விளையாட்டு வீரர்களை அரசியல் விளம்பரங்களுக்காக பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலை மாற்றப்படல் வேண்டும் அர்ஜுன ரணதுங்க

arjuna-ranatunga.jpgகொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் விளையாட்டுத்துறையைக் கிராம மற்றும் தோட்டப் பகுதிகளுக்கும் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் நுவரெலியா சினிசிட்டா அரங்கில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் இந்த நாட்டு விளையாட்டுத்துறை இன்று அரசியல் மயப்பட்டுள்ளது. திறமை அடிப்படையில் அல்லாது அரசியல் செல்வாக்கினால் வீரர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். தேசிய சொத்துகளான விளையாட்டு வீரர்களை அரசியல் நலன்கருதி அரசியல் விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலைமை மாற்றப்படல் வேண்டும். கொழும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள கிரிக்கெட் உட்பட பல விளையாட்டுகளை எமது நாட்டின் கிராமங்களுக்கும் தோட்டங்களுக்கும் கொண்டு வருவதே எனது இலக்காகும்.

அவுஸ்திரேலியாவில் முரளிதரனுக்கு அநீதி ஏற்பட்டபோது முழு அணியையும் மைதானத்தில் இருந்து திருப்பி எடுத்தவன் நான். ஆனால், இன்று அவரது செயற்பாடுகள் கவலையளிக்கின்றன. நான் உலகக்கிண்ணத்தை ஏந்திவந்த காலத்தில் இந்த நாட்டில் தேர்தல்கள் நடந்தன. நான் அரசியல் குடும்பத்தில் வந்தவன். ஆனால், எனது கிரிக்கெட் பிரபலத்தை எனது தந்தையின் அரசியலுக்கோ அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா அவர்களுக்காகவோ நான் விற்கவில்லை. கிரிக்கெட்டை அரசியலாக்கவில்லை. ஆனால், இன்று நடப்பதென்ன என்பதை நீங்கள் ஊடகங்களில் பார்க்கிறீர்கள். நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னரே அரசியலுக்கு வந்தேன். அதுவும் யாருக்காகவும் வாக்குக் கேட்கும் விளம்பரக்காரனாக இல்லை. மக்களுக்கு தலைமை கொடுக்கும் தலைவனாகவே செயற்படுகிறேன்.

கிரிக்கெட் சபை நிர்வாகம் கிரிக்கெட் தெரியாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு ஊழல் இடம்பெறுவதற்கு எதிராக நீதிமன்றம் சென்று நீதியை வென்றெடுத்தேன். ஆனாலும், அரசாங்கம் கிரிக்கெட் சபையை அரசியல் ரீதியாகவே நடத்துகின்றன.

அரசியலில் எப்போதும் சுயமாக முடிவெடுக்கவேண்டும். அடுத்தவர் கயிற்றை விழுங்கக்கூடாது. நான் இன்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்காரர். எனது தந்தை தனது வாழ்நாள் முழுவதையும் சுதந்திரக் கட்சிக்காக அர்ப்பணித்தவர். ஆனால், இன்று அந்தக் கட்சி ஊழல்களின் கூடாரமாகிவிட்டது. அதனால்தான் நான் எதிர்க்கட்சி பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றேன். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலேயே தொடர்ந்திருப்பேன். அந்தப்பலம் பெரும் கட்சியை மீளக்கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்குள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *