இடம்பெயர்ந்தவர்கள் உட்பட சகலருக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பு -தபால் மாஅதிபர் அறிவிப்பு

election_box.jpgஇடம் பெயர்ந்தவர்கள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள வாக்காளர்களுக்கு, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நேற்று (21) வரை 93% நிறைவு செய்யப்பட்டுள்ளதாகத் தபால் மாஅதிபர் எம். கே. பி. திசாநாயக்க தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின்படி சகல வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு ள்ளதாகக் கூறிய தபால் மா அதிபர், முகவரி தவறின் காரணமாக வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், அருகிலுள்ள தபாலகங்களுக்குச் சென்று தமது வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று தபால் மாஅதிபர் கூறினார்.

2008ஆம் ஆண்டில் வாக்காளர்களாகத் தம்மைப் பதிவு செய்து கொள்ளாதவர்களுக்கு வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறவில்லையாயின் அதற்கு தபால் திணைக்களம் பொறுப்பல்ல. அது வாக்காளர்களின் தவறாகும். வாக்காளர் பட்டியலில் உள்ளவாறு கிடைக்கப்பெற்ற அனைத்து வாக்காளர் அட்டைகளும் விநியோகிக்கப்படும் என்றும் தபால் மாஅதிபர் கூறினார்.

அதேவேளை வட மாகாணத்திற்கு வாக்காளர் அட்டைகள் தாமதமாகக் கிடைக்கப்பெற்றதால், அவற்றை விநியோகிக்கும் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்ததாக வட மாகாண பிரதித் தபால் மாஅதிபர் வி. குமரகுரு தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் 100% நிறைவடைந்துள்ளன. நிவாரணக் கிராமங்களில் தபாலகங்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு நேரடியாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டதாகவும் குமரகுரு தெரிவித்தார். அதேநேரம் மக்கள் மீளக்குடியேறியுள்ள பகுதிகளிலும் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *