பொன்சேகாவின் 10 அம்சத்திட்டத்தில் நம்பிக்கை வைத்தே தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வருகை – ஜே.வி.பி.

jvp.jpgஜெனரல் சரத் பொன்சேகாவின் பத்து அம்ச வேலைத்திட்டத்தில் நம்பிக்கை வைத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வந்ததாக தெரிவித்த ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸநாயக்க, சம்பந்தனுக்கும் ஜெனரல் பொன்சேகாவுக்குமிடையில் எந்தவிதமான இரகசிய உடன்படிக்கையும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதி உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்குவதாக ஜெனரல் பொன்சேகா அறிவித்த போது கூச்சல் போட்ட விமல் வீரவன்ச ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதே அறிவிப்பை செய்திருப்பதையிட்டு என்ன செய்யப் போகிறார்? எனவும் ஜே.வி.பி.கேள்வி எழுப்பியுள்ளது. ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினரும் ஜெனரல் பொன்சேகாவின் இணைஊடகப் பேச்சாளருமான அநுரகுமார திசாநாயக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா பத்து அம்சத்திட்டத்தின் அடிப்படையிலேயே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கின்றார். அதனடிப்படையிலேயே சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கிறார்.

ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் இதே 10 அம்ச வேலைத்திட்டத்தினை முன்வைத்தே பேசினார். இந்த வேலைத்திட்டத்தின் மீது திருப்தி கண்ட நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்தது. இது தவிர சம்பந்தனுடனோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ ஜெனரல் பொன்சேகாவோ, அவருக்கு ஆதரவளிக்கும் கட்சிகளோ எந்தவிதமான உடன்படிக்கைகளையோ, இரகசியப் பேச்சுகளையோ நடத்தவில்லை.

சில ஊடகங்கள் தெரிவிக்கும் விதத்தில் எந்த இரகசிய ஒப்பந்தங்களும் எவருடனும் ஜெனரல் பொன்சேகா செய்து கொள்ளவில்லை. அதேசமயம் ஒரு சிங்கள வார இதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் வடக்கு,கிழக்கு இணைப்புக்கு ஜெனரல் இணங்கியதாகவும் அதனாலேயே அவரை ஆதரிக்க முன்வந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தெரிவித்ததாக குறிப்பிட்டிருக்கின்றது. அவ்வாறான எந்தத் தகவலையும் தான் கூறவில்லை என சம்பந்தன் மறுத்திருக்கிறார். சில ஊடகங்கள் மீது அரச தரப்பு தமது ஆதிக்கத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது. அந்த ஊடகங்களும் அதற்குத் துணைபோகும் நிலை காணப்படுகின்றது. எந்தவொரு ஊடகத்தையும் நாம் கட்டாயப்படுத்த முற்படவில்லை. ஊடகங்கள் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்பதையே நாம் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *