கரீபியன் தீவு நாடான ஹைத்தியில் இன்று காலை 7.3 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் அதிபர் மாளிகை, ஐ.நா.அலுவலகம், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.
இதில் இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பல இடங்களில் மக்கள் இடிபாடுகளில் சிக்கி அபயக்குரல் எழுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் உயிர் சேதம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மீட்புப் படையினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவுக்கு கிழக்கே உள்ள தீவு நாடான ஹைத்தியை உலுக்கியுள்ள இந்த நலநடுக்கம், அருகில் இருக்கும் கியூபாவின் சான்டியாகோ உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஐநா அமைதி நடவடிக்கைகளுக்காக ஹைத்திக்கு சென்றிருந்த 950 இலங்கை ராணுவப்படை வீரர்களை நிலநடுக்கத்திற்கு பின்பு தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்தது. பின்னர் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் உதயநாயணக்கரா அறிவித்துள்ளார்.