2010 ஜனாதிபதித் தேர்தலும் தமிழர்களும்: பேரின்பம் பரமானந்தம்.

electionபேரினவாத அரசாங்கம் சுதந்திர இலங்கையின் சிங்களவர்களுக்கு அடுத்த பெரும்பான்மை இனமான தமிழர்களது நியாயபூர்வமான உரிமைகளை காலம்காலமாக மறுத்தே வந்துள்ளது. இது இன்று உலகம் அறிந்த உண்மையே ஆயினும் இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் நிற்பவர்கள் ஆரியச் சிங்கள பௌத்தர்களாக இருக்கின்றபோதும் இவர்களும் கடந்தகால ஜனாதிபதிகள்போல் இருவருமே காலத்தைக் கடத்தி தமிழர்களின் சமஅந்தஸ்தை நிராகரித்து அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத்த முற்படுவதையே இந்தத் தேர்தல்மூலம் தமிழ் மக்கள் அறிந்துள்ளார்கள்.

ஆனால் இந்தத் தேர்தலானது துட்டகெமுனு- எல்லாளன் சண்டை முடிந்து மிகநீண்ட இடைவெளிக்குப் பின் பிரபாகரன்-ஜெயவர்த்தனாவினால் ஆரம்பிக்கப்பட்ட சண்டை முடிவுக்கு வந்து நடக்கும் முதலாவது வரலாற்றுத் தேர்தலாகும். தோல்வியடைந்த தமிழர்களின் வாக்குகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் களத்தில் நிற்கும் இருவருமே சிங்களவர்களாக இருப்பதால் சிங்கள மக்களின் வாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டுப் போகும் நிலையில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் எப்பொழுதும் ஒரு ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் ஒரு அரிய சந்தர்ப்பம் தமிழர்களையே சாரும் என்பதில் ஜயமில்லை. அதாவது சிங்களவர்களைப்போல் இந்த இரு பிரதான சிங்களக் கட்சிகளிலும் நிரந்தர தமிழ் அங்கத்தவர்களைக் கொண்ட தமிழ் வாக்குவங்கி இல்லாதிருப்பதே காரணமாகும். இதன் விளைவுதான் இன்று தமிழர்களின் அரசியல் மிகவும் பலவீனமாக இருக்கின்ற பொழுதும் ஜனாதிபதித் தேர்தல் மட்டும் ஓரளவுக்கேனும் பேரம்பேசும் நிலையில் இருக்கிறது. ஆகவே தமிழர்களின் அபிலாசைகளை நிலைநாட்டக்கூடிய ஒருவரை இனம்கண்டு அவருக்கு வாக்களிப்பதுதான் சரியான முடிவாக இருக்கமுடியும். இதை இன்றைய புலிகள் இல்லாத தமிழ் தலைமைகள் உணரவேண்டும்.

இந்தத் தருணத்தில் தமிழர்கள் தனிநாடு கோரவில்லை. இந்திய இலங்கை உடன்படிக்கையின்படி மற்ற இனங்களுக்குக் கொடுக்கின்ற உரிமையையேனும் தமிழர்களுக்கு வழங்கும்படியே அவர்கள் கோரி வருகிறார்கள். சிங்கள இனவாதத்தின் கடுமையான தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல்தான் ஆயுதம் ஏந்திப் போராட அனைத்து தமிழர் தரப்பும் களத்தில் குதித்தது. தனிநாடு தேவையில்லை தனி ஈழம் தேவையில்லை என்றநிலை பெரும்பாலும் தமிழர்கள் இன்று கூறிவரும் நிலையிலும் சுதந்திர இலங்கையின் சுதந்திர புருஷர்களாகவேனும் வாழ்வதையே அவர்கள் விரும்புகிறார்கள். அந்தவகையில் மகிந்த ராஜபக்சவிற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தும் அவரும் ஒரு தீர்வை முன்வைக்க முடியாத அளவுக்கு அவரது கரங்களும் பேரினவாதிகளால் கட்டப்பட்டு வந்தது உண்மையே.

விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தலைமைகள் நேரடியாக பல குழுக்களாக பல இயக்கங்களாக தமிழர்களின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்து வந்திருப்பதை மறைப்பதற்கில்லை. அதன்விளைவு அண்ணளவாக 39 000 புலித் தமிழ் இளைஞர்களும் மற்றைய இயக்கங்களில் அண்ணளவாக 10 000 பேரும் ஒரு லட்சம் தமிழ் பொது மக்களும் விலைமதிப்பற்ற உயிர்களையும் உடமைகளையும் இழந்தார்கள். இதற்குக் காரணமாக இருந்தவர்கள் புலிகள் உட்பட அனைத்துத் தமிழ்த் தலைமைகளும்தான் என்பதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அதில் பெரும்பங்குக்குச் சொந்தக்காரர்கள் புலிப்பாசிசம்தான் என்பது உண்மை.

