சத்துணவு நஞ்சாகி 10 வயது மாணவி பலியாகி 129 மாணவர்கள் சுகவீனமடைந்தது தொடர்பாக பாடசாலைக்கு உணவு வழங்கிய கொந்தராத்துக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை, பலாபக்வெல புத்தகோஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் சத்துணவு உட்கொண்ட மாணவர்களில் தனஞ்சனி கமகே என்ற 10 வயது மாணவி மரணமடைந்தார். மேலும், 129 மாணவர்கள் சுகவீனமடைந்து மாத்தளை ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டனர்.
கொந்தராத்துக்காரரால் பாடசாலை மாணவர்களுக்கென வழங்கப்பட்ட சத்துணவு நஞ்சாகியதாலேயே இந்த சம்பவம் நடத்திருக்கிறதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே கொந்தராத்துக்காரர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர். ஏனையவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவர்களையும் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென மாத்தளை ஆஸ்பத்திரி அத்தியட்சகர் டாக்டர் கே. டபிள்யூ. எஸ். குமாரவன்ச தெரிவித்தார். எவருக்கும் உயிராபத்தில்லை யெனவும் அவர் கூறினார்.
மேற்படி பாடசாலை உட்பட தொம்பவெல மற்றும் கவட்டயாமுன பாடசாலைகளில் கல்வி கற்கும் கீழ் பிரிவு மாணவர்களே மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
போஷாக்கு உணவாக வழங்கப்பட்ட நூடில்ஸ் முட்டை, சொதி என்பனவுடன் மாணவர்களின் வாந்தி மற்றும் மலம் என்பன மேலதிக ஆய்வுகளுக்காக உடனடியாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி கே. டப். எஸ். குமாரவன்ஸ மேலும் தெரிவிக்கின்றார். இது சம்பந்தமான பொலிஸ் விசாரணை மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி திலக் அபேசிரிவர்தனவின் பணிப்புரையின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜயம்பதா பண்டார மேற்கொண்டுள்ளார்.