புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 713 பேர் இன்று (09) சனிக்கிழமை வவுனியா செட்டிக்குளத்தில் நடைபெறும் வைபவமொன்றில் வைத்து விடுவிக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகம் தெரிவித்தது. பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு இல்லாதவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்னாயக்க தெரிவித்தார்.
வவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இவர்களிடையே 18 வயதுக்குக் குறைவானவர்கள் சுமார் 100 பேரும் அடங்குவர். ஏனையவர்கள் தொடர்பான தகவல்களும் திரட்டப்பட்டு வருவதோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பற்ற வர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். ஏனையவர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட உள்ளனர்.
படையினரிடம் சரணடைந்துள்ள சுமார் 11,544 புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 18 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு அற்றவர்கள் ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டவர்கள், பங்கர் வெட்டுதல் போன்ற பணிகளில் பலாத்காரமாக ஈடுபடுத்தப்பட்டவர்கள் போன்றோர் விடுவிக்கப்படுபவர்களிடையே அடங்குவதாக புனர்வாழ்வு ஆணையாளர் பணியகம் தெரிவித்தது.
புனர்வாழ்வு அளிக்கப்படும் புலிகள் இயக்க முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு பயங்கரவாதச் செயற்பாடுகளில் எத்தகைய தொடர்பு இருந்தது என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றது.
இவர்களில் நேரடித் தொடர்பற்றவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் தயாரத்னாயக்க கூறினார்.
புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களிடையே பட்டதாரிகள் 22 பேரும் பட்டதாரி மாணவர்கள் 148 பேரும் அடங்குவர். இவர்களில் பட்டதாரி மாணவர்களுக்கு யாழ். பல்கலைக் கழகத்தில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோருக்கு தமது முன்னைய தொழிலைத் தொடர்ந்து செய்யவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.