சத்துணவு விஷமாகியதால் பத்து வயது பாடசாலை மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளதாக மாத்தளைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மேலும் 62 மாணவர்கள் மாத்தளை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவை உண்டதையடுத்து மாணவர்கள் மயக்கமுற்றதாகவும் சிலர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இறந்துபோன மாணவி மாத்தளை பலாபத்வெல புத்தகோஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் பத்து வயதுடைய தனஞ்சனி கமகே என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் பலாபத்வெல புத்தகோஸ தொம்பவெல, கவட்டயாமுனை ஆகிய மூன்று பாடசாலை மாணவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.