தண்டனை, இம்சை, இராணுவ சட்ட திட்டங்கள் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகள், ஊழல் மோசடியற்ற சேவை மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமது அரசியல் பலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எச்சந்தர்ப்பத்திலும் எத்த கைய தீர்மானத்தையும் மேற்கொண்ட தில்லையென தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டின் ஒரு அங்குல நிலத்தையாவது காட்டிக்கொடுக்கப்போவ தில்லையெனவும் தெரிவித்தார்.
இலங்கையின் 62வது சுதந்திரதின தேசிய நிகழ்வு கண்டி தலதா மாளிகை வளாகத்தில் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;
கடந்த 30 வருடங்களின் பின்னர் பயங்கரவாத அச்சுறுத்தலற்ற நாட்டில் கொண்டாடப்படும் முதலாவது சுதந்திர தினம் இதுவாகும். சுதந்திரமடைந்துள்ள நாட்டின் சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி யடைகிறேன்.
1815ம் ஆண்டு எமது சுமங்கல தேரர் பிரித்தானிய கொடியை இறக்கிவிட்டு எமது தேசிய கொடியை ஏற்றியதை நினைவு கூரும் அதேவேளை சுதந்திரத்துக்காக அர்ப்பணித்த மதகுருமார்களுக்கும் எனது கெளரவத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சுதந்திரம் என்பது பொறுப்பைக் குறிக்கின்றது. ஜனவரி 26ம் திகதி இந்நாட்டு மக்கள் கடந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைவிட பெருமளவு வாக்குகளால் என்னை வெற்றிபெறச் செய்தனர். மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து என்னிடம் மாபெரும் பொறுப்பினைக் கையளித்துள்ளனர்.
‘முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதுமான எனது முதன்மையான விருப்பு எமது தாய் நாடே’, இதனை நான் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளேன். நன்றிக்கடன் மிகுந்த நாட்டின் மக்களுடன் வாழக்கிடைத்ததிலும் இக்காலகட்டத்தில் இந்நாட்டின் தலைவராக பதவி வகிப்பதையும் நான் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன்.
தாய்நாட்டை ஒன்றிணைக்க எனக்கு உறுதுணை புரிந்த இந்நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் பொறுப்பும் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. தாய் நாட்டைப் பாதுகாத்து ஒன்றிணைத்த எனக்கு வழங்கப்பட்டுள்ள சகல இன மக்களினதும் மனங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பையும் நான் நிறைவேற்றுவேன்.
சகல இன மக்கள் மத்தியிலும் ஐக்கியத்தை ஏற்படுத்துவது உன்னதமான தொரு செயற்பாடாகும். அதனை நான் முழுமையாகப் பொறுப்பேற்றுள்ளேன். அன்று தேசபிதா டீ. எஸ். சேனநாயக்க சுதந்திரம் கிடைத்த பின்னர் கூறிய சுதந்திரமென்பது துன்பங்களைக் குறைத்து இன்பங்களைப் பெருக்குவதே என்ற கூற்றே இன்று மக்களினதும் பிரார்த்தனை யாகவுள்ளது.
1948ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்துக்கு மேலானதொரு சுதந்திரத்தை நாம் நமது தாய் நாட்டுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்தவகையில் கடந்த நான்கு வருடங்களை நாம் அர்த்தமுள்ளதாக்க முடிந்துள்ளது. இக்காலமானது தாய்நாட்டை ஒன்றிணைத்து பிரதிபலன்களை பெற்றுக் கொள்ளும் யுகமாகும். யுத்தத்தை முடி வுக்குக் கொண்டு வந்ததில் யுத்தத்திற்கான செலவு மாத்திரம் மீதமானதாகக் கருதக் கூடாது.
இப்போது உலகில் சுற்றுலாவுக்கான சிறந்த நாடாகவும், முதலீடுகளுக்கான சிறந்த நாடாகவும் இலங்கை நிகழ்கிறது. அண்மைக்கால கணிப்பீடுகளின் பெறுபேறு இலை. அத்துடன் ஆசியாவில் சீனாவுக்குச் சமமானதாக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாகவும் இலங்கை பேசப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து எட்டு மாதங்களே கடந்துள்ள நிலையில் இத்தகைய வெற்றிகளை எம்மால் ஈட்ட முடிந்துள்ளது. யுத்தம் நடைபெற்ற காலத்திலும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை நாம் முன்னெடுத்தமையே இதற்கு வாய்ப்பாகியது.
நாட்டு மக்கள் யுத்தத்தின்போது இழந்த அனைத்தையும் மீளப்பெற்றுக் கொள் வதற்காகவே மீண்டும் என்னிடம் மகத்தான பொறுப்பை வழங்கியுள்ளனர். யுத்தத்தினால் பின்னடைவு கண்ட நாட்டை வேகமாகக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
சமாதானம் மட்டுமன்றி ஊழல், மோசடி களற்ற நாடொன்றைக் கட்டியெழுப்புவதும் எம் முன் உள்ள பொறுப்பாகிறது. ஏனைய நாடுகளின் முன்னேற்றத்தைச் சொல்லிக்கொண்டு எமது மக்களை குறைகூறுவது பிரயோசனமற்றது. அந்நாட்டவர்களை பின்தள்ளி முன்னேறிச் செல்ல முடியுமென்பதை பல வெற்றிகள் மூலம் நாம் நிரூபித்துள்ளோம்.
நாட்டின் தேசிய வளர்ச்சிக்காக அரசதுறை மட்டுமல்லாது தனியார் துறையின் பங்க ளிப்பும் அவசியம் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். யுத்தத்தினால் நலி வடைந்த தனியார்துறை தற்போது மீள புத்துயிர் பெற்று வருகிறது.
நாட்டின் நல்லாட்சியை உறுதிப்படுத்தும், மக்கள் சேவையாக நம்பிக்கை மிகுந்த அரச சேவையைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வீரர்களை நான் பாதுகாப்பேன். கடந்த காலங்களில் அவர்கள் மீது நான் காட்டிய கரிசனையை மக்கள் அறிவர்.
பலமான கேந்திர நிலையமாக இலங் கையைக் கட்டியெழுப்புவோமென நாம் மஹிந்த சிந்தனைக் கொள்கையில் தெரி வித்திருந்தோம். எதிர்காலத்தில் அதனை மெய்ப்பிக்கும் வகையில் பொருளாதார, சமூக, அரசியல் பிரதிபலன்களை நாம் மக்களுக்குக் கிட்டச் செய்வோம்.
அழுகையும் துயரமுமான யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். மகிழ்ச்சியையும் கலாசாரப் பெறுமதிகளையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதில் இந்நாட்டுக் கலைஞர்களுக்கும் பொறுப்புகள் உள்ளன.
மரணபயம், வறுமை போன்ற காரணங் களினால் நாட்டைக் கைவிட்டுச் சென்றவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக இந்நாட்டுக்குத் திரும்பிவரும் நிலையில் தாய் நாட்டை நாம் கட்டியெழுப்பவேண்டும். அதற்காக நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.
வீதித் தடைகள் மட்டுமல்ல, பொரு ளாதாரத்திற்குத் தடையாக நிலவும் நிர்வாகத் தடைகளையும் நாம் சரிசெய்வது முக்கியமாகும்.
எமது தாய்நாட்டையும் நாட்டு மக்களையும் குறுகிய சிந்தனையுடன் நோக்க வேண்டாமென நான் எப்போதும் தேசிய ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கூறிவைக்க விரும்புகிறேன்.
