நில நடுக்கத்தால் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலி கொண்ட ஹைட்டி தீவில், இன்று 6.1 ரிக்டர் அளவிலான பின்அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில், இன்று மாலை 4.33 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி காலை 6.03) தலைநகர் போர்ட்-அ-பிரின்ஸில் இருந்து வடமேற்கே 35 மைல் தொலைவில், பூமிக்கடியில் 13.7 கி.மீ ஆழத்தில் பின்அதிர்வு மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இதனால் பீதியடைந்து தெருக்கள், சமவெளிப் பகுதிகளுக்கு வந்ததாகவும், பாதி இடிந்த நிலையில் இருந்த கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஹைட்டியில் உயிரிழந்தனர். உலகளவில் 2வது மிக மோசமான நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தும் நிதியுதவி அளித்ததுடன், தங்கள் நாட்டு மீட்புக்குழுவினரை ஹைட்டி அனுப்பியுள்ள நிலையில் சக்தி வாய்ந்த பின்அதிர்வு இன்று ஏற்பட்டுள்ளது.