தமிழ்க் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நேற்று முடிவு

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் கைதிகளில் பெரும்பாலானவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டதைக் கைவிட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் டி. ஆர். டி. சில்வா தெரிவித்தார். மெகசின் சிறைச்சாலையில் உள்ள சுமார் 74 கைதிகள் மாத்திரம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களும் தமது போராட்டத்தைக் கைவிடத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மேற்படி கைதிகளில் உரிய சாட்சியம் எதுவுமின்றி உள்ள சுமார் 600 பேர் அடுத்த வாரம் விடுவிக்கப்படுவர் என சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளார். ஆனால், சில அரசியல்வாதிகளின் தூண்டுதலால் திடீரென இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார். அவர்களை விடுதலை செய்யவோ வழக்குத் தொடரவோ தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதி நீதி, மறுசீரமைப்பு அமைச்சர் வி. புத்திரசிகாமணி; நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தினூடாக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கைதிகள் திடீரென உண்ணாவிரதம் நடத்தியதால் அந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக கூறினார்.

சந்தேகத்தின் பேரில் கைதான ஒரு பகுதியினர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் செயற்பாட்டை குழப்பாதிருந்தால் விரைவில் தமிழ்க் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுவிடும் என்றும் கூறினார்.

தங்களை விடுதலை செய்யவோ தங்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்குமாறு கோரி கொழும்பு மெகசின், சீ. ஆர். பி., வெலிக்கடை, யாழ்ப்பாணம், அநுராதபுரம், கண்டி, மட்டக்களப்பு அடங்கலாக நாட்டின் பல்வேறு சிறைகளில் உள்ள சுமார் 577 தமிழ்க் கைதிகள் கடந்த 5ஆந் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.  இவர்களுடன் தொடர்ச்சியாக நடத்திய பேச்சுவார்த்தைகளையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார். நாடுபூராவும் 750 தமிழ்க் கைதிகள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 670 பேர் சந்தேகத்தின் பேரில் கைதானவர்களாகும். இவர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்தவோ விடுவிக்கவோ சட்ட மா அதிபர் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, ஒரு சில அரசியல் கட்சிகளின் தூண்டுதல்களுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதில் எதுவித பயனும் ஏற்படாது எனவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *