இடம்பெயர்ந்துள்ள சுமார் 70 ஆயிரம் மக்களே மீளக்குடியமர்த்தப் படுவதற்காக எஞ்சியுள்ளனர் என்று மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியர்த்தும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள 70 ஆயிரம் மக்களும் வெகுவிரைவில் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பொருட்டு சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் வெகுவிரைவாக மேற்கொண்டு வருவதுடன் கண்ணிவெடி கள் அகற்றும் பணிகளும் துரிதப் படுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வட மாகாணத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். சுமார் 70 ஆயிரம் இடம்பெயர்ந்தவர்கள் மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளதாக தெரிவித்த அவர் செட்டிக்குளம் நலன்புரி நிலையத்தை தவிர சகல நலன்புரி முகாம்களும் மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் மூவாயிரம் பேர் அடுத்தவாரம் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். இந்த ளளளமக்களை மீளக்குடியமர்த்த தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி, துணுக்காய், தர்மபுரம் பகுதிகளில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பூநகரியில் கடந்த 2ம் திகதி 300 குடும்பங்களைச் சேர்ந்த 1232 பேரும், 3ம் திகதி மடு, விலாத்தி குளத்தைச் சேர்ந்த 49 குடும்பங்களும், 5ம் திகதி துணுக்காயில் 613 குடும்பங்களைச் சேர்ந்த 1500 பேரும் மாந்தை கிழக்கில் 7ம் திகதி 260 குடும்பத்தைச் சேர்ந்த 690 பேரும், மீளக்குடியமர்த்த ப்பட்டுள்ளனர் என்றார்.