800 விக்கெட்டைக் கைப்பற்றுவதுடன் கிரிக்கெட் வாழ்வை முடிக்கவுள்ளேன் முரளி கூறுகிறார்

muttiah.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன், சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டித் தொடரில் காயமடைந்து ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், அவரது வருங்கால திட்டம் என்ன என்று கேட்டதற்கு பதிலளிக்கையில், மேற்கிந்தியாவுக்கு எதிராக இலங்கையில் நடைபெறவிருக்கும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி 800 விக்கெட்டுகளை கடந்து டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி வரை ஒருநாள் போட்டியில் விளையாட விரும்புகிறேன்.  ஆனால்,இவையெல்லாம் அப்படி நடக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். அணியில் நான் எந்த வகையில் தேவையாக இருக்கிறேன் என்பது முக்கியமாகும். சுயநலத்துடன் செயற்பட நான் விரும்பவில்லை. நல்லபடியாக பந்து வீச முடியுமென்ற நிலை இருந்தால் மட்டுமே நான் தொடர்ந்து விளையாடுவேன். இல்லையெனில் மகிழ்ச்சியுடன் விடைபெறுவேன்.

ஏனெனில் எனக்கு பல்வேறு கவுண்டி அணிகளிலிருந்தும் சென்னையில் இருந்தும் விளையாட அழைப்பு வந்த வண்ணமுள்ளன. எனது உடல் எந்தளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். டெஸ்ட் போட்டியில் பந்து வீச எனது உடல் ஒத்துழைப்பது கடினம்.உடல் ஒத்துழைக்காவிட்டால் என்னை விளையாட நிர்ப்பந்திக்க மாட்டேன்.20 ஓவர் போட்டியில் எனது நாட்டுக்காக விளையாடவில்லை. ஒருநாள் போட்டியில் பந்து வீசுவதை சமாளிக்க முடியுமென்று நினைக்கிறேன் என்றார்.

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமாக இருப்பது ஏன் என்று கேட்டதற்கு, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எந்த அணிக்கும் எளிதான காரியமல்ல. 1997 ஆம் ஆண்டில் எங்கள் அணி நல்ல நிலையிலிருந்த போது கூட இந்தியாவில் நடந்த 3 டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் டிரா தான் செய்தோம். இந்தியாவில் ஆடுவது என்பது எப்போதும் கடினமான விடயமாகும். தனது சொந்த மண்ணில் எப்படி ஆட வேண்டுமென்பது இந்திய அணியினருக்கு நன்கு தெரியும். இந்தியாவைப் போல் நாங்களும் எங்கள் சொந்த மண்ணில் பலமான அணியாகும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *