கண்டி பள்ளேகலயில் நடைபெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் மூன்றாவது நாளான நேற்று வரை சுமார் 20 இலட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனரென நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி சுதந்திர தினத்தன்று (4 ஆம் திகதி) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
60 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விளக்கும் சுமார் 1000 காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் முண்டியடித்து கண்காட்சியைப் பார்வையிடுகின்றனர். பாதுகாப்பு தொடர்பான காட்சிக் கூடங்களில் மக்களின் ஆர்வம் கூடுதலாக இருப்பதைக் காண முடிகிறது.
இதனையிட்டு கண்டி நகரிலிருந்து விசேட பஸ் சேவைகள் (24 மணி நேரமும்) நடத்தப்பட்டு வருகின்றன. இக் கண்காட்சி காலை 9 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும்.