வடக்கில் மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக, கூடாரத் துணி வகைகளும் ஏனைய உபயோகப் பொருட்களும் இந்தியாவிலிருந்து விரைவில் எதிர்பார்க்கப்படுவதாகக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து உபயோகப் பொருட்கள் கிடைக்கப்பெற்றதும் கிளிநொச்சியில் மீள்குடியேற்றப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, கரைச்சி ஆகிய பகுதிகளில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்று அரச அதிபர் கூநினார்.
பூநகரி, கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுகளில் ஏற்கனவே மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்த சகலரையும் ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னர் மீள்குடியமர்த்தும் இலக்குடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குடியிருப்புப் பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிவில் நிர்வாகத்தைச் சீராக மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மீள்குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் தீர்ந்து வருவதால், அவை விரைவில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்படுகின்றன. அவை வந்து சேர்ந்ததும், தயார் நிலையில் உள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவார்களென்றும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.