ஜெனரல் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம்

sarath.jpgஇராணுவப் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் சார்பில் அவரின் மனைவி அனோமா பொன்சேகா தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணை பெப்ரவரி 23 இல் இடம்பெறுமெனத் தெரிவித்திருக்கிறது.

சித்திரவதை, பலவந்தமாக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைத்தல் என்பனவற்றிலிருந்து விடுவிக்கப்படுவதற்கான உரிமையை அடிப்படை உரிமைகள் மனுவானது நாடி நிற்கிறது.மனு மீதான விசாரணையின் ஆரம்பகட்டமான “விசாரணை செய்வதற்கான அனுமதியை பிரதம நீதியரசர் அசோக டி சில்வா மற்றும் இரு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய குழாம் வழங்கியுள்ளதாக பொன்சேகாவின் சட்டத்தரணிகளில் ஒருவர் தெரிவித்தார்.

இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டவேளை, நீதிமன்ற வளாகத்தைச் சூழ 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நீதிமன்ற வளாகத்திற்குள் செல்வோர் சோதனையிடப்பட்டனர். பாதிக்கப்பட்டவரால் இந்த மனுத் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவரின் மனைவியலேயே மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாதென்று அரசாங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி சமர்ப்பித்த ஆட்சேபனையை நீதிமன்றம் நிராகரித்ததுடன் பொன்சேகா சார்பல் அவரின் சட்டத்தரணிகள் முன்மொழிவுகளைச் சமர்ப்பில் அனுமதியளித்தது. நீதியரசர்கள் குழுவில் சிராணி பண்டாரநாயக்க மற்றும் சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஜெனரல் சரத் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மனுவைச் சமர்ப்பித்த அவரது மனைவியான அனோமா பொன்சேகாவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அகீஸ் உட்பட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

இது இவ்வாறிருக்க எதிர்க்கட்சிகளின் சார்பில் வழக்கினைப் பார்வையிட ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இடதுசாரி முன்னணித் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன, சுனில் ஹந்துன் நெத்தி, விஜேய ஹேரத் ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்; எமது அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை எமக்குக் கிடைத்துள்ள முதலாவது வெற்றியாகும். நீதி எங்கும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.தேர்தல் முடிவுக்கு எதிரான மனுவில் ஜெனரல் சரத் பொன்சேகா கையொப்பம் இடுவதற்கு சட்டத்தரணிகள் எந்நேரத்திலும் பார்வையிட அனுமதி கிடைத்துள்ளது. இதன் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உயர்நீதிமன்றம் மேற்கொண்ட தீர்மானத்தின் பின்னர் நீதிமன்ற வளாகத்திற்கு அப்பால் சட்ட உதவி ஆணைக்குழுவுக்கு முன்னால் உள்ள சந்தியிலிருந்து வாழைத்தோட்டப் பொலிஸ் சந்திவரை சட்டத்தரணிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி அமைதிப் பேரணியை நடத்தினர். இதில் இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதில் தேசிய சட்டத்தரணிகள், சங்கத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். இது இவ்வாறிருக்க, உயர் நீதிமன்றத்தின் விசாரணையைப் பார்வையிட உயர் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மகிந்த சமரசிங்க ஆகிய அமைச்சர்கள் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறும்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கூச்சல்களை எழுப்பினர். இதையடுத்து பொலிஸாரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்களும் அமைதி பேணுமாறு கோரியதையடுத்து அமைதி திரும்பியது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *