அரசாங்கம் நேற்று 111 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்கியது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த்தினால் வழங்கப்பட்டது.
முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 17 வருடங்களின் பின்னர் முதற் கட்டமாக 111 பேருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது.
இவ்வைபவத்தில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நான்கு வருட கால ஆட்சியில் 33 ஆயிரம் பேருக்கு கல்வியமைச்சின் கீழ் ஆசிரியர் நியமனங்கள், கல்வி நிருவாக அதிகாரிகள் போன்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதே போன்று கடந்த ஆறு மாதங்களுக்குள் 1450 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று வழங்கப்படும் 111 மெளலவி ஆசிரியர் நியமனத்துடன் மேலும் 173 ஆங்கில மொழி மூலமான கணிதம்/ விஞ்ஞான பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படுகிறது.
இந்நியமனங்களுக்காக நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே திறைசேரி மூலம் நிதி ஒதுக்கியிருந்தமை இங்கு குறிப் பிடத்தக்கது. இந்நியமனம் ஏற்கனவே வழங்கப்பட இருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் போது நியமனம் வழங்க முடியாது என்ற சுற்றறிக்கையின்படி இன்று உங்களுக்கு வழங்கப்படுகின்றது.
இவ் ஆசிரியர் நியமனங்கள் எவ்வித அரசியல்வாதிகளின் சிபார்சுகளுக்காக வழங்கப்படவில்லை. திறமை அடிப் படையிலும், பரீட்சை திணைக்களத்தினால் நடாத்திய போட்டிப் பரீட்சையில் சித்தி யெய்தியவர்கள் மற்றும் அந்தந்த மாவட்டத்தின் வெற்றிடத்திற்கேற்ப வெட்டுப்புள்ளி அடிப்படையிலும் அவர் கள் க. பொ. த. உயர்தரம் மற்றும் வயது, மெளலவி டிப்ளோமா சான்றிதழ் மற்றும் நேர்முகப் பரீட்சையில் தோற்றி 111 பேரே தகுதி பெற்றிருந்தனர்.
அவர்களுக்கே முதற் கட்டமாக இந்நியமனம் வழங் கப்படுகின்றது. இந்நியமனம் பெற்றவர்கள் தமது நியமனக் கடிதத்தில் குறிப்பிட்ட பாடசாலையில் ஆகக் குறைந்தது ஐந்து வருடம் சேவையாற்ற வேண்டும். எவ்வித காரணமும் இன்றி நியமனங்கள் சொந்த ஊரில் கற்பிப்பதற்கு பாடசாலை மாறுதல் வழங்கப்பட மாட்டாது என்றார்.