சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள 37 சிறைச்சாலைகளைச் சேர்ந்த 1576 கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் 62வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பொது மன்னிப்பின் அடிப்படையிலேயே 1576 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான கெனட் பெர்னாட்டோ தெரிவித்தார். இந்த பொது மன்னிப்பு பெற்றவர்களில் அதிகமானவர்கள் சிறு சிறு குற்றச்செயல்கள் காரணமாகவும், தண்டப் பணம் செலுத்த முடியாமல் இருந்தவர்களும் ஆவர்.
37 சிறைச்சாலைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போதிலும் மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளிலிருந்தே அதிக கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். விடுதலை செய்யப்பட்டவர்களில் பெண் கைதிகளும் அடங்குவதாக கெனட் பர்னான்டோ மேலும் தெரிவித்தார்.
போகம்பரை சிறைச்சாலையில் சிறைக் கைதிகள் 165 பேரும், பள்ளேகல திறந்த வெளி சிறைச்சாலையில் 18 பேரும் விடுதலை செய்யப்பட்டனரென திறந்தவெளி சிறைச்சாலை அத்தியட்சகர் திஸ்ஸ ஜயசிங்க தெரிவித்தார். அதேவேளை, மட்டக்களப்பு சிறைச்சாலையில் 25 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஒரு பெண் கைதி உட்பட 25 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விடுவிக்கப் பட்டனர். பதுளையில் 69 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.பதுளை பிரதான சிறைச்சாலையிலும், பதுளையை அண்மித்த தல்தெனை புனர்வாழ்வு முகாமிலும் வைபவ ரீதியாக இந்நிகழ்வு இடம்பெற்றன. பதுளை சிறைச்சாலையில் 35 சிறைக் கைதிகளும் தல்தெனை புனர்வாழ்வு தடுப்பு முகாமிலுள்ள 34 கைதிகளும் விடுதலையாகினர்.