நாட்டின் சில பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தீவிரமடைய ஆரம்பித்திருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 25ம் திகதி வரையும் 2592 பேர் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாகப் பதிவாகியுள்ளனர் எனவும் அவ்வட்டாரங்கள் கூறின. இருந்தபோதிலும் கடந்த வருடம் டெங்கு காய்ச்சலுக்கு 34 ஆயிரத்து 896 பேர் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 345 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.
இது தொடர்பாக அவ்வட்டாரங்கள் மேலும் கூறுகையில்,
நாட்டின் சில பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. அவற்றில் கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இந்நோய் வேகமடைந்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 25ம் திகதி வரையும் கொழும்பு மாவட்டத்தில் 339 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 381 பேரும், யாழ். மாவட்டத்தில் 351 பேரும், வவுனியா மாவட்டத்தில் 259 பேரும் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாகப் பதிவாகியுள்ளனர்.
ஆகவே சுற்றாடலை சுத்தமாகவும், நீர்தேங்க முடியாதபடி உலர் நிலையிலும் வைத்திருப்பதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் நுளம்புகளால்தான் பரப்பப்படுகின்றது. அதனால் நுளம்புகள் பல்கி பெருக முடியாதபடி கழிவுப் பொருட்களை முறையாக அகற்றி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பது அவசியம் என்றார்.