இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் இலங்கைக்கு பல சாதகமான பிரதிபலன்களைப் பெற்றுத்தந்துள்ளதுடன் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவையும் பலப்படுத்தியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவின் விசேட அழைப்பினை ஏற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ரஷ்யா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாடு திரும்பினார்.
ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து வேகமாக கட்டியெழுப்பப்பட்டு வரும் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு 300 மில்லியன் டொலர் நிதியை இவ்விஜயத்தின் போது ரஷ்யா கடனுதவியாக வழங்க இணங்கியுள்ளது.
அத்துடன் இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிக்கு ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள மையும் இவ்விஜயத்தின் பாரிய வெற்றியாகும். இவ்வகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கு வதற்கு உலகின் பிரசித்திபெற்ற ரஷ்ய எரிவாயு நிறுவனமான ரஷ்ய கேஸ் ப்ரோம் நிறுவனம் முன்வந்துள்ளது.
இரண்டு நாடுகளுக்குமிடையில் ஊடகத்துறை சார் நவீன தொழில்நுட்பங்க ளைப் பரிமாறிக்கொள்வது தொடர்பில் விசேட ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள முடிந்துள்ளமையும் ஜனாதிபதியின் இவ் விஜயத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட பிரதிபலனாகும்.
இலங்கையின் நற்பெயரை சர்வதேச மெங்கும் தெரிவிக்கும் மற்றுமொரு நிகழ்வும் இவ்விஜயத்தின்போது இடம்பெற்றுள்ளது. ரஷ்ய நட்புறவுப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கலாநிதிப் பட்டம் வழங்கி கெளரவித்தமையே அந்நிகழ்வாகும்.
உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட சேவைகள், பயங்கரவாதத்தை ஒழித்து கல்வி, கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளின் மேம்பாட்டிற்காக முன்னெடுத்த பாரிய சேவைகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் மேற்படி கெளரவ பட்டத்தை வழங்கியுள்ளது. இப்பட்டத்தைச் சுவீகரித்துக்கொண்ட உலகின் ஆறாவது அரச தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது. இது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் கிடைத்த கெளரவமாகும்.
அதேவேளை, உலகிற்கு சமாதானத்தைப் பெற்றுக்கொடுத்த ரஷ்ய அரச பரம்பரையை நினைவுகூரும் வகையில் அதன் ஞாபகார்த்தமாக தங்கத்தினாலான மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கிரீடமொன்றை ரஷ்ய நட்புறவுப் பல்கலைக்கழகம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
ரஷ்ய – இலங்கை நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக இருநாட்டுத் தலைவர்களினதும் சந்திப்பைக் குறிப்பிட முடியும். இச்சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதிக்குத் தம் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி; இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவுடனான நல்லுறவை மேலும் பலப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விஜயத்தின் போது ரஷ்யாவின் வரலாற்று முக்கியத்துவமிக்க பல இடங்களை ஜனாதிபதி தலைமையிலான தூதுக் குழுவினர் பார்வையிட்டதுடன் ரஷ்யாவின் தேசபிதா லெனினின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.