சனல்4 விவகாரத்தால் எழுந்துள்ள சவாலுக்கு முகம் கொடுக்க அரசு தயார் – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

lankashootingvideo.jpgவடபகுதி மோதல்களின் இறுதிக்கட்டத்தின் போது பதிவு செய்ததாகக் கூறப்படும் சனல் 4 ஒளிப்பதிவு குறித்து நீதிவிசாரணைக்கு புறம்பான அல்லது தன்னிச்சையான மரணதண்டனை விவகாரங்களைக் கையாளும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரனின் கருத்துகளை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதுடன், இக்குற்றச்சாட்டுக் குறித்து உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளவும் தயாரெனவும் அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம சனல் 4 ஒளிப்பதிவு குறித்து பேராசிரியர் அல்ஸ்ரனின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் இவ்விடயம் குறித்து எத்தகைய சவால்களுக்கும் அரசாங்கம் முகம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சுயாதீன அறிக்கையாளர் அல்ஸ்ரனின் குற்றச்சாட்டுக்கள் ஆதார மற்றவையெனவும் அமைச்சர் அங்கு குறிப்பிட்டார். இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரோகித போகொல்லாகம தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்; இலங்கையில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒளிப்பதிவானது சனல் 4 இல் ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து அரசு பல்வேறு அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றது. இந்நிலையில் மூன்று சுயாதீன அறிக்கையாளர்களைக் கொண்டு சனல் 4 வீடியோ குறித்த விசாரணைகளை மேற்கொண்ட பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் அது குறித்த தனது இறுதி அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார்.

ஆனால், இந்த ஒளிப்பதிவுகள் எந்தவிதமான ஆதாரமும் அற்றவை ஆகும். இருந்தாலும் இதுகுறித்து சர்வதேச அளவில் சர்ச்சை நிலவுவதால் இந்த ஒளிப்பதிவு குறித்த உள்ளக விசாரணைகளை நாம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். அதேவேளை, இவ்விடயம் குறித்த சந்திப்பொன்றுக்கு பிலிப் அல்ஸ்ரனிடம் சனல் 4 ஒளிப்பதிவு குறித்து ஆரம்ப சர்ச்சைகள் எழுந்தபோது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர் அதனை நிராகரித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவரிற்கு அழைப்பு விடுத்து பதில் கடிதம் அனுப்பியுள்ளோம். சனல் 4 விவகாரத்தினால் தோன்றியுள்ள அனைத்து அழுத்தங்களுக்கும் முகம்கொடுக்க அரசு தயாராக உள்ளது. இதேவேளை, இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருத்தலானது அந்நாட்டின் படையினர் மக்கள் என்ற அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள பாரதூரமான அவமானமாகும். இதனால், இச்சம்பவத்தின் உண்மைத்தன்மையினைக் கண்டறிவதற்குரிய உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதேவேளை, இந்த விசாரணைகளில் ஐ.நா. அதிகாரிகளின் பங்களிப்பு குறித்து ஆராய்ந்து வருகின்றோம். அத்துடன் மனித உரிமை மீறும் செயல்களை அரசு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையெனவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Kusumpu
    Kusumpu

    உலகத்தில் எதையும் இல்லை தெரியாது என்பது மிக மிக இலகுவானதும் பிரச்சனைகளை மூடிமறைப்பதற்கும் ஒழிந்து கொள்வதற்கும் பயிற்சிக்கும் வார்த்தைகள் ஆகும். இருக்கு என்று நிரரூபிப்பது தான் மிக மிகக் கடினமானது. இலங்கை அரசு என்று தைரியமாக நேர்மையுடன் எதை ஒத்துக் கொண்டது சரியானதை நிரூபித்தது?

    Reply
  • பல்லி
    பல்லி

    தேர்தலுக்கு முன்பா? பின்பா,,???அதையும் சொல்லுங்கள்

    Reply