இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சூரிய கிரகணமான ‘கங்கண சூரியகிரகணம்’ நேற்று யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பாகங்களில் பார்க்கக் கூடியதாக இருந்தது. கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, அம்பாந்தோட்டை, காலி, கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்கள், பதுளை உட்பட மலையகப் பகுதிகளில் சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடிந்ததென பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
ழுமையான சூரிய கிரகணம் வட்டவடிவமான ஒளிர்கீற்றுக்களால் அழகாகக் காட்சியளித்தது. நண்பகல் 12.20க்குப் பின்னர் சூரிய கிரகணம் படிப்படியாக ஏற்படத் தொடங்கியதும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மப்பும் மந்தாரமுமான நிலை காணப்பட்டது. நண்பகல் ஒரு மணியளவில் சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டதோடு, வட்டவடிவமான ஒளிக்கீற்றுக்களைக் காண முடிந்தது. கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் பல் வேறு சாதனங்கள் மூலம் சூரிய கிரகணத்தைப் பார்த்து ரசித்தனர்.
பலர் கண்களுக்கு விசேட கண்ணாடிகளைப் பயன்படுத்தியதோடு வீடியோ படம் எடுத்ததைக் காணக் கூடியதாக இருந்தது. சூரிய கிரகணத்தையிட்டு கோயில்களில் விசேட பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பள்ளிவாசல்களில் நேற்று சூரிய கிரகணத் தொழுகைகளும் விசேட மார்க்கச் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. பாடசாலைகளில் மாணவர் வரவு மிகவும் குறைவாகவே இருந்தது.
இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் 1.11 மணிக்கு உச்சத்தை அடைந்தது. அந்த நேரத்தில் கன்னியாகுமரி பகுதியில் சில வினாடிகள் சூரியன் முழுமையாக மறைந்து காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னர் சூரியனை மறைத்த நிலவு மெல்ல விலக ‘ரிங் ஆப் பயர்’ என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வு ஏற்பட்டது.
ராமேஸ்வரம் மற்றும் தனுஷ் கோடியிலும் கிரகணம் நன்கு தெரிந்தது. திருவனந்தபுரம், நெல்லை, நாகர்கோவில், மதுரை, தஞ்சை, நாகபட்டனம் ஆகிய பகுதிகளில் பத்து நிமிடங்கள் வரை காண முடிந்தது. சூரியனை, சந்திரன் மறைக்கும் இந்த வானியல் நிகழ்வு தமிழகத்தில் 11.05க்கு துவங்கி பிற்பகல் 3.15க்கு முடிவடைந்தது.
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணமான இது வானில் நடக்கும் மிக அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம். காலை 10.44 மணிக்கு மத்திய ஆபிரிக்காவில் இருக்கும் கென்யாவில் கிரகணம் தொடங்கியது. மாலையில் சீனாவில் உள்ள மஞ்சள் கடலில் கிரகணம் முடிவடைகிறது.
இந்தியாவில் முதலில் திருவனந்தபுரத்தில் கிரகணம் தெரிய ஆரம்பித்து மதுரை போன்ற தென் மாட்டங்களிலும் கிரகணத் தினை நன்றாக காண முடிந்தது. கன்னி யாகுமரி, தனுஷ்கோடி, கடற்கரை பகுதிகளில் இந்த நிகழ்வை 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக பார்த்தனர். மாலைதீவில் சுமார் 11 நிமிடங்களுக்கு கிரகணம் தெரிந்தது. இதனால் ஆராய்ச்சியின் நிமித்தம் அங்கு விஞ்ஞானிகள் குவிந்திருந்தனர்.