ஜப்பானிய பிரஜைகளும் கொழும்பில் இயங்கும் ஜப்பானிய நிறுவனத்தினரும் இணைந்து வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள முன்பள்ளிச் சிறுவர்களுக்கென 18 நடமாடும் நூலகங்களை வழங்குகிறார்கள்.
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் உதவியுடன் இந்த நடமாடும் நூலகங்கள் வழங்கப்படுகின்றன. நாளை (08) திங்கட்கிழமை இந்த நூலகங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படுவதாக ஜப்பானிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறியிடம் இந்த நூலகங்கள் கையளிக்கப்படும். ஜப்பானிய மக்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்த நூலகங்கள் கையளிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதைப் பற்றி ஜப்பானிய மக்கள் மத்தியில் கலந்துரையாடியதில் நடமாடும் நூலகம் வழங்கும் திட்டம் சிறப்பானதெனத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.