கண்டி மாநகர சபை வட்டாரம் உட்பட கண்டி, வத்தேகம ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த 68 பாடசாலைகள் நேற்று மூடப்பட்டன. பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும்.
இத்தகவலை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் உட்பட 62 ஆவது சுதந்திர கொண்டாட்டங்கள் இம்முறை பள்ளேகலையில் நடைபெற இருப்பதால், முன்கூட்டியே இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு இவ்வாறு 68 பாடசாலைகளும் மூடப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“தெயட்ட கிருல” என்ற கண்காட்சிகள் இதில் முக்கிய இடம் பெறுவதால் அங்கே கடமை புரியும் பொலிஸாருக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் தங்குமிடம் வசதியாகவே இவை மூடப்படுகின்றன. ஜீ. ஸி. ஈ. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் கண்டி புஷ்பதான மகளிர் பாடசாலை தவிர நகரில் உள்ள ஏனைய பாடசாலைகளும் இதன் காரணமாக மூடிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மூடப்படும் பாடசாலைகளின் லீவு நாட்களுக்குப் பதிலாக பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியின் பின்னர் இடம்பெறும் சனிக்கிழமை நாட்களில் வகுப்புகளை நடத்தவும் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடகங்களுக்கு எடுத்துரைத்தார்.