யுத்தத்தின் இறுதிக் கட்டத்தைப்பற்றி கொழும்பிலுள்ள ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் பிழையான தகவலைப் பரப்புவதாக அரசாங்கம் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.”அது முற்றுமுழுதாக பிழையான தகவல்” என்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல டெய்லிமிரலுக்கு கூறியுள்ளார்.
கடந்த வருடம் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள்கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்று ஏ.பி.சி. செய்திச் சேவைக்கு தெரிவித்ததன் மூலம் சர்ச்சையை கோர்டன் வைஸ் கிளறிவிட்டிருக்கிறார்.
இந்த மாதிரியாக அதிக தொகையில் பொது மக்களின் மரணங்கள் சம்பவித்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் போதிய விபரங்கள் அந்தத் தருணத்திலும் அதற்கு பின்னரான மாதங்களிலும் வழங்கப்பட்டிருந்ததாக ஹுலுகல்ல கூறியுள்ளார்.பொதுமக்களை புலிகள் எவ்வாறு இம்சித்தனர் என்பது பற்றி ஒளிநாடா மூலம் பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கக்கூடியதாக இருந்தது. பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை நாம் எவ்வாறு உறுதிப்படுத்தினோம் என்பதையும் ஒளிநாடா மூலம் காண்பிக்கக் கூடியதாக இருந்தது எனவும் ஹுலுகல்ல கூறியுள்ளார்.
நம்பகமான வட்டாரங்களிலிருந்து தான் தகவலைப் பெற்றிருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் மோதல் வலயத்திற்குள் பிரசன்னமாகி இருந்தது என்றும் கோர்டன் வைஸ் கூறியிருந்தார். அத்துடன் அந்த வட்டாரங்கள் தமிழ் பொதுமக்களோ அல்லது மோதலில் ஈடுபட்டவர்களோ அல்ல என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த 8 மாதங்களில் எந்தவொரு அமைப்புகளும் இவ்விதம் தெரிவித்திருக்கவில்லை என்று ஹுலுகல்ல தெரிவித்திருக்கிறார்.
அந்தப் பகுதிகளுக்கு பல வெளிநாட்டு, உள்ளூர் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆதலால் இதில் ஏதாவது உண்மை இருந்தால் எவரும் இதனைப் பற்றி கதைப்பதற்கு 8 மாதங்கள் வரை காத்திருக்க முடியாது. எந்தவொரு அமைப்பிடமிருந்தும் எனக்கு இந்த மாதிரியான எந்தவொரு முறைப்பாடும் கிடைத்திருக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் வைஸ் தெரிவித்த சகலவற்றையும் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவும் நிராகரித்துள்ளார். கோர்டன் வைஸ் முன்னரும் இந்த மாதிரியான தவறான அறிக்கைகளை விடுத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதிரியான தவறான அறிக்கைகளை விடுத்த சிலரில் அவரும் ஒருவர். இவற்றை நாம் முழுமையாக நிராகரிக்கிறோம். நாட்டிற்கு வெளியே அனுப்பப்பட்ட சிலரில் அவரும் ஒருவர் என்று ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.