ரஷ்யாவில் ஜனாதிபதிக்கு கலாநிதி பட்டம்

mr-rusya.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) ரஷ்யா போய்ச் சேர்ந்தார். ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக ரஷ்யா செல்லும் ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் நாளை (08) ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதேநேரம், 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கான இருதரப்புக் கடன் உடன்படிக்கையொன்றிலும் ஜனாதிபதி கைச்சாத்திடுகின்றார். இரு நாடுகளுக்கு மிடையிலான இரு தரப்பு உடன்படிக்கைகள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகக் கைச்சாத்திடப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜனாதிபதிக்கு ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தினால் நேற்று மாலை கெளரவ டொக்டர் பட்டம் வழங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. உலக சமாதானத்தைப் பேணி வருவதற்காகவும், பயங்கரவாதத்திற்கெதிரான வெற்றிகரமான செயற்பாட்டுக்காகவும் ஜனாதிபதிக்குக் கெளரவ டொக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வீ. லெவ்றோவ் விடுத்திருந்த அழைப்பினை ஏற்றே ஜனாதிபதி ராஜபக்ஷ ரஷ்யா சென்றிருக்கிறார். மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பங்குபற்றுமாறு ஜனாதிபதி திமித்றி மெத்வதேவின் சார்பிலேயே ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

1995 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு டொக்டர் பட்டங்களை வழங்கி வரும் இந்தப் பல்கலைக்கழகம் கல்வி, விஞ்ஞான துறைகளில் சிறந்த இலக்குகளை எய்தியோருக்கும் உலக சமாதானத்தைப் பேணி வரும் உலகத் தலைவர்களுக்கும் இதுவரை பட்டங்களை வழங்கியுள்ளது. இதுவரை உலகளாவிய ரீதியில் ஐந்து ஜனாதிபதிகளும் இரண்டு பிரதமர்களும் இந்தப் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு சிறப்பு டொக்டர் பட்டம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்குபற்றவென சுமார் 100 இற்கும் அதிகமான நாடுகளிலிருந்து 6000 இற்கும் அதிகமானோர் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

இன்று (07) பிற்பகல் மூன்று மணிக்கு பல்கலைக்கழகத்தின் தலைவரைச் சந்திக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ, மாலை 3.30 இற்கு மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெறும் சுதந்திரதினக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வார்.

நாளை (08) பிற்பகல் 2 மணிக்கு ரஷ்ய ஜனாதிபதி திமித்றி மெத்வதேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பார். அதேவேளை 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், சர்வதேச வர்த்தக, ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், கைத்தொழில் அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் ஜனாதிபதியுடன் ரஷ்யா சென்றுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Appu hammy
    Appu hammy

    This is not joke!! That”s 300m$ arms deal . GOOD LUCK LANKANS

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    சமாதானத்துக்கு டாக்டர் பட்டமும் $300 மில்லியனுக்கு ஆயுதமும்.

    Reply
  • Kulan
    Kulan

    கலாநிதியா? இதுவும் காசுகொடுத்து போஸ்ரில் எடுக்கும் சேட்டிபிக்கட்கள் மாதிரி இருக்கு. பெரிய பகிடி என்ன வென்றால் ஆயுதக்கொள்வனவின் போது சமாதானத்துக்கு கலாநிதிப்பட்டம். வேடிக்கை. ஆயுதமும் சமாதானமும் ஒன்றுக் கொன்று முரணானவை என்பதை யாவரும் அறிவர். இது ஏன் இரஸ்சியாவுக்குப் புரியவில்லை. ஆயுதத்தைக்காட்டி வைத்திருக்கும் சமாதானம் சமாதானம் அல்ல அடக்கு முறையே.

    Reply
  • palli
    palli

    அதுதான் மகிந்தா சொன்னாரே எல்லோரையும் அனைத்துதான் செல்வோம் என; அதனால் பல்கலைகழகம் கொடுக்கும் பட்டத்தையும் வேண்டிகொண்டு; அபடியே சோசலிஸ ஆயுத வியாபாரிகளையும் பார்த்து வாங்க வேண்டியதை வேண்டி கொண்டு வருவார் மகிந்தா அவர்கள்,
    நம்ம தலை கொடுக்காத பட்டமா?? பதவியா??

    Reply