ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நேற்றுக்காலை ஆரம்பமானது. பொலிஸ் மற்றும் முப்படையினர் உட்பட தபால் மூல வாக்களிப்புக்கு தகுதிபெற்றவர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டதாக பொலிஸ் மற்றும் இராணுவப் பேச்சாளர்கள் தெரிவித்தனர்.
தபால் மூல வாக்களிப்புகள் இன்றும் நடைபெறுகிறது. தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற அனைவரும் தமக்குரிய கடமை நிலையங்களில் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதியின் பிரகாரம் வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. பொலிஸ் தலைமையகம் உட்பட நாட்டிலுள்ள 427 பொலிஸ் நிலையங்களிலும் நேற்றுக்காலை வாக்களிப்புகள் நடைபெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருனாரட்ண தெரிவித்தார்.
இதேபோன்று இராணுவத் தலைமையகம், பலாலி படைத் தலைமையகம் உட்பட அனைத்து முப்படைத் தலைமையகங்கள், முகாம்களிலும் தபால்மூல வாக்குப் பதிவுகள் நடைபெற்றதாகவும் இன்றும் தபால் மூல வாக்குப் பதவுகள் நடைபெறும் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற எவரேனும் வசதியீனம் காரணமாகவோ, அல்லது வேறேதும் விசேட காரணமாகவோ, நேற்றோ, இன்றோ வாக்களிக்க வருகைதராவிடின் இயன்றளவு விரைவாக அவ்வாறானவர்களுக்கு வாக்களிக்க வசதிகளை செய்து கொடுத்து வாக்களித்ததன் பின்னர் தபால் மூல வாக்களிப்பு உறைகளை காப்புறுதி அஞ்சல் மூலம் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்க அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அத்துடன் நேற்றும் இன்றும் தபால் மூல வாக்குப் பதிவுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையிலும் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் முன்னிலையில் வாக்களிப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.
இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 4 இலட்சத்து 58 ஆயிரத்து 154 பேர் விண் ணப்பித்திருந்தனர். இவர்களுள் 4 இலட்சத்து 1,118 பேர் தகுதி பெற்றிருந்தனர். 57,036 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.