இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றப்படுவதற்கு முன்னர் யுத்தத்தினால் சேதமடைந்த சகல அரச கட்டடங்களையும் புனரமைத்து மீள இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தகவல் தெரிவித்த அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களி லுள்ள அரச கட்டடங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம் பெறுவதுடன், பெரும்பாலான அரச அலுவலகங்கள் தற்போது இயங்குவதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மாவட்டங்களில் அரச நிறுவனங்கள் புனரமைக்கப்பட்டு தற்போது இயங்கி வருவதுடன் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் சேதமடைந்த அனைத்து அலுவலகங்களையும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.
யுத்தத்தினால் சேதமடைந்த வடக்கின் 5 மாவட்டங்களிலுமுள்ள அரச நிறுவனங்களை இயங்க வைப்பதற்கான செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. 180 நாள் அவசர புனரமைப்பு, இரண்டு வருட செயற்றிட்டம் என இரண்டு கட்டங்களாக இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
முதற்கட்டமான 180 நாள் வேலைத் திட்டம் நிறைவுற்றுள்ளதுடன், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் கணிசமான அரச அலுவலகங்கள் தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
இதன்படி மன்னாரில் 5 பிரதேச சபைப் பிரிவுகளில், முல்லைத்தீவில் 3 பிரதேச சபைப் பிரிவுகளில், கிளிநொச்சியில் 4 பிரதேச சபைப் பிரிவுகளில் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒரு பிரதேச சபைப் பிரிவில் அரச அலுவலகங்கள் தற்போது இயங்கி வருகின்றன.
இந்த 180 நாள் அவசர புனரமைப்புச் செயற்திட்டத்திற்கென 175 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன், 158 மில்லியன் ரூபா செலவிலான திட்டங்கள் முடிவ டைந்துள்ளன. ஏனையவை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் புனரமைப்புச் செய்து இயங்க வைக்கப்படுமென பொது நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விமலேந்திர ராஜா நேற்று தெரிவித்தார்.