ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் இரு வாரங்களே உள்ள நிலையில்,அதிகளவில் சுயாட்சிக் கோரிக்கையை முன்வைத்திருக்கும் தமிழர்களுக்குப் பல சலுகைகளை வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வந்திருக்கிறார். சிறுபான்மைத் தமிழ் சமூகமானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கமான பங்களிப்பைச் செலுத்தக்கூடிய நிலையில், அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
சட்டவாக்க சபையில் தீர்மானங்களை எடுப்பதற்கு தமிழர்களுக்கு அதிகளவுக்கு பாக்கியம் உள்ளதாகவும் நீண்டகால கோரிக்கையான அதிகாரப்பகிர்விற்கு தீர்வு காண்பதற்குமான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு நிருபர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை குறிப்பிட்டது.
யுத்தத்தின் முடிவானது நெருக்கடி முடிவடைந்துவிட்டதென அர்த்தப்படாது. தமிழர்களின் தேவைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணும் தேவை எனக்கு உள்ளது என்று அலரிமாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.
புதிய சட்டவாக்க ஏற்பாடுகளில் சிறுபான்மைத் தமிழருக்கு அதிகளவு பிரதிநிதித்துவம் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.இவை எல்லாவற்றுக்கும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அத்துடன், சர்வசன வாக்கெடுப்பு மூலம் மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சாதாரணமான மக்கள் அமைதியாக வாழ விரும்புகின்றனர். ஆனால், அரசியல் தீர்வுக்கான கோரிக்கையும் தேவையும் அங்குள்ளது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதேவேளை, 40 ஆயிரம் கோடி ரூபாவை வடக்கை புனரமைக்க செலவிடப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த 40 ஆயிரம் கோடி ரூபாவில் (4 மில்லியன் டொலர்) அரசின் நிதியும் உதவி வழங்குவோரின் நிதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ரயில் பாதைகள், மின்சக்தி,நீர்ப்பாசன உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக 2010 இல் இந்தத் தொகை செலவிடப்படும் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கிழக்கு அபிவிருத்திக்கு 3 ஆண்டுகளில் செலவிடுவதற்காக 3 பில்லியன் டொலர்களுக்கான (30 ஆயிரம் கோடி ரூபா) தொகைக்கு நாம் ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்