வடக்கு, கிழக்கை மீட்டு பாரிய அபிவிருத்தியை அப்பிரதேசங்களில் முன்னெடுத்துள்ளோம். கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் திட்டங்கள் மட்டுமன்றி நாடு முழுவதிலும் தற்போது பாரிய அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஜனநாயக உரிமைகளை இழந்திருந்த வடக்கு மக்களுக்கு நாம் மீண்டும் ஜனநாயக உரிமையைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். அதுவே எமது அண்மைக்கால பெருவெற்றி எனக் குறிப்பிட முடியும். அப்பிரதேச மக்கள் சுதந்திரமாக நடமாட தமது பிரதேசத்தைக் கட்டியெழுப்ப வாய்ப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பிரஜைகளையும் வலிமைப்படுத்தக்கூடிய தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும் பட்சத் தில் மக்கள் தாம் சொந்தக் காலில் நிற் கும் நிலை உருவாகும் என்பதே எனது நம்பிக்கை.
மஹிந்த சிந்தனை எதிர்கால தரிசனத் தினூடாக அப்பிரதேசத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். அரசியல் தலைவர்கள் மக்களைத் தவறான வழியில் வழி நடத்தக்கூடாது. இந்நாட்டில் இனி மத, இன, பிரதேச நீதியான குறுகிய நோக்குடைய அரசியல் வேண்டாம். சகோதரத்துவம், சமாதானம், சகவாழ்வு, அபிவிருத்தி, சுபீட்சம் இதுவே எமது நோக்கம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்நாட்டைக் கட்டியெழுப்பு வோம்.
எமது வெளிநாட்டுக் கொள்கை சிறப்பாக உள்ளது. எமது அயல் நாடான இந்தியா, சீனாவுடனான நட்புறவைப் போலவே மேற்கத்தைய மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் எமக்கு நெருங்கிய நட்புறவுள்ளது. முதலில் நாம் எமது நாடு என்ற ரீதியில் சிந்திப்பது அவசியம்.
நான் நாட்டை முன்கொண்டதாகவே சகல தீர்மானங்களையும் எடுத்துள்ளேன். ஒருபோதும் அதிகாரத்தைத் தக்க வைப் பதற்காக நான் நாட்டைக் காட்டிக் கொடுத்ததில்லை. அதேபோன்று எமது சுயநலத்துக்காக நாட்டின் ஒரு அங்குல நிலத்தையாவது நான் காட்டிக்கொடுக்கப் போவதில்லை. அதிகாரத்தைப் பாது காப்பதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் பின்போடப்போவதுமில்லை.
அதே போன்று நாட்டை முன்னேற்றுவதற்காக எத்தகைய கஷ்டமான நிலையிலும் ஆயிரமாயிரம் தடைகளையும் தாண்டிச் செல்ல நாம் தயார். நான் நாட்டு மக்களிடம் கிரீடம் சூட்டுமாறு கேட்கவில்லை. எனினும் நாட்டு மக்களுக்கும் அவர்களது பிள்ளை களுக்கும் சுதந்திரம், செளபாக்கியம், வீரத்துவம் போன்ற கிரீடங்களை சூட்டியுள்ளேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
puligesi
பின்னீட்டீஙக தலைவா!
மாயா
தலைவர் சொன்ன தீர்க்க தரிசன வார்த்தை “மகிந்த யதார்த்தவாதி” என்பது மட்டுமே. மகிந்த , யதார்த்தவாதி மட்டுமல்ல , சீர்திருத்தவாதியும் கூட என்பதை நிரூபித்துள்ளார். சிங்களவரின் வாக்குகளால் பெரு வெற்றி பெற்ற பிறகும் ‘வடக்குக்கு வசந்தத்தையும்’ , ‘கிழக்குக்கு உதயத்தையும்’ கொண்டு வருவேன் என்று விடாப் பிடியாக சிங்கள பெளத்த தலமான கண்டித் தலைநகரில் ‘வீரபுரன் அப்பு’ வழி வந்த மகிந்த அடித்துக் கூறுவாரா? இதற்கு தில் வேண்டும்.
