சத்துணவு நஞ்சாகி பத்து வயது மாணவி பலியாகி 129 மாணவர்கள் சுகவீனமடையக் காரணமாகவிருந்த, நேற்று கைதான ஒப்பந்தக்காரரையும் உதவியாளராக செயல்பட்ட பெண்மணியையும் மாத்தளை மாஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது ஒப்பந்தக்காரருக்கு இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் உதவியாளரான பெண்மணியை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
அத்துடன், இறந்து பத்து வயது பாடசாலை மாணவியின் மரண சடங்குகளின் செலவீனங்களுக்கென ரூபா 50,000 வழங்கும்படியும் சந்தேக நபர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார். மேற்படி இருவரும் இன்று மாத்தளை நீதிமன்றில் மீண்டும் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
இதேவேளை, சத்துணவு நஞ்சாகியமை தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சாந்தி சமரசிங்க தலைமையில் இன்று ஆரம்பமாகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுள் நேற்று பகல் வேளை வரையும் 30 மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.