புலிகள் வேறு தமிழர்கள் வேறு என்பதை அரசாங்கம் தெரிந்திரிந்தும் தமிழர்கள்மீது கடுமையான தாக்குதல்களை தொடுத்தே வந்திருக்கிறது. இந்தத் தருணத்திலேனும் அதை மறந்துவிட்டு ‘நாம் இலங்கையர்கள்’ என்ற அடைமொழிக்குள் உட்பட்டு செயல்பட சிங்களவர்களும் தமிழர்களும் முன்வர வேண்டும். சிங்களவர்களும் தமிழர்களும் மொழியால் மட்டுமே பெரும்பாலும் வேறுபட்டவர்களாகக் காணமுடிகிறது. ஆரியச் சிங்கள பௌத்தர்களும் திராவிடச் சைவர்களும் ஒரே தத்துவத்தின் இரு பிரிவுகளாக செயற்பட்டு வருகிறார்கள். உதாரணமாக கிறிஸ்தவத்தின் மாட்டின் லூதர்சிங்கின் வருகைக்குப்பின் கத்தோலிக்கர்கள் புரட்டஸ்தான் இருப்பதைப்போல் இன்னும் விரிவாகச் சொன்னால் சைவர்கள் காளி என்கிறார்கள் அதையே சிங்களவர்கள் பத்தினித்தெய்யோ- கற்புக்கடவுள் என்கிறார்கள். முருகன்- கந்தக்குமாரய்யா பிள்ளையார்- கணதெய்யோ. இப்படித் திராவிடத் தெய்வங்களை திராவிடச் சைவர்கள் வணங்குவதையும்விட கோயில்களில் பெரும்பான்மையான சிங்களவர்கள் வழிபட்டு வருவதைக் கூற முடியும். அப்படி வேறு எந்த மத வழிபாட்டுத் தலங்களுக்கும் இந்த இரு இனங்களும் செல்வதில்லை. தமிழர்களின் ஒரு பகுதியினர் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றிக் கொண்டவர்கள். திராவிடர் என்ற பதத்தில் அடங்கினாலும் அவர்கள் சைவக் கோயில்களுக்குச் செல்வதில்லை, சேர்ச்சுக்கு மட்டுமே சென்று வருகிறார்கள். ஆனால் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகிற சிங்களவர்கள் விகாரைகளுக்குச் செல்வதில்லை. சேர்ச்சுக்கு மட்டுமே சென்று வருகிறார்கள். ஆனால் எந்தவொரு திராவிடச் சைவனும் சேர்ச்சுகளுக்கோ அல்லது விகாரைகளுக்கோ சென்று வருவதில்லை. சிங்கள பௌத்தர்கள் பெரும்பாலானவர்கள் தமிழ் கோவில்களுக்குச் சென்று வழிபடுகிறார்கள்.

தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாகச் சென்று வழிபட முடியுமானால் ஏன் நமக்குள் சண்டை பகைமை தாழ்வு மனப்பான்மை சந்தேகம் கோபம். இரண்டு இனங்களும் ஒன்றுபட்டால் சுதந்திர இலங்கையின் ஆளும் வர்க்கமாக நாம் இருப்பதை யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். ஆகவே மொழி ரீதியாகவே மட்டும் பிரிந்த நாம் இருவரும் எல்லாளன் -துட்டகெமுனு சண்டை முடிந்து பிரபாகரன்- ராஜபக்ச சண்டை முடிவுக்கு வந்தபின்பும் நாம் இருவரும் இனிமேலும் பிளவுபடக்கூடாது இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்த வேண்டும்.

தமிழர்கள் இனிமேலும் இலங்கையில் சிறுபான்மையினர் என்ற நிலை எடுக்கக் கூடாது. சிங்கள மக்களுடனும் ஆட்சிக்கு வரும் அவர்களது தலைமைகளுடனும் இணைந்துதான் நிலை எடுக்க வேண்டும். டக்ளஸ் தேவானந்தா சிறீதரன் சுகுமார் முரளீதரன் கருணா அம்மான் சிவநேசதுரை சந்திரகாசன் ஆறுமுகம் தொண்டமான் போன்ற தலைவர்களைப்போல தமிழ் தேசிய கூட்டமைப்பு அன்று முடிவெடுத்திருந்தால் தமிழர்களின் வாழ்க்கையை உயர்த்தியிருக்க முடியும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் பிரச்சாரப் பீரங்கிகளாக இருந்தார்களே தவிர தமிழ் மக்களின் பிரச்சாரப் பீரங்கியாக இருக்கவில்லை. அவர்களும் புலிகளின் துப்பாக்கிக்குப் பயந்துதான் இந்த நிலை எடுத்ததாக பின்னாளில் அறியமுடிந்தது.

தமிழ் அரசியலில் புலிகள் இல்லாதது பெரும் இடைவெளியாக தமிழ்மக்கள் மத்தியில் தெரிகின்ற போதிலும் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றும் புலிசார்பு நிலையையே எடுத்து சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுக்க தமிழ் மக்களை நிர்ப்பந்தித்து வருகிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழிநடத்தும் மதிப்புக்குரிய சட்டமேதை சம்பந்தருக்குச் சொந்தமான காணிகளை (திருகோணமலை லிங்கநகர் காணிகளை) 1983ம் ஆண்டுகளில் தமிழர்கள் பிடித்துக் குடியேறிய நேரம் அவர் இராணுவ பொலிஸ் மூலம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தினார். இன்று பெரும்பான்மை இனத்தவர்கள் பிடித்து அனுபவித்து வருகிறார்கள். அவர்களை சம்பந்தரால் எழுப்ப முடியுமா. அவர்களை எந்த இராணுவத்தைக் கொண்டு எழுப்பப் போகிறீர்கள் என்பது புரியாத புதிர்.

இறுதியாக வன்னிமண்ணில் தமிழ்மக்கள் சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்பட்டுக் கொண்டிருந்த நேரம் -அதாவது சர்வாதிகாரி கிட்லரின் அரண்மனை சுற்றிவளைக்கப் பட்டிருந்ததுபோல- மூன்று லட்சம் உயிர்களைப் பற்றிக் கவலைப்படாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளைப் பாதுகாக்க யுத்த நிறுத்தம் கோரியது. இறுதி நேரம் புலிகள் மக்களை வெளியேறவிடாது தடுப்பதற்காக அவர்கள்மீது குண்டுகளைப் பொழிந்தனர். 1997ல் ஜேவிபி கலவரத்தினை நிறுத்த முயற்சி செய்தபோது தனது சொந்த இனத்தையே கொத்துக் கொத்தாக இந்திய அரசின் உதவியுடன் சுட்டுக்கொன்ற சிங்கள அரசாங்கம் நாம் மாற்று இனமாக இருந்தாலும் அந்த மூன்றுலட்சம் மக்களையும் பாதுகாப்பாக ராஜபக்ச அரசாங்கம் மீட்டது அந்த உயிர்கள் செய்த புண்ணியம் அல்லவா.

தமிழர்களே அன்று புலிகளால் கொல்லப்பட்ட மாற்று இயக்க உறுப்பினர்கள் ரெலோ புளொட் ஈபிஆர்எல்எவ் ஈபிடிபி போன்றோர்களை ராஜபக்ச செய்ததுபோல் புலிகள் அடைத்து வைத்திருந்தால் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள் அல்லவா. ஆனால் ராஜபக்சவோ அவர்களை திறந்தவெளிச் சிறைச்சாலையில் அடைத்தாலும் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் அல்லவா. அதைப் பாராட்ட வேண்டாமா.

வட கிழக்கில் பெருக்கெடுத்த குருதிநதியை அடக்கிய முதல் சிங்களத் தலைவர் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவருக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தைக் கொடுக்க தமிழர்கள் முன்வர வேண்டும். அதுவே நீங்கள் உயிர்வாழ செய்த கொடையாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Siva
    Siva

    டக்ளஸ் தேவானந்தா சிறீதரன் சுகுமார் முரளீதரன் கருணா அம்மான் சிவநேசதுரை சந்திரகாசன் ஆறுமுகம் தொண்டமான் போன்ற தலைவர்களைப்போல….. இந்த முடிவு எடுத்தவர்களால் தமிழ் மக்கள் என்ன பெற்றார்கள் என்று சொல்ல முடியமா?.. இவைகள் எல்லாம் கடந்தகாலங்களில் செய்யப்பட்டு தோல்வி கண்டவைகள் அல்லவா!! இவர்களால் தமிழரின் சுயாட்ச்சிக்கான கருத்தை கூட வெளியிடக் முடிந்ததா? அரசுடன் பேச முடிந்ததா?

    Reply