சிறையி லிருந்து சிரேஷ்ட ஊடகவியலாளர் திஸநாயகம் பிணையில் விடுதலை செய்யப்பட்டதற்கு ஊடகவியலாளர் பாதுகாப்பு சமூகம் வரவேற்றுள்ளது.எனினும் அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாதென்பது உட்பட கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளமையை இட்டு தாங்கள் வருத்தமடைவதாகவும் பாதுகாப்பு சமூகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில் திஸநாயகம் விடுவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், விசாரணையின்றி தேங்கிக்கிடக்கின்ற இதுபோன்ற ஏனைய வழக்குகளையும் விசாரிக்க உத்தரவிடுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அந்த அமைப்பு கோரியுள்ளது.
கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட “சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் வழக்கு விசாரணை இன்னும் கிடப்பில் கிடக்கிறது. ஒரு வருட காலமாகியும் இதுவரை எவ்விதமான முன்னேற்றமும் அந்த வழக்கில் காணப்படவில்லை. எனவே இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் கண்காணிக்க வேண்டுமென்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.