லண்டனில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தை தகர்க்கப் போவதாக, அந்த விமானத்தில் பயணித்த மூவர் மிரட்டல் விடுத்ததை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 25ம் திகதி, அமெரிக்க விமானத்தை நைஜீரியாவைச் சேர்ந்தவர் தகர்க்க முயன்றதையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல நாடுகளின் விமான நிலையங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு எமிரேட்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் 331 பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் இருந்தவர்களில் 58, 48 மற்றும் 36 வயது மதிக்கத்தக்க மூவர் விமானத்தை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து, விமான பணியாளர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். விமானம் மேலே எழுவதும் நிறுத்தப்பட்டது. உடன் பொலிஸார் விரைந்து வந்தனர். விமானத்தை சுற்றிலும் ஒன்பது பொலிஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. விமானத்திற்குள் அதிரடியாக நுழைந்த பொலிஸ் அதிகாரிகள், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மூவரையும் கைவிலங்கிட்டு, வெளியே இழுத்துச் சென்றனர். பின்னர், விமானம் முழுவதும் சோதனையிடப்பட்டது. வெடிகுண்டுகள் எதுவும் உள்ளனவா என மோப்ப நாய்கள் மூலமும் பரிசோதிக்கப்பட்டது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. அதன் பிறகு விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் விமானம் புறப்படுவது மூன்று மணி நேரம் தாமதமானது.
இதேபோல, அட்லாண்டாவிலிருந்து சான்பிரான்ஸிஸ்கோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில், போதையில் பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்று உள்ளே பூட்டிக் கொண்டார். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் கொலராடோ விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. பின் அந்நாட்டு பொலிஸார் விமானத்துக்குள் புகுந்து போதை நபரைக் கைது செய்தனர்.