முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களை 500 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து விரும்பும் துறையில் தொழிற்பயிற்சி

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் அனைவரையும் அவர்கள் முன்னெடுக்க விரும்பும் துறைகளின் அடிப்படையில் 500 பேர்களாகப் பிரித்து, அவர்களுக்கு சொந்த இடங்களுக்கு அருகில் புனர்வாழ்வு வழங்க தீர்மானித்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.

இவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவத ற்காக யாழ்ப்பாணத்தில் 4 இடங்களும், வவுனியாவில் 5 இடங்களும், வெலிக்கந்தையில் 3 இடங்களும், திருகோணமலையில் 3 இடங்களும், மட்டக்களப்பில் 4 இடங்களுமாக 20 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றில் மெனிக்பாமில் உள்ள நலன்புரி முகாம்களில் 4 புனர்வாழ்வு நிலையங்கள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார். வவுனியா பம்பைமடுவில் ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில் அனைவரும் 500 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடித் துறை, விவசாயத் துறை, கணனிசார் துறை, மிருகவளர்ப்பு, தையல் துறை என பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டு, இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களில் பலர் முன்னர் மீன்பிடித் துறை, விவசாயத் துறை போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டவர்களாவர்.

சிறுவயதில் புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டதால் கற்க முடியாமல் போனவர்களில் தொடர்ந்து படிக்க விரும்புவோருக்கு கற்பிப்பதற்கும் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதவிர இவர்களுக்கு ஆங்கிலமொழி கற்பிக்கப்ப டுவதோடு இசை, நடனம் ஆகிய துறைகளிலும் ஈடுபட வசதிகள் அளிக்கப்படுவதாக ஆணையாளர் கூறினார். புனர்வாழ்வு பெறும் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, சிலருக்கு வெளிநாட்டில் தொழில் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

புனர்வாழ்வு செயற்பாடு முடிந்தபின் இவர்களுக்கு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று தாம் பயிற்சி பெற்ற துறையில் ஈடுபட சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளது. புனர்வாழ்வு பெற்றுவரும் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள், எதிர்காலம் பற்றி நம்பிக்கையுடனும் சிறந்த மன நிலையுடனும் உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

புனர்வாழ்வு செயற்பாடு முடிந்த பின்னர் ஒவ்வொரு நபரினதும் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்ட பின் ஜனாதிபதி நியமிக்கும் நீதிபதிகள் குழுவின் சிபார்சின்படி விடுவிக்கப்பட உள்ளனர்.

தற்பொழுது 10, 832 பேர் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். இவர்களில் 2,500க்கும் அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர். 2,500க்கும் அதிகமானவர்கள் கிளிநொச்சியையும், 2,000க்கும் அதிகமானவர்கள் முல்லைத்தீவையும், சுமார் 1,000 பேர் வவுனியாவையும், சுமார் 500 பேர் மட்டக்களப்பையும், 500க்கும் அதிகமானவர்கள் மன்னாரையும், சுமார் 500 பேர் திருகோணமலையையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *