வட,கிழக்குக்குள் முஸ்லிம்களுக்கிருந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்குமே முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. இதனைப் பேரம் பேசும் சக்தியாக மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் கட்டிக்காத்தார். எனினும் இப்போது அது திசைமாறிச் சென்று கொண்டிருக்கின்றது. சந்தர்ப்பத்திற்கேற்ப முடிவெடுக்கத் தெரியாத நிலையில், அக்கட்சி திண்டாடுகின்றது. மர்ஹும் அஷ்ரப்பின் தலைமைத்துவத்திற்குப் பின் அதன் போக்கே மாறியுள்ளது.
இவ்வாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியும் வீடமைப்பு அமைச்சருமான பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். மக்கள் தோட்ட முகாமைத்துவப் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எம்.எம்.அம்ஜித் தலைமையில் மருதமுனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வீடமைப்பு அமைச்சரின் இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.உவைஸ், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கல்முனைப் பிராந்திய ஆலோசகர் இசட், ஏ.எச்.ரஹ்மான், முன்னாள் எம்.பி. அலிசாஹிர் மௌலானா, முன்னாள் பிரதிமேயர் அசாத்சாலி உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் பேரியல்; யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சுதந்திரமான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்திய பின்னரும் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். சமூகத்தைக் காட்டிக் கொடுத்து சுயநலம் கருதிய நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.