போர்க்குற்ற விசாரணைக்கு ஐ.நா. மீண்டும் வலியுறுத்தல் தேசியமட்ட விசாரணையில் நம்பிக்கை இல்லை; நவநீதம்பிள்ளை

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுயாதீனமான சர்வதேசமட்ட விசாரணைக்கு ஐ.நா. மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறது.அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த தேசியமட்ட விசாரணைகள் இதுவரை உரிய இலக்குகளை எட்டவில்லை என்பதில் தனது அலுவலகம் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அளித்த உறுதிமொழிக்கு அமைவாக விடயங்கள் இடம்பெறுவது குறித்து பான் கீ மூன் தீவிர உறுதிப்பாட்டுடன் இருப்பதாகவும் நவநீதம்பிள்ளை கூறியதாக பி.பி.சி. செய்திச்சேவை தெரிவித்தது.ஜெனீவாவில் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவை அண்மையில் தான் சந்தித்ததையும் நவநீதம்பிள்ளை உறுதிப்படுத்தியுள்ளார்.

“தேர்தல் முடிவுறும் வரை ஒவ்வொருவரும் காத்திருந்ததாகத் தென்படுகிறது. ஆதலால் அதனை நான் அவருக்கு ஞாபகப்படுத்தியிருந்தேன் என்றும் நவநீதம்பிள்ளை தெரிவித்திருக்கிறார்.”மனித உரிமைகளுக்கான தனித்துவமான அமைச்சு அலுவலகத்தை இலங்கை கொண்டுள்ளது. மனித உரிமைகள் விவகார அமைச்சர் தனது அரசாங்கத்துடன் பேச வேண்டும் என்ற பொறுப்பு இருப்பதாகத் தான் நினைத்தேன். மோதலுக்குப் பின்னரான உரிமைகள்,வன்முறைகள் பற்றி மட்டுமல்லாமல் தேர்தலுக்குப் பின்னரான உரிமைகளுடன் தொடர்புடைய வன்முறைகள் பற்றிப் பேசவேண்டிய பொறுப்பு இருப்பதாக நான் கருதினேன்” என்றும் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க்குற்ற விவகாரத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உரிய முறையில் தீர்வு காணப்படவில்லை என்பது தொடர்பாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கும் நவநீதம்பிள்ளை மற்றொரு நாட்டின் உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கங்கள் நடவடிக்கையெடுப்பதற்கு இதுவொரு முக்கியமானதொன்று என்று கூறியுள்ளார்.

போர்க்குற்றங்களை நிராகரித்திருக்கும் அரசாங்கம் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் இடமளிக்கப் போவதில்லையெனக் கூறியுள்ளது.

அந்த மாதிரியான விசாரணைக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விசாரணைக்கான காரணம் எதுவும் இல்லை எனவும் கூறியிருந்தார். அதேவேளை, சர்வதேச விசாரணையில்தான் சாட்சியமளிப்பார் என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • NANTHA
    NANTHA

    ஜெனிவாவில் சீன, ரஷ்யா உதவிகளுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தோற்றுப்போனது நவநீதம் பிள்ளைக்கு இன்னமும் மாறாத துயரம். புலிகளின் பிரச்சார “தகவல்களை” அப்படியே” படித்த நவநீதம் பிள்ளை போன்றவர்கள், அந்த பதவியை வகிக்க என்ன தகுதி உள்ளது?

    Reply