தெற்கு காற்று முதன் முதலாக இலங்கை முழுவதும் வீசத் தொடங்கியுள்ளது. இது இலேசாக தணியாது. எனவேதான் முட்டிப் பார்த்த அனைவரது முட்டிகளை உடைத்து , மகிந்த முன்னேறியுள்ளார். தேர்தலில் , ஊழல் , குளறுபடிகள் அனைத்தும் உண்டு. ஆனால் , அதுவும் இப்போதைக்கு தேவை. புலிகளின் பணத்தில் சரத் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கூத்தமைப்பின் முனங்கல்களுக்கு மகிந்த தலை சாய்ப்பார் என நம்பிக்கை இருந்தது. அனைத்தும் தவிடு பொடி. தமிழ் தலைமைகளை , மகிந்த கணக்கே எடுக்கவில்லையாம். அதில் முக்கியமாக கூட்டமைப்பினரை……. என்னைப் பொறுத்தவரை சிங்கள தேசத்தின் மற்றுமொரு பிரபாகரன் மகிந்த. வைரத்தை வைரத்தால்தான் அறுக்கலாம் என்பார்கள். அது இது மாதிரிதான். மகிந்தவின் காலத்திலாவது தமிழருக்கு ஏதாவது கிடைக்கட்டும். இல்லையென்றால் , இந்தக் கப்பலும் போன பின் , இனியொரு கப்பல் வர வாய்ப்பே இல்லாமல் போகலாம். இதுவும் யதார்த்தமே!
தமிழ்வாதம்
செய்தி.
கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் திட்டங்கள் மட்டுமன்றி நாடு முழுவதிலும் தற்போது பாரிய அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
கருத்து.
சிங்களவரின் வாக்குகளால் பெரு வெற்றி பெற்ற பிறகும் ‘வடக்குக்கு வசந்தத்தையும்’ , ‘கிழக்குக்கு உதயத்தையும்’ கொண்டு வருவேன் என்று விடாப் பிடியாக சிங்கள பெளத்த தலமான கண்டித் தலைநகரில் ‘வீரபுரன் அப்பு’ வழி வந்த மகிந்த அடித்துக் கூறுவாரா? இதற்கு தில் வேண்டும்.
கேள்வி.
விடாப் பிடியாச் சொல்லாட்டால் வெளி நாட்டு வருமானம் படுத்து விடாதோ?
மாயா
//கேள்வி.
விடாப் பிடியாச் சொல்லாட்டால் வெளி நாட்டு வருமானம் படுத்து விடாதோ?- தமிழ்வாதம் on February 5, 2010 6:01 pm //
இந்தியாவுக்கும் , சீனாவுக்கும் , அரபு நாடுகளுக்கும் , ஆபிரிக் நாடுகளுக்கும் சிறீலங்காவில் கடை திறந்தேயிருக்கிறது. அமெரிக்கா , ஏற்கனவே பொருளாதார பிரச்சனையால் படுத்து விட்டது. எவரும் பார்ப்பது , தனது பை நிறைவதைத்தானே தவிர , தமிழ் பிரச்சனையை அல்ல.
சிறீமா காலத்தில் , அனைத்து வெளிநாட்டு இறக்குமதிகளை நிறுத்தி தன்னிறைவு கண்ட நாடு சிறீலங்கா. அனைத்து நாடுகளின் கடுப்புக்குள்ளும் , புலிகளை அடியோடு அழித்து பயங்கரவாதத்திலிருந்து வெற்றி கண்ட நாடு சிறீலங்கா. இனி எதையும் வெல்லும். அந்த துணிவுக்கு , புலத்து சிங்கள புத்தி ஜீவிகளது வழி நடத்தல்தான் காரணம்.
நம் புத்தி ஜீவிகள் இன்னும் செத்துப் போன வட்கோட்டை தீர்மானத்தைத் தூக்கிக் கொண்டு , தம் மடி நிறைக்கிறார்கள். நமக்கும், மோட சிங்களயாவுக்கும் இதுதான் வித்தியாசம். நம் , அறிவு ஜீவிகள் கொழுந்தாகிட்டார்கள். அவர்களோ கொழுந்து விட்டு இலையாகிட்டார்கள். இனியாவது சற்று சிந்திக்க முனைவோமா?