் இல்லாமை என்பதை யாரும் மறுக்கமுடியாது…
    இதனால் தான் பேரினவாதிகளின் நடாத்தும் அரசியல் நடாகத்தில் தமிழ் பேசும் மனிதர்களும் அவர்களது அரசியலும் பகடைக்காயாக உருட்டப்பட அதை உருட்டும் நடிகர்களாக தமிழ் பேசும் அரசியல் வாதிகள் செயற்படுகின்றனர்…
    தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் பேரினவாத அரசியலில் தங்கியிருத்தலையே காலம் காலம் மாக வேறுவேறு வழிகளில் மேற்கொண்டு வந்திருக்கின்றது…
    இந்தடிப்படையிலையே த.தே.கூ பின் சரத் பொன்சேக்கா
    மீதான இன்றைய நம்பிக்கையை பார்க்கவேண்டியிருக்கின்றது…

    இந்த நம்பிக்கை எந்தடிப்படையில் என்பது எனக்கு புரியவேயில்லை…
    ஆனால் இது ஒரு ஆரோக்கியமான முடிவு இல்லை என்று மட்டும் உறுதியாக நம்புகின்றேன்….

    மேலும் நான் ஒரு முழுநேர எழுத்தாளர் இல்லை…
    அப்பஅப்ப என் மனதில் தோன்றுகின்றதை எழுதுகின்றேன்….

    பல்லிபோன்று கடந்தகால அனுபவங்களைக் கொண்ட பலர் தொடர்ச்சியாக பின்னுட்டம் மட்டுமே எழுதுபவர்களாக இருக்கின்றீர்களா….அல்லது வேறு பெயர்களில் எழுதுகின்றீர்களா?

    அவ்வாறு எழுதவில்லையாயின்…
    தங்களது அனுபவங்களை ஐயர் அவர்கள் இனியொருவில் எழுதுவது போன்று தங்களது அனுபவங்களை ஒரு ஆரோக்கியமான கட்டுரையாக எழுதலாமே…
    இது ஒரு பணிவான வேண்டுகோள் மட்டுமே…
    கட்டளையல்ல….

    மேலும் நாம் இன்னும் பொதுப்புத்தி மட்டத்திலையே செயற்படுகின்றோம்…அதன் வெளிப்பாடுதான் இன்றைய ஐனாதிபதி தேர்தல் தொடர்பான விவாதமும் என்பது ;கவனிக்கத்தக்ககது…
    இதிலிருந்து முறித்துக்கொண்டு எப்பொழுது பிரக்ஞைபூர்வமாக
    செயற்படுகின்றோமோ…அன்று தான் நாம் நமது சொந்தக் காலில் நின்று அரசியல் செய்வோம் என நம்புகின்றேன்…
    நன்றி
    மீராபாரதி

    Reply