சமூகங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்க முயல்கின்றவர்கள் மீது பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மார்க் தெரிவித்தார்.
ஆரையம்பதி பிரதேசத்தின் சிகரம் கிராமத்திலுள்ள ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மார்க்; இக்கிராமத்தின் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தையின் சடலம் தோண்டப்பட்டு காணாமற்போயுள்ளது.
இதையடுத்து இக்கிராமத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பொறுமை கார்த்தது போன்று பொதுமக்கள் தொடர்ந்து பொறுமை காக்க வேண்டும். இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிஸார் தம்மாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்றார்.
இதேவேளை, ஆரையம்பதி சிகரம் கிராமத்திலுள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு காணாமற்போன விடயம் தொடர்பாக மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேர்திவத்த தெரிவித்தார்.
கடந்த 10.02.2010 புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரையில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது விடயத்தில் இன்னும் சில சந்தேகநபர்களை கைது செய்யவேண்டியுள்ளதாகவும் அச்சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.