கம்பளை பொலிஸ் பிரிவிலுள்ள தெம்பிலிகல விஹாரைக்கருகில் நேற்று (27) இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் அறுவர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
இச்சம்பவம் நேற்றுக் (27) காலை இடம்பெற்றுள்ளதுடன், இதனையடுத்து கம்பளை பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இச்சம்பவத்தில் பௌத்த மதகுரு உட்பட இருவர் பலியாகியுள்ளதுடன், காயங்களுக்குள்ளான அனைவரும் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், கம்பளை தெம்பிலிகல பகுதியில் இரு குழுக்கள் மோதிக் கொண்டதையடுத்து அருகிலுள்ள விஹாரை மீதும் கைக்குண்டொன்று வீசப்பட்டுள்ளது. இதனால் விஹாரைக்கு வெளியே நின்ற தேரரும் மற்றும் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன், அறுவர் காயமடைந்துள்ளனர்.