பெரும் பூகம்பம் ஏற்பட்ட ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோருக்கு அவசர உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்க்க தாங்கள் போராடிவருவதை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தினால் ஏற்பட்டுள்ள கடுமையான அழிவுகள் நிவாரணப் பொருட்களையும் கருவிகளையும் கொண்டு சேர்ப்பதென்பதை மிகவும் சிரமமாக்கியுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது. இருபது லட்சம் பேர் வரையிலானவர்களுக்கு உணவு உதவி வழங்க ஐ.நா. எண்ணம் கொண்டுள்ளது என்றாலும் தற்போது வெறும் நான்காயிரம் பேரை மட்டுமே அதனால் சென்றடைய முடிந்துள்ளது.
அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பலான கார்ல் வின்சன் ஹெட்டியை சென்றடைந்துள்ளது. அதிலிருந்த ஹெலிகாப்டர்கள் தலைநகருக்கு உணவுப் பொருட்களின் விநியோகத்தை ஆரம்பித்துள்ளன.